பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உடல் பருமன் பிரச்சினை
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உடல் பருமன் பிரச்சினை முக்கியமானது. உடல் எடை அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
உடல் பருமனுக்கு தூக்கமின்மையும் முக்கிய காரணமாகும். தூக்கமின்மை காரணமாக மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்படும். உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாடு களிலும் மாற்றங்கள் உருவாகும். குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக வெளிப்படும். மன அழுத்தமும் உடல் நலனை பாதிக்கும். ஆதலால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றுக்கு பெண்கள் பிரசவத்திற்கு பின்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்கள் குழந்தையை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் தங்கள் உடல் நலன் மீது போதுமான அக்கறை கொள்வதில்லை. அதனால் சோர்வு, தூக்கமின்மை தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி விடும். அதன் காரணமாக கூடுதல் மன அழுத்தம் உண்டாவதோடு தாய்மார்களின் ஆரோக்கியத்திலும் கடும் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும்.
கர்ப்பிணி பெண்களின் உடல் எடை அதிகரிக்கும்போது கொழுப்பின் அளவும் கூடும். குழந்தையை பராமரிப்பதற்கு மத்தியில் தூக்கத்திற்கும், உடற்பயிற்சிக்கும் போதுமான நேரம் ஒதுக்குவது எளிதான விஷயம் அல்ல. குழந்தையை கவனிப்பதற்கு மத்தியில் தாய்மார்கள் தங்கள் உடல் நலம் பற்றி சிந்திப்பதும் கடினமானது. குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி பேணுவதற்கும், தூங்கவைப்பதற்குமே நேரம் சரியாக இருக்கும். அதற்குள் சோர்வு உண்டாகி தாய்மார் களின் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
பிரசவத்திற்கு பின்பு 5 முதல் 10 சதவீத பெண்கள் சினைப்பை கட்டி பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் இந்த பாதிப்பு நேருகிறது. இதன் காரணமாக உடல் எடையை குறைப்பது கடினமாகிவிடும். அதனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியும் ஏற்படுகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கு மன ரீதியாக தயாராக இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. குழந்தை பிறந்த ஆறு மாதம் வரை மூட்டுகள் மற்றும் தசை நார்கள் பாதிக்கப்படும். முதுகுவலி பிரச்சினையும் ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் வயிற்று தசைகளும் விரி வடைந்துவிடும். ஆனால் அவை குழந்தை பிறந்ததும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கும். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமான உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உடல் பருமனாகிவிடும்.
பிரசவத்தால் பெண்கள் அதிகம் சோர்ந்து போவார்கள். அதில் இருந்து மீள்வதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்களாவது ஆகும். உடல் மீண்டும் வடிவம் பெறுவதற்கு மன ஆரோக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. முறையான உடற்பயிற்சி மூலம் உடல் பருமனை குறைக்கலாம்.