நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம்
மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. இந்த எண்ணங்கள் நமக்கானதாக மட்டுமே இல்லாமல் பிறரை சார்ந்தும் அமைகிறது. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு. வெட்கத்திற்கு அஞ்சி எருமை மாட்டை சாக கொடுத்தானாம் என்று. பிறரின் எண்ணங்களுக்காகவே பயந்து வாழும் மனிதர்கள் ஒரு வகை. அடுத்தவர் முன்பு தன் மேதாவித் தனத்தை காட்டும் மனிதர்கள் மற்றொரு வகை. எண்ணங்களே செயலை தீர்மானிக்கின்றன.
எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் எண்ணம் போல வாழ்வு என்றும், எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகளாகவே கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த எண்ணங்களை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலேயே வாழ்வின் சூட்சுமம் அடங்கி உள்ளது. நல்லதையே நினைக்க வேண்டும் என்பதாக பாட்டிகள் நம் வீட்டில் அடிக்கடி கூறுவதுண்டு.
நல்லா இருக்கீங்களா…என்ற கேள்வியின் எதிர்வினை பதிலை வைத்து மனிதர்களை இனம் காணலாம். நல்லா இருக்கேன் என்ற பதில் தருபவர்கள் நேர்மறை எண்ணங்களை உடையவர்களாகவும், ஏதோ இருக்கேன் என்ற பதிலை உடையவர்கள் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களாகவும் அறிந்து கொள்ளலாம். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதும் இதனால் தான். உனக்குள்ளே எல்லா ஆற்றல்களும் அடங்கியுள்ளது. நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய். ஒவ்வொரு நாளும் தூங்க செல்வதற்கு முன்பு அன்றைய நாளில் நடந்த நல்லவற்றை பட்டியலிடுங்கள்.
நான் எல்லா வகையிலும் முன்பை விட சிறந்து வருவதை உணர்கிறேன் என்று மனதிற்குள் கூறும்போது அந்த எண்ணங்கள் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை உணர முடியும். அதேபோன்றே இன்று புதிதாய் பிறந்தோம் என்னும் எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு இந்த நாள் என்வெற்றிக்கான நாளாகும் என்ற நல்ல சிந்தனையை மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
எனவே தான் நமக்கான நல்ல எண்ணங்களை நாமே தான் உருவாக்கிட வேண்டும். நம்மை ஊக்கப்படுத்தி முன்னேற்றுபவை நம்மிடம் உள்ள எண்ணங்களே. ஆக்கப்பூர்வமான எண்ணங்களை அதிகப்படுத்துதலே வெற்றிக்கான வழியாகும். அகத்தில் தேவையற்ற குப்பைகளை தவிர்த்தாலே முகத்தில் புன்னகை வந்து விடும். ஒவ்வொரு நாளும் நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாக தான் இருக்கிறோம். அப்படியானால் நம் எண்ணங்களும் அதை பற்றியதாகவே இருக்க வேண்டும். நம் இலக்குகளை பற்றிய எண்ணங்களை சுற்றி சுற்றி ஓட விடுங்கள்.
எண்ணங்களுக்கு ஆதரவாய் இருப்பது அடுத்தவர்கள் அல்ல.. ஆழ்மனம் தான். எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா… என்னும் பாரதியின் நேர் மறை சிந்தனையே எண்ணங்களை வலுவாக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்தலும், எதையும் இலகுவாக கடந்து விடும் பக்குவமும் வந்து விட்டாலே வாழ்க்கையை அழகாக வாழ்ந்திடலாம். நல்ல எண்ணங்களை கொண்ட மனிதர்களாக வாழ்வோம். எனவே நல்ல எண்ணங்களால் வாழ்வை வசந்தமாக்கலாம். எண்ணமது திண்ணமானால் வாழ்க்கையது வண்ணமாகும். எண்ணங்களை வசமாக்கி சிறப்பாக வாழ்வோம்.