எடிட்டர் சாய்ஸ்புதியவை

முழு முயற்சியே வெற்றிக்கு வழி

எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம். ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்து பார்க்க உதவும். நமக்குப் பாடம் கற்பிக்கும். எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்ச்சி இருக்காது. அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.



ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய் பலதரப்பட்ட மக்களை சந்திக்க முடிகிறது, பேச முடிகிறது, பழக முடிகிறது. மக்களை சந்தித்து பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியை புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் சோர்வடையாது. ஏமாற்றம் அடையாது. மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.



ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காக காத்திருப்பதில்லை. எனவே முயற்சியின் இறுதியில் ஏற்பட போகும் முடிவை நினைத்து பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே வெற்றிகரமாக மாறிவிடும்.



முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள் மன அமைதியை குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி, ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாக புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஒரு சிந்தனையாளர் கூறினார், மன மகிழ்வின் ரகசியம் என்ன விரும்புகிறோமோ அதை செய்வதில் இல்லை. எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker