தாய்மை-குழந்தை பராமரிப்பு

உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுகிறீர்களா? அப்ப இதை படிங்க

உலக சுகாதார நிறுவனம் குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டப்பட வேண்டும் என்றும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பாலுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களும் தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி 20.6 விழுக்காடு குழந்தைகளுக்கு மட்டுமே ஆறு மாதங்கள் வரைக்கும் தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது என்றும் ஓராண்டு வரைக்கும் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 14 விழுக்காடாகும் என்றும் 9 விழுக்காடு குழந்தைகள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் வரைக்கும் தாய்ப்பால் அருந்துகின்றன என்றும் தெரிய வந்துள்ளது.



கிராமப்புற தாய்மார்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் அதிகமானோர் அலுவலக வேலைக்குச் செல்கின்றனர். அரசு வேலையை செய்பவர்களைப் போல் அல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு மாதம் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதற்குப் பின்னர் அவர்கள் பணிக்குத் திரும்பியாகவேண்டும். இதுபோன்ற சூழ்நிலை நகர்ப்புற பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதை கைவிட்டுவிட காரணமாகிறது.

ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் ஊட்டப்படும் குழந்தை, மற்ற குழந்தைகளைக் காட்டிலும் புத்திக்கூர்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது. தாய்ப்பாலில் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பலபடித்தான பாலிபூரிதமல்லாத கொழுப்பு அமிலங்கள் நீண்ட சங்கிலியாக காணப்படுகின்றன. இது ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். ஆகவே, தாய்ப்பாலருந்தும் குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.



தாய்ப்பால் ஊட்டுவதால், குழந்தை வீட்டில் மற்றவர்களைக் காட்டிலும் தாயிடம் அதிக நெருக்கமாக இருக்கும். வேறு யாருடனும் குழந்தைக்கு உடல்ரீதியான நெருக்கம் அதிக அளவில் இருப்பதில்லை. ஆகவே, தாய்ப்பால் அறிவுடன் அன்பையும் சேர்த்தே குழந்தைக்கு ஊட்டுகிறது.

பாலூட்டும் தாய், ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வேளை குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். அப்படி பாலூட்டவில்லையென்றால், பால் கட்டுவதால் அதிக வலி ஏற்படும்.
கடந்த 2015ம் ஆண்டு தமிழக அரசு பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் பேருந்து நிலையங்களில் தாய்ப்பாலூட்டுவதற்கு பிரத்யேக அறைகளை ஒதுக்கியது.

பல பேருந்து நிலையங்களில் இவை சரியாக பயன்படுத்தப்டாமல் உள்ளன. சில பேருந்து நிலையங்களில் இவை 12 மணி நேரம் மட்டுமே திறந்துள்ளன. பேருந்து நிலையங்களில் இரவும் பகலும் பேருந்துகள் வந்து சென்று கொண்டிருப்பதால் அறைகள் முழு நேரமும் திறந்திருந்தால்தான் பயனளிக்கும். பல பேருந்து நிலையங்களில் இந்த அறைகள் சரியாக பராமரிக்க்ப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அநேக தாய்மார்கள் இந்த அறைகளில் போதுமான மறைவிடங்கள் இல்லை என்றும் கண்காணிப்பு காமிரா போன்றவை இருக்கக்கூடும் என்று பல்வேறு தயக்கங்களினால் பயன்படுத்தாமல் உள்ளனர்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker