தொடர் பணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது எப்படி?
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன. இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறையினர் தொடர் பணிகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மன அழுத்தம் பொது இடத்தில் வெளிப்படும் சூழல் உருவாகி வருகிறது. இதே போன்று வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மன அழுத்தத்தை எப்படி கண்டறிவது, அதனால் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கு தீர்வு என்ன? என்பது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த மனநல டாக்டர் எஸ்.சிவசைலம் விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-
கொரோனா பேரிடரில் உலகம் முழுவதும் சுமார் 400 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது அன்றாட வாழ்க்கையில் இருந்து முடங்கி போய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம். ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள கட்டுப்பாடுகள் பல்வேறு மனஉளவியல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் ஒருபுதுவித சூழல் ஏற்பட்டு உள்ளது. நான்கு சுவருக்குள் நாம் வாழ்கிறோம். நமது நண்பர்கள், உறவினர்களை நேரில் காணமுடியவில்லை. நாளை என்ன நடக்க போகிறது? என்ற அச்சம் நம்மை ஆட்கொள்கிறது. நமது பெரும்பான்மையான நேரத்தை தற்போது சமூகவலைதளங்களில் செலவிடுகிறோம். அதில் வருகிற தகவல்கள் பெரும்பாலும், உறுதிபடுத்தப்படாத தன்மை கொண்டவை. பொய்யாக பரப்பப்படும் அந்த தகவல்களை நாம் உள்வாங்கி கொள்கிறோம். அதனால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களால் நமக்கு மனபதற்றம் ஏற்படுகிறது.
இதனால் நம்மை சுற்றி யாராவது இருமினாலோ, தும்மினாலோ நமக்கு கொரோனா வந்து விடுமோ? என்ற பயம் ஏற்படும். ஒரு சிலர் நமக்கு இந்த நோய் இருக்கிறது என்று தீர்மானமாக ஆழ்மனதில் உருவாகி, நாம் இறந்த பிறகு குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று கவலைப்படுவார்கள். கைகளை கழுவி சுத்தமாக இருக்கும்படி உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறுகிறது. வேறு சிலர் தங்கள் கையில் நோய் கிருமி ஒட்டிக்கொண்டதாக எண்ணிக் கொண்டே கையை பலமுறை சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்.
நமது அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. வீட்டிலேயே இருப்பதால் இரவு தூக்கம் சரியாக வருவது இல்லை. தேவையற்ற எரிச்சல், கோபம் ஏற்படுகிறது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தாய்மார்கள் மிகுந்த மனஅழுத்தம் அடைகிறார்கள். காலையில் இருந்து இரவு வரை அவர்களுக்கு தேவையான உணவு சமைப்பதில் இருந்து, அவர்களை கவனித்துக் கொள்வது வரை மனரீதியான நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.
மருத்துவத்துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறை, தூய்மை பணியாளர்கள் நிலை மிகவும் பரிதாபம். இந்த கடுமையான கோடை வெப்பம் ஒருபுறம், இரவு பகலாக தொடர் பணிகளால் ஏற்படும் மன அழுத்தம் மறுபுறம். இதற்கிடையே, அவர்கள் சரியான ஓய்வு, நல்ல உணவு இல்லாமல் மிகுந்த மன அழுத்தம் அடைகிறார்கள்.
இந்த மன அழுத்தத்தின் உச்சகட்டத்தில் நமக்கு வாழ்க்கையின் மீதே ஒரு வித சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. நமக்கு ஆதரவாக, துணை யாரும் இல்லை என்ற எண்ணம் நம்மை வருத்தமடைய செய்கிறது.
தவிர்ப்பது எப்படி?
இத்தகைய மன அழுத்தத்தை தவிர்க்க நாம் இன்றைய சூழ்நிலையை நன்றாக புரிந்து கொள்வது அவசியம். இந்த நெருக்கடியான தருணத்தை நாம் சிறிது காலம் அனுபவித்துதான் தீரவேண்டும் என்பதை உணர வேண்டும். இது தற்காலிக நெருக்கடி. இது கடந்து விடும் என்று நமது மனதை திடப்படுத்தி கொள்ள வேண்டும். நமது தாங்கும் மனசக்தியை அதிகப்படுத்திக் கொள்வது அவசியம். இதைப்பற்றிய சிந்தனையை விடுத்து நமது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவது, தியானம், மூச்சுப்பயிற்சி, யோகாசனங்கள் செய்யலாம். உடற்பயிற்சிகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
தொலைக்காட்சியில் நல்ல பாடல்கள், திரைப்படங்கள், நகைச்சுவை காட்சிகளை ரசிக்கலாம். சமூக வலைதளங்களில் கொரோனா செய்திகளை தவிர்க்கலாம். உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ள கொரோனா தொற்று நோயில் இருந்து 80 சதவீதம் நோயாளிகள் குணமடைகிறார்கள் என்ற நம்பிக்கையூட்டும் தகவலை எடுத்துக் கொள்ளலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். கொரோனா பரவலில் பணிபுரியும் அரசு துறையினர் தினமும் காலை பணிக்கு செல்லும் முன்பு சிறிது தியான பயிற்சி செய்யலாம். மனதை அமைதிபடுத்தும் வேலைகளில் ஈடுபடுவதால் பணியில் மன நெருக்கடி குறையும். பாதுகாப்பு விஷயத்தில் முழு கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன பதற்றம் அடைய வேண்டாம்.
பணி முடித்து வீடு திரும்பியவுடன் நன்றாக குளித்து, சுத்தம் செய்து ஆடைகளை துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும். சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை அதிக அளவில் பருகுவது அவசியம். இரவு நல்ல உறக்கம், ஓய்வு, மன அமைதியுடன் இருந்தால் நமது பணியில் சிறந்து விளங்குவதுடன், கொரோனா பேரிடரில் இருந்து இந்த சமூகத்தை நாம் காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு கூறி உள்ளார்.