அடிக்காமல் குழந்தையை திருத்த முடியுமா?
குழந்தைகள் விஷயத்தில் அடிப்பது சரியா? அடித்தால் குழந்தைகளை சரிசெய்து விட முடியுமா? இதுவரை நீங்கள் நினைத்திருந்தது தவறு. ஏன் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோர், ஆசிரியர், வீட்டில் உள்ள பெரியவர் யாராக இருந்தாலும் குழந்தையை அடிப்பது என்பது குற்றம்.
நாம் குழந்தைகள் நம் சொத்தாக, நம் உரிமையாகப் பார்க்கிறோம். உண்மையில், அவர்கள் நம் மூலம் வந்திருக்கிறார்கள். ஆனால், நம்மை போல அவர்களின் இயல்பு, சுபாவம், கனவு, ஒழுக்கம், நடவடிக்கை எல்லாம் ஒரேபோல இருக்கும் என எதிர்பார்ப்பது சரியல்ல.
அன்பு ஒன்றே மிகப் பெரிய ஆயுதம். அதை தீட்டிக் கொள்ளுங்கள் போதும். அன்புக்கும் செல்லத்துக்கும் வித்தியாசம் உண்டு. அன்பு, குழந்தைகளைப் பண்பானவர்களாக மாற்றும். செல்லம் கொடுப்பது, குழந்தைகளைக் கெடுக்கும். இந்த வித்தியாசம் புரியட்டும். ‘எங்கம்மாவ கேட்காம நான் இதை செய்ய மாட்டேன்’. அன்பால் வளர்க்கும் பிள்ளை சொல்வது. ‘இதை எனக்கு கொடுத்து விடு, இது எனக்கே சொந்தம்’… செல்லத்தால் வளரும் பிள்ளை சொல்வது.
இரண்டும் இருவேறு குணங்களைத் தரும். அம்மாவோ அப்பாவோ தன் கண் அசைவால் கோபத்தை தெரிவித்துகூட குழந்தையை திருத்தி விட முடியும். இந்த வளர்ப்பு முறையை மிக சிறந்த முறை. இதற்கு புரிதலும் பெருந்தன்மையும் பெற்றோருக்கு வேண்டும். செம அடியை அடிக்கும் பெற்றோரின் குழந்தைகளுக்கு கண் அசைவும் புரியாது நீங்கள் வாய் வலிக்க கத்தினாலும் கேட்காது.
சென்சிடீவ்வான குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், முடியாத காரியம் அல்ல. முயன்றால் அன்பால் அரவணைப்பால் பெற்றோரின் பண்பால் நிச்சயம் குழந்தைகளை நல்வழிப்படுத்த முடியும். இதற்கு முதலாக நீங்கள் பண்பானவர்களாக மாறிக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக மாறிவிடுங்கள். பின் எல்லாம் சுபமே.