தாய்மை-குழந்தை பராமரிப்பு

‘பார்வை போதைக்கு’ அடிமையாகும் குழந்தைகள்

சமீபத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் பணி நிறைவு விழாவிற்கு சென்றிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு குழந்தை அழத் தொடங்கியது. ஆனால், அழ ஆரம்பித்து ஓரிரு கணங்களில் அந்த குழந்தை அமைதியானது. அது மேடையில் அமர்ந்திருந்த என் கவனத்தை மட்டுமல்லாமல் கூட்டத்தில் இருந்த எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது.

அந்த குழந்தையின் தந்தை அவருடையை அலைபேசியின் தொடுதிரையில் ஓரிரு இடங்களைத் தொட்டு குழந்தையிடம் கொடுத்தவுடன் குழந்தை மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒலிபெருக்கியை போல ஒரே கணத்தில் அமைதியானது. குழந்தையை அமைதிப்படுத்தும் அந்த ‘டிஜிட்டல் போதை’ மருந்தாகிய அலைபேசி, நமக்குத் தெரிந்த கஞ்சா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் அடிமை உணர்வுக்கு சமமானது என்பது தெரியாமலே, இதுபோல் எத்தனையோ பெற்றோர்கள் செய்கிறார்கள். ஆராய்ச்சி மூலம் அலைபேசியின் தொடுதிரை வெளிச்சமும், மேற்சொன்ன போதை வஸ்துகள் தாக்கும் இடமும் மூளையில் ஒரே இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது.



இன்று செல்போன்கள், பெற்றோர்களின் அன்பும், உடன்பிறந்தோர் பாசமும், தாத்தா பாட்டிகளின் அனுபவங்களும், ஒருவருடைய வளர்ச்சியில் கொண்டிருந்த இடத்தை பிடித்துள்ளது என்பது யதார்த்தமான உண்மை. இணையத்தை பயன்படுத்த தெரியாத வயதில் உள்ள குழந்தைகள் கூட செல்போனில் வரும் பல்வேறு விதமான காணொலிகளை பார்த்து ‘பார்வை போதைக்கு’ அடிமையாகின்றனர். பெற்றோர்களும், பெரியோர்களும் தாங்கள் விரும்பும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கவிரும்பும் நோக்கில் குழந்தைகள் சின்னத்திரையான அலைபேசி திரையில் மெய்மறந்து போவதை பற்றி பெரிதாக கவலை கொள்வதாக தெரியவில்லை.



இதன் விளைவாக திறன் பேசிகளில் அதிகநேரம் செலவிடும் குழந்தைகள் பதற்றம் நிறைந்த குழந்தைகளாகவும், சமூக திறமைகள் குறைந்தவர்களாகவும், பாசத்தை பரிமாறவும், பழக்கத்தை ஏற்படுத்தவும் தெரியாதவர்களாக வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள், செல்போன்கள் மூலமாக இணையதள வலையில் சிக்கிய மீன்களாக மாட்டிக் கொள்வது மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களை பார்க்காவிட்டால் எதையோ இழந்த உணர்வுடன் ‘போமோ’ என்ற நோய்க்கு அடிமையாகின்றனர். அவ்வப்போது சமூக வலைத்தளங்களை பாாக்காவிட்டால் எதையோ வாழ்க்கையில் இழந்துவிட்டது போன்ற உணர்வோடு பதற்றத்தை ஏற்படுத்தும் நோய் இன்று, வயது வேறுபாடு இன்றி பரவிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால், சில நேரம் வாழ்க்கையில் நிதானமாக செல்லாமல், வேகமாக பயணிப்பதும், தேவையில்லாத விசயங்களை தெரிந்து கொள்வதற்கு முயற்சிசெய்து அதன்மூலம் பதற்றத்தை அதிகரித்து, அமைதியை அலைக்கழிப்பதும் தேவையற்ற ஒன்று.



எது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பதும், எது தேவையற்ற விஷயம் என்பதையும் முடிவு செய்து, குழந்தைகளுக்கு வழிகாட்டுவதும் பெரியோர்களின் கடமையாகும். எப்படி, கடலில் மீன்பிடிக்கும் போது ஒரு சில வலைகள் பெரியமீன், சின்னமீன் என்ற பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்தமாக கொண்டு வருகிறதோ, அதைப்போல் இணையதளம் குழந்தை, பெரியவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் ஒருசேர தன் மாய வலைக்குள் பின்னிப் போட்டுள்ளது.

சமூக நிறுவனங்களாகிய குடும்பங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களாகிய திருவிழாக்கள், பேருந்து பயணங்கள் மற்றும் ரெயில் பயணங்களின் போது, மக்கள் தங்களுக்குள் பேசுவது குறைத்துக் கொண்டு தனக்குத் தானே பேசிக்கொள்ள கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடர், தொடர்ந்து வரும் இடர் காட்சிகள் என்பதை மறந்து வீட்டில் வேலையற்று இருப்போரும், வேலை முடித்து பொழுதுபோக்கு என ஆரம்பித்து, பொழுது போகிறதோ இல்லையோ, ஆனால் “‘பொழுதுபோக்குப் போதைக்கு” அடிமையாகிறவர்களும்; குடும்ப உறவுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து குழந்தைகளின் பழக்க வழக்கங்கள் முழுமையாக டிஜிட்டல் உலகைச் சார்ந்து மாறிவருகிறது. மேலும், செல்போன்களின் இயல்பான கதிரியக்கம் மற்றும் சூடாகும்போது ஏற்படும் அதிகப்படியான கதிரியக்கம், கண்களுக்கு திரை ஒளியால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றின் பாதிப்புகள் என்னென்ன என்பதை அறுதியிட்டுக் கூறுவதற்கு ஆராய்ச்சிகள் முழுமையாக இல்லாத சூழலில், முடிந்த வரை அவற்றின் பயன்பாட்டை முறைபடுத்துவது அவசியம். கருவுற்ற தாய்மார்களும், குழந்தை பெற்ற பெண்களும் உளவியல் ரீதியாக பிரச்சினைகளை சந்திக்கும்போது, தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பில்லாமல்; அவர்கள் செல்போன்களுக்கு அடிமையாவது இயல்பாக நடக்கிறது.



பாலூட்டும் தாய்மார்கள் பொழுதுபோகாமல் தவிக்கும்போது செல்போன்களை பயன்படுத்துவது, குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், குழந்தைகள் வளரும்போது அலைபேசியை பயன்படுத்துவது அனைவருக்கும் இயல்பானது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்வதற்கு வழிவகுக்கிறது. மேலும் “உள்முக ஆளுமை” குழந்தைகள் உருவாவதற்கும், அந்த ஆளுமையைத் தீவிரப்படுத்துவதிலும் செல்போன் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதனால் குழந்தைகள் சமூகத் திறமைகள் மற்றும் குழு திறமைகளை வளர்த்துக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

ஒருசில பெற்றோர்கள் இதன் தீவிரத்தை அறிந்திருந்தும் அதை எப்படி கையாள்வது என்று தெரியாமல் தவிப்பதை உணர முடிகிறது. செல்போன்கள் தவிர்க்க முடியாத அளவுக்கு நம் வாழ்வில் ஊடுருவி விட்டதால் வரையறுக்கப்பட்ட திரைநேரம் குழந்தைகளுக்கு நிர்ணயித்து அதன் அளவுமிகாமல் பார்த்துக்கொள்வது அவசியம். திரைநேரம் என்பது தொடுதிரை, கணிணி திரை மற்றும் தொலைக்காட்சி திரையையும் உள்ளடக்கியது. வரையறுக்கப்பட்ட திரைநேரத்தை அவர்களுக்கு வழங்கும் போது, பாதி நேரம் பாாப்பதற்கும், மீதி நேரம் அறிவுப்பூர்வமான விஷயங்களை பார்த்ததை செயல்படுத்துவதற்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.



இன்று கொரோனாவின் கோர தாண்டவத்தால் குழந்தைகளும், பெரியவர்களும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் இன்னும் திரைநேரம் அதிகமாக வாய்ப்புள்ள நிலையில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

அதுபோல் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தி அதை வளர்ப்பதற்கு வாய்ப்பு கொடுப்பது அவசியம். பதற்றமில்லாத வகையில் குழந்தைகள் தங்களுடைய மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்து கொள்ள வேண்டியது முக்கியம். அதற்கு பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய சிறு சிறு அசவுகரியங்களை தாங்கி, ஆசைகளை குறைத்து அல்லது நேர்படுத்தி குழந்தைகளின் ஆர்வத்தோடு ஒன்றிணைத்து ஒன்றாக சேர்ந்து செய்யும் செயல்களை அதிகப்படுத்துவது அவசியம். இது பெற்றோர்களின் கடமை மட்டுமல்லாமல் காலத்தின் கட்டாயமும் கூடவே.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker