சிசுவின் ஆரோக்கியத்திற்கு கர்ப்பிணிகள் எதையெல்லாம் செய்யக் கூடாது?
வயிற்றில் குழந்தையுடன் மிகவும் ஆவலாக எதிர்நோக்கி காத்திருப்பீர்கள். நீங்கள் நல்லவையை செய்து ஆரோக்கியமாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியமுடன் பிறக்கும். கர்ப்பக் கால விதிகள் என சில விதிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டால் உங்களது கர்ப்பக் கால பயணம் இன்னும் சிறப்புடையதாக அமையும்.
தவிர்க்க வேண்டியவை
எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். திறந்த வெளியில் கர்ப்பிணிகள் படுத்துத் தூங்க கூடாது. அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் வெளியில் செல்ல கூடாது. மூளை வளர்ச்சி பாதிப்புகள் ஏற்படலாம். கருவுற்ற 10-16 வது வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
மசக்கையைத் தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்க்கலாம். அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், அதிக எடை சுமப்பது, இறுக்கமான ஆடைகள் அணிவது, நீண்ட நேரம் கண் விழிப்பது, பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது போன்றவை செய்ய கூடாது. தூங்கி கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம் போட்டோ பயமுறுத்தியோ எழுப்ப கூடாது. வேக்சிங் செய்ய கூடாது.
பகலில் தூங்க கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் வந்து விடும். சிறுநீரை அடக்க கூடாது. அடக்குவதால் சிறுநீரக கற்கள், சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும். உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும்படி பலமாக நடப்பது ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
வாகனங்களில் பயணம் செய்வது, சமநிலையில்லாத சேர், ஆசனங்களில் உட்கார்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவை செய்ய கூடாது. பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், சம்பங்கள், செய்திகள் ஆகியவற்றைப் பார்க்க கூடாது. கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் மரபணு மூலமாக குழந்தையைத் தாக்கலாம். காதில் ஹேர் பின் போன்ற பொருட்களை நுழைப்பது போன்ற செயல்கள் கூடாது.
செய்ய வேண்டியவை
வெள்ளை, இளஞ்சிவப்பு போன்ற மைல்டான நிறங்களில் உடைகளை அணியலாம். அடர்நிறங்களைத் தவிர்க்கலாம். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக குளியல் சூரணம், நீராட்டுச் சூரணம் ஆகியவற்றைக் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இதனால் உடல் சுத்தமாகும். பிறப்புறுப்பு, மார்பக பகுதிகளில் கிருமிகள் உண்டாவது தடுக்கப்படும். கர்ப்பமும் பாதுகாக்கப்படும். அமாவாசை, பௌர்ணமி, கிரகண நாட்களில் வீட்டில் தூங்கி ஓய்வு எடுக்கலாம்.
உணவில் சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய், இந்துப்பு ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பக் கால முதல் ஆறு மாதங்கள் வரை பால், வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். உயரம் குறைவான கட்டில் மெத்தையில் படுக்கலாம். குங்குமப்பூவை லேசாக வறுத்து, பொடித்துக் காய்ச்சிய பசும்பாலில் குடித்து வர இரும்புச்சத்து கிடைக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது.
உலர்திராட்சை, ஆல்பகோடா, மாதுளை, நெல்லி வற்றல், நாரத்தை, எலுமிச்சை ஆகியவற்றைப் பயன்படுத்தி மசக்கையைத் தடுக்கலாம். வாந்தி வந்தால் வாந்தி எடுப்பது நல்லது. மாத்திரையால் தடுக்க முயன்றால் குடல் பாதிப்புகள் ஏற்படலாம். தளர்வான ஆடைகளை அணியலாம். வெயில் காலங்களில் மட்டும் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த பகலில் 2 மணி நேரம் வரை தூங்கலாம். இரவில் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி, மாதம் ஒரு முறை என ஆறாம் மாதம் வரை தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இளஞ்சூடான வெந்நீரில் தினமும் குளிக்கலாம். வாரம் இருமுறை தலைக்கு குளிக்கலாம். வெயில் காலங்களில் தினந்தோறும் அல்லது வாரம் 4 முறை குளிக்கலாம். ஈரத்தை நன்கு துவட்டி விட வேண்டும். சைனஸ், தலைவலி வருபவர்கள் தவிர்க்கலாம். குளிக்கும் நீரில் நொச்சி இலை, வேம்பு இலை, புளி இலை ஆகியவை போட்டுக் குளித்தால் நுண்கிருமிகள் அண்டாது.
கர்ப்பிணிகளின் வயிற்றில் குழந்தை வளர வளர வயிற்றுத் தசைகள் தளர்ந்து, கூபக தசைகள் மற்றும் இடுப்பு தசைகளில் இறுக்கம் ஏற்படுவதால் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும்.
சுத்தமான, ஆர்கானிக் ரோஜா பூ இதழ்களை கழுவி 2 நாட்கள், வெயிலில் காய வைத்து, 5 நாட்கள் நிழலில் உலர வைத்து, இவை மூழ்கும் அளவு நல்ல, சுத்தமான தேனை ஊற்றி, அவ்வப்போது கிண்டி தேன் வற்ற வற்ற கொஞ்சம் தேன் சேர்த்து தினமும் 5 கிராம் இரவில் சாப்பிட்டு வர மலம் கழிப்பதில் சிரமம் இருக்காது.
கீரைகள், காய்கறிகள், விதை அதிகம் உள்ள பழங்கள், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மலச்சிக்கல் வராது. மலச்சிக்கல் அதிக நாட்கள் நீடித்தால் திரிபலா சூரணம் 3 அல்லது 5 கிராம் தினமும் இரவில் வெந்நீருடன் கலந்து சாப்பிடுங்கள். சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டால், நீரைப் பெருக்க கூடிய சுரை, பூசணி, புடலை, பரங்கி, வெண்டை, காசினிக் கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள்.
கர்ப்பிணிகள் எளிமையான, சிறிய வேலைகளை செய்யலாம். தினமும் 15-30 நிமிடங்கள் வீட்டிலே, வெளிப்புறத்திலே நடைப்பயிற்சி செய்வது நல்லது. எளிமையான சமையல் வேலை, நிமிர்ந்தபடி கூட்டுதல், துணிகளை அலசி காயப் போடுதல் ஆகியவற்றை செய்யலாம். மெல்லிய இசை கேட்கலாம். மியூசிக் தெரபி கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.