30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு
ஒளிரும் சருமத்திற்காக ஏங்காத பெண்களே கிடையாது. இளமையில் இயற்கையாகவே நம் சருமம் அழகாகவும், மினுமினுப்புடனும் இருக்கிறது. ஆனால், 30 வயதை கடந்துவிட்டால் சருமத்தில் ஏற்படும் சேதங்களை தடுத்து, அதை பராமரிக்க வேண்டியது மிக அவசியம். வயது அதிகரிக்கும் பொழுது, அதனுடன் நம் சருமத்தில் உள்ள பழைய உயிரணுக்கள் அழிந்து, புதிய உயிரணுக்கள் பிறக்கின்றன. ஆனால் நாம் வாழும் இடம், உண்ணும் உணவு போன்ற தினசரி வாழ்க்கை முறையால் நம் சருமம் மிகவும் பாதிப்படைகிறது.
மேற்கூறிய காரணங்களால் நம் சருமத்தை கவனித்து பராமரிப்பது முக்கியமாகிறது. தினசரி சரும பாதுக்காப்பிற்காக 30 வயதை கடந்த பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
கிளென்சிங்/ சுத்தப்படுத்துதல்
முகத்தை கிளென்சிங் செய்வது என்பது முகத்தில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் பசை போன்றவற்றை அகற்றுவது. நாள் முழுவதும் நம் முகத்தில் தூசி, மாச, சருமத்திலிருந்து உதிரும் இறந்த உயிரணுக்கள் போன்றவை படிகின்றன. முகத்தில் உள்ள அசுத்தங்களை அகற்றி புத்துணர்வான பொலிவை பெற முகத்திற்கு ஒரு முழுமையான கிளென்சிங் செய்வது அவசியம்.
இரவு படுக்க செல்வதற்கு முன் எளிமையான, இயற்கை முறையில் காய்ச்சாத பால் அல்லது பன்னீர் உபயோகித்து முக ஒப்பனையை கலைக்க வேண்டும். கடைகளில் விதவிதமான சரும பராமரிப்பு சாதனங்கள் கிடைத்தாலும், அவரவர் சருமத்தின் தன்மைகேற்ற பொருளை தேர்வு செய்து உபயோகித்தல் அவசியம்.
மாய்ஸ்ட்ரைசிங்
எப்படிப்பட்ட சருமத்தையுடைவராக இருந்தாலும், முறையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை ஊட்ட தவறக் கூடாது. வயதடையும் பொழுது சருமம் வறட்சி அடைந்து, இறுக்கத்தன்மையை இழந்து, தொய்வடைய தொடங்கும். அதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டமளிக்க மாய்ஸ்ட்ரைசர் உபயோகிப்பதை அதிகரிக்கவும். உங்கள் சருமத்திற்கேற்ற சரும மாய்ஸ்ட்ரைசரை தேர்வு செய்து, அதை பயன்படுத்தி உங்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும்.
குளித்தவுடன் சரும மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்துவது மிக நல்லது. நீங்கள் வறட்சியான சருமத்தையுடையவராக இருப்பின், எண்ணெய் பசையுள்ள சரும மாய்ஸ்ட்ரைசரை ஒரு நாளைக்கு பல முறை உபயோகப்படுத்தலாம்.
பேஸ்பேக்
முகத்தின் சரும பராமரிப்பிற்கு மிக சரியான வழி முக-பேக் போடுவதாகும். முகத்திற்கு உடனடி பளபளப்பு மற்றும் நிறத்தை அது கொடுக்கும். உறுதியான, உயிரோட்டமுள்ள சருமத்தை பெற பேஸ்பேக் போடுதல் மிக அவசியம்.
பேஸ்பேக் தேவைப்படும்போதெல்லாம் அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. வீட்டில் நாம் தினசரி உபயோகிக்கும் தேன், முட்டை, பாதாம் எண்ணெய், கடலை மாவு, கற்றாழை போன்றவற்றை கொண்டே பேக் போடலாம். சுத்தமான, ஆரோக்கியமான, இளமையான சருமத்தை பெற வாரத்திற்கு ஒரு முறையாவது பேஸ்பேக் போட்டுக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட இடைவெளியில், முறையாக மசாஜ் செய்வது நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது. முழு உடல் மசாஜ் செய்வதினால், தசைகளை தளர்த்தி, உடல் விறைப்புதன்மை குறைந்து, வலி மற்றும் வீக்கத்திற்கும் நிவாரணம் கிடைக்கிறது. தலை மசாஜ் செய்வதினால் கேசத்திற்கு மட்டும் ஊட்டம்மளிப்பதோடு மற்றுமில்லாமல், தலைவலி, ஒற்றை தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.
எவ்வளவு வேலை இருந்தாலும், உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி முறையாக மசாஜ் செய்துக்கொள்வது நல்லது.