கர்ப்ப காலத்தில் வரும் மூலநோய் தற்காலிகமானதா?
‘‘நமது ஆசனவாயில் ரத்தத்தாலும் நார்ச்சதையாலும் உண்டான மூன்று தூண்கள் இருக்கும். அதைத்தான் மூலம் என்று சொல்கிறோம். வயிற்றுக்கும் ரத்தத்தால் ஆன இத்தூண்களுக்கும் தொடர்பு இருக்கிறது. உள் வயிற்றில் அழுத்தம் அதிகரிக்கும்போது அந்த அழுத்தம் மூலத்தில் பரவி அதனை உப்பிப்போக வைக்கும். அப்படியாக கர்ப்ப காலத்தின் போது உள் வயிற்றில் அழுத்தம் அதிகரித்துக் காணப்படும். கர்ப்பப்பை பெரிதாக பெரிதாக வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் அழுத்தம் அதிகமாகும்.
இதனால் மூல நோய் இல்லாதவர்களுக்கு அது வரக்கூடும். ஏற்கனவே இருப்பவர்களுக்கு அதன் படிநிலை அதிகரிக்கக்கூடும். மலம் கழித்த பின் ஆசனவாயில் ரத்தம் வருதல் மற்றும் ஆசனவாய் ஓரத்தில் சில வீக்கங்கள் தெரிவது ஆகியவை இதற்கான ஆரம்பகால அறிகுறிகளாகும். இப்படியான அறிகுறிகள் தெரிய வரும்போது பயப்படத் தேவையில்லை. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் மலச்சிக்கலின் காரணமாக மலம் கழிப்பதற்காக முக்க வேண்டி வரும். இதனால் மூலத்தில் ரத்தக்கசிவு ஏற்படும். அதன் விளைவாக ரத்தசோகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு நார்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைத்து விட்டாலே மலச்சிக்கல் இருக்காது.
சில கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக மலம் மிகவும் கெட்டியாக வெளிவரும்போது மூலத்தில் வெடிப்பு ஏற்படும். அதுதான் Fissure என்று சொல்லக்கூடிய வெடிப்பு மூலம். piles எனப்படும் மூல நோயை விட வெடிப்பு மூலத்தினால் அதிக அளவில் வலி ஏற்படும். மலம் கழித்த பிறகும் கூட வலி இருக்கும். வெடிப்பு மூலத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன. முதலாவது தற்காலிக வெடிப்பு மூலம். இரண்டாவது வகை நிரந்தர வெடிப்பு மூலம்.
ஆசனவாயில் வெடிப்பு இருக்கும். அதை விரல்களில் தொடும்போது உணர முடியும். ஆனால் வெளியே தெரியாமல் இருப்பது தற்காலிக வெடிப்பு மூலம் ஆகும். இது கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் மருந்து, மாத்திரைகள் மூலம் இதனை குணப்படுத்தி விட முடியும்.
ஆசனவாயில் விரல்களால் தொடும்போது தடித்துக் காணப்பட்டால் அது நிரந்தர வெடிப்பு மூலம் ஆகும். இதற்கு லேசர் அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வாக அமையும். இச்சிகிச்சை மூலம் கெட்டியான தசைகளை விடுவிக்கும்போது அது குணமடைந்து விடும். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அக்காலத்தில் அனஸ்தீசியா கொடுப்பது உகந்ததல்ல.
எனவே கர்ப்பம் தரிப்பதற்கான திட்டமிடலின்போது இப்பிரச்சனையையும் கருத்தில் கொள்வது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்குள் இப்பிரச்சனை ஏற்படும்போது மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாக தற்காலிக நிவாரணத்தை அளித்து விட்டு பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். மூல நோய்க்கு Stapler gun இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் வலியே இல்லாமல் சிகிச்சை மேற்கொண்டு நிரந்தரத் தீர்வை அடைய முடியும்.