கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. குழந்தை வளர்ப்புக்கு இது போதுமா?
இன்றைய தலைமுறைக்கு பிடிவாத குணம் அதிகம் ஆகிவிட்டது. ஒரு பொருளை விரும்பி விட்டால் வாங்கி தந்தே ஆகவேண்டும் என்பார்கள். அந்த நேரங்களில் நீங்கள் அதன் விருப்பத்தை தள்ளி போட வேண்டும். வாங்கி தர மாட்டேன் என்று நீங்களும் பிடிவாதம் பிடிக்காமல் அடுத்த வாரம் வாங்கி தரேன் என்று கூறுங்கள். அந்த நிமிடம் அமைதியாக கேட்கும். அடுத்த நாளே அதை பற்றி மறந்தும் போகும். அதுதான் குழந்தை.
முரட்டுத்தனமான குழந்தைகளை அப்படியே விட கூடாது. பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். அல்லது குழந்தை நல ஆலோசகரின் உதவி உங்களுக்கு அவசியம் தேவைப்படும். கோபம் வந்தால் பொருள்களை உடைப்பது, வீசி எறிவது , அடிப்பது போன்ற காரியங்கள் குழந்தைகளை செய்ய அனுமதிக்காதீர்கள். கொஞ்ச நேரம் வீட்டிற்கு வெளியே நிற்க வையுங்கள். தனிமை அவர்களுக்கு பயத்தை கொடுக்கும். கொஞ்சம் முரட்டுத்தனம் குறையும்.
குழந்தைகள் அவர்கள் சூழலை அனுசரித்துதான் தங்கள் நடவடிக்கைகளை செய்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் நீங்கள் கத்துவது சண்டையிடுவது போன்றவற்றை செய்யாதீர்கள். முக்கியமாக குடும்ப சண்டைகளை அவர்கள் முன்னிலையில் தவிருங்கள். அதனால் அவர்கள் மனம் உடையும் வாய்ப்பு அதிகம்.
மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு சிறு வயதிலேயே பழக்குங்கள். அதே போல மற்ற குழந்தைகள் உங்கள் குழந்தையால் காயப்படா வண்ணம் பார்த்து கொள்ளுங்கள்.
விளையாட்டாக குழந்தைகள் பொய் சொல்வார்கள். அதனை ஆதரிக்காதீர்கள். அது தவறு என்று கூறுங்கள். மற்றவரை மரியாதையை இல்லாமல் குழந்தை பேசினால் உடனே கண்டியுங்கள். நாம் கண்டிக்கவிட்டால் அதனையே அது வெளியிலும் போய் பேசும்படி ஆகி விடும். அப்புறம் ஊரார் கண்டிப்பார்கள்.
உங்களுக்கு வேலைகள் இருப்பதால் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பது குறையலாம். இது தவறு. மற்றும் பொறுமையும் இருப்பதில்லை. ஒரு முக்கியமான பந்தத்தில் இருக்கும் நீங்கள் ஒரு உயிரை வளர்க்கும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதற்காக தேவையான நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைக்காக உங்கள் மற்ற பொறுப்புகளை பெரியவர்களிடம் அல்லது உடன் இருப்பவர்களிடம் ஒப்படைத்து விட்டு குழந்தையோடு இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைக்கு என்ன விருப்பமோ எது நன்றாக வருமோ அதனை அதன் போக்கில் செய்ய விடுங்கள். டிவி நிகழ்ச்சியில் பாடும் ஆடும் குழந்தைகள் போல நம் பிள்ளை இல்லை என்று உங்கள் விருப்பத்தை அதன் மேல் திணிக்காதீர்கள்.
குழந்தை வளர்ப்பில் ஆண் பெண் பாகுபாடுகள் வேண்டாம். ஒரு பெண்ணாகிய நீங்களே இந்த கொடுமைக்கு துணை போகாதீர்கள். குழந்தைகள் எது விரும்புகிறார்களோ அதற்கான விஷயங்களை தேடி அலசி ஆராய்ந்து அது பற்றி அவர்களுக்கு புரிய வைத்து பின்னர் அதில் ஈடுபட வையுங்கள்.
மனமார பாராட்டுங்கள். உங்கள் பாராட்டுக்கள் அவர்களை மேலும் நன்றாக வளர உதவி செய்யும். நன்மைகள் தீமைகள் பற்றிய தெளிவை அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. நிறைய அக்கறை என்கிற விகிதத்தில் அவர்களை நீங்கள் வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.