புஸ் அப் பயிற்சி ஏன் செய்ய வேண்டும்
உடற்பயிற்சி செய்பவர்களின் நோக்கமே கட்டுக்கோப்பான உடல். ஜிம்மிற்கு சென்றுதான் கட்டுக்கோப்பான உடம்பை பெற வேண்டும் என்றில்லை. வீட்டில் செய்யும் உடற்பயிற்சிகள் மூலமாகவே அழகிய உடலமைப்பை பெறலாம். வீட்டில் செய்யும் உடற்பயிற்சி என்றால் அதில் முதலில் நம் நினைவிற்கு வருவது புஷ் அப்ஸ் (அ) தண்டால் தான். தண்டால் எடுப்பது உடலின் அனைத்து பாகங்களையும் வலுப்படுத்த கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். அதேசமயம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். ஆனால் இதனை சரியான முறையில் மட்டுமே செய்யவேண்டும். ஏனெனில் இதனை தவறாக செய்தால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும்.
உங்கள் உடலின் அனைத்து தசைகளும் வலுவடைய விரும்பினால் உங்களுக்கு புஷ்அப்ஸ் ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது உங்களின் கை தசைகள் மற்றும் கீழ்ப்புற உடலை வலிமைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் தசைகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து செயல்படவும், வலுப்படவும் உதவுகிறது. பிரபல உடற்பயிற்சி நிபுணரின் கருத்துப்படி புஷ்அப்ஸ் தான் அனைத்து உடற்பயிற்சிகளை காட்டிலும் சிறப்பான பயனை வழங்கக்கூடியதாம். முறையான புஷ்அப்ஸ் உங்கள் தசைகளை வலுப்படுத்தி தசை நார்களை சீராக்குகிறது. இந்த தசைநார்கள்தான் உங்கள் உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
வயதை பொறுத்து உங்கள் தசைகளின் அடர்த்தி மாற்றமடைகிறது மேலும் ஆற்றல் செலவழிக்கும் திறனும் மாறுபடுகிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பது உடற்பயிற்சியின் முக்கிய பணியாக கருதப்படுகிறது. சில புஷ்அப்ஸ் செய்வதாலேயே உங்களின் தசைகளின் அடர்த்தி அதிகரித்துவிடாது. தொடர்ந்து முறையான புஷ்அப்ஸ் மூலம் மட்டுமே உங்கள் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்க இயலும். மேற்புற உடலின் கச்சிதமான அமைப்பிற்கு புஷ்அப்ஸ் தான் சிறந்த உடற்பயிற்சியென அனைவராலும் நம்பப்படுகிறது.
முறையாக புஷ்அப்ஸ் செய்யும்போது உங்களின் மார்பு, கை தசைகள் வலுப்பெறுவதோடு உங்கள் அடிவயிற்று பகுதியின் கொழுப்பும் கரைக்கப்படுகிறது. புஷ்அப்ஸ் உங்கள் மார்பு, தோள்பட்டை தசைகள் மற்றும் கை தசைகளை வலுவாக்க உதவுகிறது. ஆனால் அதிகளவு புஷ்அப்ஸ் உங்கள் தசைகளில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. கடுமையான புஷ்அப்ஸ் பயிற்சி உங்கள் உடலின் மேற்பகுதியை மாற்றக்கூடும்.