ஒற்றைக் குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்களா?
ஒற்றைக் குழந்தைகள், பிரைவஸியை விரும்புபவர்களாகவும், சுயநலமுடையவர்களாகவும், எளிதில் பிறருடன் சேராதவர்களாகவும், சேர முடியாதவர்களாகவும், திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்னும் பொதுவான கருத்தில் உண்மையே இல்லை. ஓர் ஒற்றைக் குழந்தை, உறவினர்கள் நிறைந்த பெரிய குடும்பத்தில், பகிர்ந்து வாழும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது என்றால், அதுவும் பகிர்ந்துகொள்ளுதலைக் கற்றுக்கொள்ளும்.
விளையாட்டுத் துணைக்கும் பேச்சுத்துணைக்கும் யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட குழந்தை, பேசிப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போவதால்தான், பிற்காலத்தில் மற்றவர்களுடன் சேர முடியாத குணம்கொண்டவராக நேர்கிறதே தவிர, அது அவரின் இயல்பு கிடையாது.
அதேபோல, இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தாலும், தனிக் குடும்பத்தில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விளையாடாமல், இரண்டு அறைகளிலும் இரண்டு டி.வி-க்கள், கேட்ஜெட்ஸில் மூழ்கும் பழக்கம் என்றிருக்கும் வீடுகளிலும், அந்தக் குழந்தைகளுக்கு மேற்சொன்ன இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒற்றைக் குழந்தைகளைப் பற்றி இன்னொரு விஷயமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள், பெற்றோரால் வளர்க்கப்படும்போது ஒரு முறையிலும், பாட்டி தாத்தாவிடம் வளரும்போது இன்னொரு முறையிலும் வளர்வார்கள். அவை இரண்டு முறைகளே அன்றி, ஒன்று தவறு, இன்னொன்று சரி என்றெல்லாம் கிடையாது. அதனால் குழந்தைகளின் குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல வேறுபடுகின்றன. குழந்தை வளர்ப்பில் வெவ்வேறு நிலைகளில் பல இடர்ப்பாடுகள் வரும், போகும். அவற்றைப் பொறுத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.
இனிமேல், பிடிவாதக்கார குழந்தை என்றாலே, `அது வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாக இருக்கும்’ என்று தீர்மானித்துவிடாதீர்கள். குழந்தைகள், பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதைச் செய்வதில்லை. ஆனால், தங்கள் பெற்றோர் செய்வதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்களின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.