தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளுக்கு மனப் பாடம் என்னும் மனப் பயிற்சி

‘அறம் செய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ சிறுவர்களின் குரல், தெரு முழுக்கக் கேட்கும். உரக்கப் படிப்பது மிகவும் ஆரோக்கியமான வழிமுறை.

இதே போல்தான், ‘மனப்பாடம்’ செய்வதும். ஒரு சிறிய கிராமம்; அங்கே ஒரு பழைய கோவில் வாசலில் ஒரு முதியவர். எப்போதோ ஓரிருவர் கோவிலுக்கு வருவார்கள். தானே வலியச் சென்று, அவர்களிடம் விடாப் பிடியாய் பேசுவார் முதியவர்.

பள்ளிப் படிப்பை தாண்டாதவர்தான். ஆனால், அவர் பேச பேச வியப்பாய் இருக்கும். தேவாரம், திருவாசகம் தொடங்கி, சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தியா பற்றிய பூகோளத் தகவல்கள், வெவ்வேறு தலைவர்களின் வரலாறு வரை ‘புட்டு புட்டு’ வைப்பார். சரியாகவும் இருக்கும்; சுவையாகவும் இருக்கும். இவரை போன்றவர்கள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.உண்மையில், ‘அந்தக் கால’ மனிதர்கள் எல்லாருமே இப்படித்தான். சகட்டு மேனிக்கு செய்திகளை அள்ளி வீசுவார்கள். எப்படி சாத்தியம் ஆயிற்று..? ‘மனப்பாடம்’. எனக்கு எல்லாப் பாட்டுமே மனப்பாடமா தெரியும்’ என்று சொல்வதில் ஒரு பெருமிதம் இருந்தது அன்று.

இன்றைக்கு… அறிஞர்கள், கல்வியாளர்கள் அரசியல்வாதிகள், ஆர்வலர்கள், சினிமா காரர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள்…. அத்தனை பேரும், மனப்பாடம் என்றாலே அறிவுக்குப் புறம்பானது என்று பேசித் திரிகிறார்கள். இது ஒரு ‘நாகரிகம்’ ஆகி விட்டது. பழம்பெரும் செய்யுள்கள், கணித சூத்திரங்கள், வாய்ப்பாடுகள், அறிவியல் தேற்றங்கள் (தியரி), வரலாற்று நிகழ்வுகள், இலக்கணக் குறிப்புகளை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொண்டால், ‘என்றைக்கும்’ உதவும்.

‘மனப்பாடம்’ செய்கிற போது, பாடத்துடன் மனம் ஒன்றிப் போகிறது. ஒருமுகத் திறன் (‘கான்சன்ட்ரேஷன்’) வரப்பெறுகிறது; வலுப்பெறுகிறது. மூதுரை, நல்வழி, திருக்குறள் உள்ளிட்ட அறநெறிகளுக்குப் பொருள், அநேகமாக, ‘படிக்குற வயசுல’ தெரியாது. வளர வளர புரியத் தொடங்கும். “ஊக்கமது கைவிடேல்” ஆறு வயதில் மனப்பாடமாகப் படித்தது; இருபத்தாறில், தன்னம்பிக்கை ஊட்டுகிறது.

“அறத்தாறு இதுவென வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை”. ஒருவன் பல்லக்கில் சுகமாய் அமர்ந்து இருக்கிறான்; அதனை பலர், உடல் நோக சுமந்து செல்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, அறம் வழிப் பட்டது அல்ல. தர்மம் செஞ்ச புண்ணியவான்’ பல்லக்கில் போவதாகச் சொல்வது தவறு. இந்த இடைவெளிக்கு, சமூக அரசியல், பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. வர்க்க பேதம் குறித்த ஆழமான கருத்தை மிக நுணுக்கமாக எடுத்துரைக்கிறது திருக்குறள்.

சிறு வயதில் இது புரியுமா…? மனப்பாடம் செய்யும் போது, வரிகள் தெரியவரும் நாளடைவில் உட்கருத்தும் புரிய வரும்.

இதுதான் கற்றலின் சூட்சுமம். இது தெரியாமல், ‘புரியாம’ படிக்கிறது ‘வேஸ்ட்’ என்று அக்கறையுடன் கவலைப்படுகிறார்கள்!

இப்படி படித்துதான், சர் சி.வி.ராமன். டாக்டர் ராதாகிருஷ்ணன், இளைஞர்களின் ‘ரோல்மாடல்’ டாக்டர் அப்துல் கலாம் போன்ற பெருமக்கள் உருவானார்கள். வாய்ப்பாடு, மனப்பாடமாக இருக்கப் போய்த்தான், பொதுக் கணிதம் (‘அரித்மெடிக்’) பகுதியில் தலைமுறை தலைமுறையாக நாம் சிறந்து விளங்குகிறோம். இந்த அடித்தளம் வலுவாக அமைந்ததால்தான், கணிதமேதை ராமானுஜம், தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றாலும், பிறகு பெரிய அளவில் சாதிக்க முடிந்தது.

இன்று என்ன நிலைமை…? இரண்டால் பெருக்குவதற்குக் கூட, ‘கால்குலேட்டர்’ தேடும் தலைமுறையை உருவாக்கி வைத்து இருக்கிறோம். இத்தனை பலவீனமான ஆழ்மனது அறிவை வைத்துக் கொண்டு, ஆராய்ச்சிக்கு முனைகிறோம்! ஒரு சிலர் ஒருவேளை சாதிக்கவும் செய்யலாம். தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்த கணித அறிவு, அபாரமானது. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட, கணிதப் பாடத்தில் வெளுத்துக் கட்டுகிற பிள்ளைகள் ஏராளம். வழி கோலியது அவர்களின் ‘தக்க வைக்கும் திறன்’. இதற்கு உதவியது மனப்பாடப் பயிற்சி.தங்கு தடையற்ற மொழி நடைக்கும், சிறு வயதில் பயின்ற மனப்பாடச் செய்யுட்கள்தான் காரணம். இதற்கு எதிராகப் பேசியதால் என்ன ஆயிற்று..? தமிழ்நாட்டில் தமிழர்களின் சொல்வளம், குன்றிப் போய் விட்டது; மிகச் சில சொற்களையே திரும்பத் திரும்ப, எழுதுகிறோம்; பேசுகிறோம். நம் தாய்மொழியை அநியாயத்துக்குச் சுருக்கி விட்டோம். போதாக் குறைக்கு, ‘காது கொடுத்துக் கேட்க முடியாத’ உச்சரிப்பு வேறு. இந்தக் கோளாறுகள் எல்லாம், இறக்குமதி செய்யப்பட்ட ‘நாகரிக’ சிந்தனையால் விளைந்தவை. புரிந்து படிக்கட்டும்; நல்லதுதான். அதேசமயம், ‘புரியாமலே’மனப்பாடம் செய்து ஒப்புவிக்கிற நடைமுறை, ‘அறிவு ஜீவிகள்’ சொல்வது போல, அறிவுக்குப் புறம்பானது அல்லவே அல்ல. காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாய் கடைப்பிடிக்கப்படுகிற, கற்றல் முறைகளில் ஒன்றினை, ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது, சற்றும் அறிவுடைமை ஆகாது.

புதிய கல்விக் கொள்கை மனப்பாடம் செய்தல், ஒப்புவித்தல் முறைக்கு எதிராகப் பேசுகிறது. இந்த முறையை, குருட்டுத் தனமாகக் கற்றல் என்கிறது. இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். கற்றலும் ‘குருட்டுத் தனமும்’ எப்படி ஒன்று சேர முடியும்..? ‘குருட்டாம் போக்கில்’ படிக்கிற கிராமப்புற மாணவர்களுக்கு இருக்கிற சொல்வன்மை’ நகரப் பெற்றோர்களால், ‘புரிந்து படிக்கிற’ பிள்ளைகளின் ஆற்றலை விட, பல மடங்கு அதிகம். கவனத்தில் கொண்டோமா…? புரிந்து படிப்பது எல்லாராலும் முடியாது.

ஆனால் மனப்பாடம் செய்தல் அனைவராலும் முடியும். சிலர் ஒருமுறை படித்தாலே, நினைவில் வைத்துக் கொள்வார்கள்;

சிலருக்கு பத்து முறை படித்தால்தான் ஞாபகம் வரும் அவ்வளவுதான். புரிந்து கொள்ள யாரேனும் உதவி செய்ய வேண்டும். மீண்டும் மீண்டும் படித்து மனப்பாடம் செய்ய, யார் தயவும் தேவை இல்லை. பொதுத்தேர்வுகளுக்கு தயாராகிற நேரம் வந்து விட்டது. முக்கிய பகுதிகளை மனப்பாடமாய்த் தெரிந்து வைத்துக் கொண்டால், பெரிதும் உதவும். அலட்சியம் வேண்டாம்.

பள்ளிப் படிப்பில், மூன்று வழிமுறைகளை நாம் கட்டாயம் முன்னெடுக்க வேண்டும்: 1. சேர்ந்து படித்தல்; 2. உரக்கப் படித்தல்; 3. மனப்பாடம் செய்தல். நன்றாக இதனை மனதில் பாடப் படுத்திக் கொள்வோம்.

போலித்தனம் இல்லாமல், நாளைய தலைமுறைக்கு நல்லதைச் சொல்வோம்; நல்லதைத் தருவோம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker