எடிட்டர் சாய்ஸ்

கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நோய்கள்

இணையதள பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. பெரும்பாலானோர் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், தேவையான தகவல்களை அதில்தான் தேடிப்பிடித்து தெரிந்துகொள்கிறார்கள். 2019-ம் ஆண்டில் உடலை தாக்கும் நோய்களை பற்றிய விவரங்களை அதிகம்பேர் தேடியிருக்கிறார்கள். பருவகால நோய்களாக டெங்கு, சளி, இருமல் முதல் புற்றுநோய் வரை பலதரப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட விஷயங்களை தேடிப்பிடித்து படித்திருக்கிறார்கள். பெரும்பாலான தேடல்கள் பிரபலங்களை தாக்கிய நோய்களுடன் தொடர்பு கொண்டவையாக இருந்துள்ளன. 2019-ம் ஆண்டில் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நோய்களை பற்றி பார்க்கலாம்.டெங்கு

கொசுக்களால் பரவும் இந்த நோய்க்கான சிகிச்சை முறையை மருத்துவ உலகம் மேம்படுத்தி இருந்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை இணையதளத்தில் ஏராளமானோர் தேடியுள்ளனர்.

இதுபற்றி டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் டாக்டர் கே.கே.அகர்வால், ‘‘கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப் படுத்துவதற்கு சமூகம் மற்றும் தனி மனிதர்களின் கூட்டு முயற்சி இன்றியமையாதது. பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதி களில் சுத்தமான சூழலை உறுதி செய்ய வேண்டும். கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வையும் ஏற் படுத்த வேண்டும்’’ என்கிறார்.என்சிபாலிட்டீஸ்

இது மூளையை பாதிக்கும் ஒருவகை தொற்று நோயாகும். கோடைகால பழமான லிச்சி பழத்தை சாப்பிட்ட குழந்தைகள் ஏராளமானோர் இந்த நோய் பாதிப்புக்குள்ளானார்கள். உயிரிழப்பு சம்பவங்களும் நடந்தன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துபோவது மற்றொரு காரணமாக கூறப்பட்டது. உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, இந்த நோய் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பும் ஏற்படும். இந்த நோயை பற்றிய விவரங்கள் கூகுளில் நிறைய தேடப்பட்டிருக்கின்றன.

மன அழுத்தம்

இந்தியாவில் 7 பேரில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். நடிகை ஆலியா பட்டின் சகோதரி ஷாஹீன் பட், தான் 13 வயதில் இருந்தே மன அழுத்தத்திற்கு ஆளாகிக்கொண்டிருப்பதாக கூறினார். இது தொடர்பாக ‘நான் ஒருபோதும் மகிழ்ச்சியடையவில்லை’ என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். அதனை ஆலியா பட் வெளியிட்டு, சகோதரியின் கருத்தை ஆமோதித்தார். அதைத்தொடர்ந்து மன அழுத்தத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு ஏராளமானோர் இணையதள தேடுதலில் ஈடுபட்டனர். மன அழுத்தம் பெரும்பாலானோரை ஆட்கொள்ளும் தன்மை கொண்டிருந்தாலும் ஆலியா பட் மூலம் இணையதள தேடுதலில் அதிகம் பேரால் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கிறது.மார்பக புற்றுநோய்

புற்றுநோய் உடலில் பல்வேறு உறுப்புகளை தாக்குகின்றன. நடிகர் ஆயுஷ்மான் குர்ரானாவின் மனைவி தஹீரா காஷ்யப் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி அதில் இருந்து மீண்டார். புற்றுநோயால் அவர் அனுபவித்த கஷ்டங்களில் தொடங்கி அதில் இருந்து மீண்டு வந்தது வரை எதிர்கொண்ட சிரமங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. அதை நிறைய பேர் பார்த்துள்ளனர். நடிகை சோனாலி பிந்த்ரேவும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர். புற்றுநோயுடனான தனது போராட்டத்தை அவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெளிப் படுத்தி வருகிறார். அதனால் ஏற்பட்ட தாக்கம் நிறைய பேரை மார்பக புற்றுநோய் பற்றி இணையத்தில் தேடவைத்துவிட்டது.

நீரிழிவு நோய்

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தினமும் இணையதளத்தில் நீரிழிவு நோய் குறித்த தேடல்கள் லட்சக்கணக்கில் நீள்கின்றன. இந்த ஆண்டு டைப்-1 நீரிழிவு நோய் பற்றிய தேடல் அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரும், அமெரிக்க நடிகருமான நிக் ஜோனஸ். இவரை 13 வயதில் நீரிழிவு நோய் பாதித்திருக்கிறது. அதுபற்றி நிக் ஜோனஸ் வீடியோ வெளியிட டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு பற்றி அதிகம்பேர் தேடினார்கள். இந்த வகை நீரிழிவு நோய் குழந்தை பருவத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker