கேரள புடவைகளை வாங்கி உடுத்துபவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள்
பெண்களின் புடவை அலமாரியை திறந்து பார்த்தால் அங்கு இ்ந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் சங்கமித்திருப்பதை காணலாம். காஞ்சிபுரம் பட்டும், பனாரஸ் மட்டும் அங்கே இணைந்திருக்கும். காஷ்மீர் எம்ப்ராய்டரிங் புடவையும், கேரள ஜரிகை முண்டும் ஒன்றன்மேல் ஒன்றாக அமர்ந்து அழகு தந்துகொண்டிருக்கும். எந்த மாநிலங்களில் உருவாக்கப்பட்ட புடவை என்றாலும், அது தனக்கு அழகு தருகிறது என்றால் அவைகளை எல்லாம் வாங்கி உடுத்தி, மகிழ்வது பெண்களுக்கு பிடித்தமான செயல். அழகழகான புடவைகளை விரும்பும் பெண்கள் கேரள புடவைகளையும், பார்டரில் ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட செட் முண்டுகளையும் வாங்கி உடுத்துகிறார்கள்.
கேரள புடவைகளை வாங்கி உடுத்துபவர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:
கேரள புடவைகளில் ஜரிகையோடு வடிவமைக்கப்பட்ட பார்டர்களை கொண்ட புடவைகள் பெண்களை அதிகமாக கவர்கிறது. தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜரிகை கொண்ட புடவைகளை விரும்பி வாங்குகிறார்கள். சிறிய ஜரிகை பார்டர் கொண்ட புடவையின் உடல் பகுதியில் தங்க நிறத்தில் போல்கா டாட்ஸ், செக், மோட்டிப்ஸ் போன்றவை இடம்பெற்றிருப்பது பெண்களை அதிகம் ஈர்க்கிறது. அத்தகைய புடவைகளுக்கு கலர்புல்லான ஜாக்கெட்டுகள் கூடுதல் அழகு தருகின்றன. மிக்ஸ் அன்ட் மேச் நிறங்களும், பிளைன் ஷேடுகளும் பொருத்தமானதாக இருக்கும்.
ஒரிஜினல் ஜரிகை கொண்ட கேரள புடவைகளை முதல் மூன்று தடவையாவது டிரை வாஷ் செய்யவேண்டும். அதன் பின்புதான் தண்ணீரை பயன்படுத்தி துவைக்கவேண்டும். எப்போதும் குளிர்ந்த நீரில் துவைப்பது அவசியம். மற்ற புடவைகளோடு சேர்த்து இதனையும் துவைத்தால் அவைகளில் இருக்கும் நிறம் இதில் படிந்துவிடும். அதனால் கேரள புடவைகளை தனியாகத்தான் துவைக்கவேண்டும்.
ஜரிகை புடவைகளை துவைக்க சிறிதளவு ஷாம்புவை பயன்படுத்துங்கள். அல்லது வீரியம் குறைந்த சோப்பினை பயன்படுத்தலாம். டிடர்ஜென்ட்டை ஒருபோதும் பயன் படுத்தக்கூடாது. வீரியம் குறைந்த ஷாம்புவை பயன் படுத்தி துவைக்கும்போது அதில் ஒருசில சொட்டு எலுமிச்சை சாறு கலந்தால், புடவை நன்றாக பளபளக்கும்.
கேரள புடவைகளை அதிக நேரம் நீரில் முக்கிவைக்கக் கூடாது. இதனை வாஷிங் மெஷின் பயன்படுத்தாமல் கையால் அலசி துவைப்பதே சிறந்தது. கையால் துவைத்தால் அதிக நாட்கள் பொலிவுடன் திகழும். புடவையில் ஏதாவது ஒரு பகுதியில் அழுக்கு இருப்பதாக தெரிந்தால் அந்த பகுதியை மட்டும் டூத் பிரஷ் பயன்படுத்தி லேசாக தேய்த்து அழுக்கை போக்கலாம்.
புடவையில் பசை அதிகமாக இருந்தால் லேசான சுடுநீரில் சிறிதளவு உப்பு சேர்த்து அதில் புடவையை முக்கிவையுங்கள். 15 நிமிடத்தில் பசை முழுவதுமாக நீங்கி விடும்.
புடவையில் கறை ஏதாவது பட்டுவிட்டால் அந்த இடத்தில் வெள்ளைநிற டூத் பேஸ்ட்டை சிறிதளவு பூசி உலரவையுங்கள். பின்பு பிரஷ் மூலம் லேசாக தேய்த்தால் அந்த கறை நீங்கிவிடும்.
இந்த புடவைகளை நிழலில் மட்டுமே உலரவைக்க வேண்டும். வெயிலில் உலரவைத்தால் புடவையின் நிறம் மங்கும். நூல்களும் பிரிந்து தனியாக வெளியே வரத்தொடங்கிவிடும். புடவை மீது எப்போதுமே அதிக சூரிய ஒளி படாமல் இருப்பது நல்லது. அதற்காக சிறிய வீடுகளின் உள்ளே உலரவைத்துவிடக்கூடாது. அதுவும் நல்லதல்ல. பரந்த இடத்தில் காற்றோட்டமாக நிழலில் உலர்வது நல்லது.
உலர்ந்த புடவைக்கு இஸ்திரி போடும்போது ஜரிகை மீது நேரடியாக அயர்ன் பாக்ஸ் பட்டுவிடக்கூடாது. ஜரிகை மீது பேப்பரை விரித்து அதன் மீது அயர்ன் செய்யவேண்டும்.