கூந்தலை தானம் செய்ய விரும்புகிறீர்களா?
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையின்போது தலைமுடியை இழப்பவர்களுக்கு உதவுவதற்காக தங்கள் கூந்தலை தானமாக வழங்க நிறைய பேர் முன் வருகிறார்கள். அப்படி தலைமுடியை தானமாக வழங்குவதற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன. தலைமுடியை சரியாக கத்தரித்து வழங்காவிட்டால் நீங்கள் தானமாக வழங்கும் முடி பயனற்று போய்விடும். தலைமுடியை தானமாக வழங்குவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலை முடியை விக் வடிவில் தயாரித்து வழங்கும் தொண்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அவர்கள் முடியின் நீளம், அடர்த்தி போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான கூந்தலை தானமாக பெறுகின்றனர். சில தொண்டு நிறுவனங்கள் வண்ணங்கள் பூசப்பட்ட முடிகளை நிராகரித்துவிடுகின்றன. ரசாயன சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அத்தகைய முடிகளை வாங்குவதில்லை. சில தொண்டு நிறுவனங்கள் நீளமான முடியை மட்டுமே வாங்குகிறது. முடியின் அடர்த்தி எப்படி இருக்கிறது என்பதையும் சில நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. பல நிறுவனங்கள் எல்லா வகையான முடிகளையும் வாங்குகின்றன. அதனால் நீங்கள் முடியை தானமாக கொடுக்க இருக்கும் தொண்டு நிறுவனம் எத்தகைய முடியை வாங்குகிறது என்பதை முதலிலேயே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
தானமாக கொடுக்கப்போகும் கூந்தலை இயற்கையான முறையில் பராமரித்து உலர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கூந்தலை எந்த பகுதியில் இருந்து வெட்ட போகிறீர்களோ அங்கு இறுக்கமாக ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். கூந்தலின் நுனிப்பகுதி வரை முழுவதுமாக வெட்டிவிடக்கூடாது. கூந்தலின் நீளமும், அடர்த்தியும் ஒரே அளவில் இருக்க வேண்டும். அதனால் கூந்தலின் நுனிப் பகுதிக்கு அருகில் மற்றொரு ரப்பர் பேண்டை மாட்ட வேண்டும். இரு ரப்பர் பேண்டுக்கும் இடையே கூந்தல் எவ்வளவு நீளம் இருக்கிறது? அந்த நீளம் தானமாக பெறும் நிறுவனத்தின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொண்டு முடியை வெட்ட வேண்டும்.
கழுத்தையொட்டி முதலில் மாட்டப்பட்டிருக்கும் ரப்பருக்கு இடையே சற்று இடைவெளி விட்டு முடியை வெட்ட வேண்டும். வெட்டப்பட்ட முடியின் அளவு சீராக இருக்க வேண்டும்.