ஆரோக்கியம்மருத்துவம்

கண்களில் பல வேலைகள்

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் போது கண்களை ஒரு கருவியால் படம் பிடித்திருப்பார்கள். அதாவது கண்களின் கிருஷ்ணபடலத்தின் ரத்தக்குழாய் அமைப்பே அதில் படம் பிடிக்கப்படுகிறது. ஐரிஸ் என்ற இந்த கிருஷ்ணபடலம் இரண்டு விதமான மெல்லிய தசைகளால் ஆனது. வெளிச்சம் அதிக அளவில் படும்போது சுருங்கிக் கொள்ள ஒரு வகை தசைகளும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது விரிந்து அதிக அளவில் ஒளியை உள்வாங்கிப் பார்க்க உதவும் ஒருவகை தசையையும் பெற்றுள்ளது.



இந்த தசைகள் இரண்டும் ஒளியின் அளவிற்கு ஏற்ப சுருங்கி விரிந்து, கிருஷ்ண படலத்தின் நடுவே இருக்கும் வட்ட வடிவிலான சிறு துளையான கண்மணி வழியே சீரான ஒளியை அனுப்புகின்றன. கருவிழி என்று அழைக்கப்படும் பகுதி உண்மையில் கருமையாக இருப்பதில்லை. பூவிதழ் அளவிற்கு மெலிதான கருவிழி கண்ணாடி போன்ற அமைப்பை உடையது.



உண்மையில் உள்ளிருக்கும் கிருஷ்ணபடலத்தையே நாம் கருவிழியின் வழியே காண்கிறோம். இந்த கிருஷ்ணபடலமானது தேவையான வெளிச்சத்தை மட்டும் உள்ளே அனுப்பும் வகையில் கேமராவின் இடைத்திரையை ஒத்திருக்கிறது. சருமத்தின் நிறத்திற்கும் கிருஷ்ணபடலத்தின் நிறத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்தியா போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் சருமம் கருப்பு அல்லது மாநிறமாக இருப்பது போல, கிருஷ்ணபடலமும் கருப்பு நிறத்தில் அமைந்திருக்கும்.

இதுவே குளிரான தட்பவெப்பம் கொண்ட நாடுகளில் கண்ணின் கிருஷ்ணபடலம் சற்று வேறுபட்ட நிறத்தில் இருக்கலாம்.

உங்கள் கண்களில் டார்ச் லைட் அடித்துப் பார்த்தால், அப்போது கண்களில் உள்ள கண்மணி போதுமான அளவு சுருங்கி விரிந்தாலே கண்களில் பல வேலைகள் சீராக நடப்பதாக பொருள்.

கிருஷ்ணபடலத்தின் பின்புறம் விழி முன்னறைப் படலம் என்றழைக்கப்படும் ‘அக்வஸ் ஹியூமர்’ என்ற திரவம் அமையப்பெற்றுள்ளது. இது கண்ணின் உட்பகுதிகளுக்கு ஊட்டம் அளிக்கவும், கண்ணிலுள்ள நீர் அழுத்தத்தை சீராக வைக்கவும், கழிவுகளை அகற்றவும் மிகவும் அவசியமான ஒன்று.

கண்களின் உட்பகுதியில் சுரக்கும் இந்த நீரானது தன் பணிகளைச் செவ்வனே முடித்து கிருஷ்ணபடலத்தின் ஓரங்களில் அமைந்திருக்கும் அலசல் போன்ற சிறு துளைகளின் வழியே வெளியேறி ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker