ஆரோக்கியம்மருத்துவம்

மன அழுத்தத்தினால் வரும் நீரிழிவு நோய்

மன அழுத்தத்தினால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என்று எத்தனை பேருக்குத் தெரியும். நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. சிந்தித்து பாருங்கள். புலி உங்களை சமீபத்தில் துரத்தியதா? தினமும் காலையில் அவசர கதியில் அலுவலகம் செல்லும் உங்களைத் துரத்தும் பதற்றம்தான் அந்தப்புலி. ஆதிகால குகை மனிதனை புலி துரத்தும் பொழுது, அவனது உடலும் மனமும் பதற்றமடைகிறது, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, அட்ரீனலின் என்கிற ஹார்மோன் சுரக்கிறது. உடல் ரத்தத்தை ஜீரண உறுப்புகளில் இருந்து பிரித்து தசைகளுக்கு செலுத்துகிறது, இந்த சமயத்தில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை இருக்காது.அப்போது புலியிடம் இருந்து தப்பிக்கும் மனிதன் குகைக்குள் ஓய்வு எடுக்கிறான். 20 நிமிடம் ஆனதும் அவனின் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உங்கள் உடம்புக்கு புலி துரத்துவதும் அலுவலகதிற்கு அவசரகதியில் ஓடுவதற்கும் வித்தியாசம் தெரியாது, ஆகையால் குகை மனிதனுக்கு உண்டான அதே மனப் பதற்றம் உங்களுக்கும் ஏற்படுகிறது.

உங்களுக்கும் குகை மனிதனுக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கிறது. குகை மனிதன் ஓய்வு எடுக்கிறான். ஆனால் நீங்கள் ஓய்வெடுப்பது இல்லை. நாள் முழுவதும் அடுத்தடுத்து பம்பரம் போல சுழல்கிறீர்கள். ஆரோக்கியமற்ற உணவு வகைகளை நாடுகிறீர்கள், இதனால் உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நாள்பட்ட வியாதிகளான நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தள்ளப்படுகிறீர்கள்.

சிறுநீரகத்தின் மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி அனைத்து வகையான ஹார்மோன்களையும் உடலுக்கு வினியோகிக்கிறது. மன பதற்றம் அட்ரீனல் சுரப்பியைச் சோர்வடைய வைக்கிறது. ஆகையால் மன சோர்வு அனைத்து வகை நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது.

குறிப்பாக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று அறிந்தவுடன் உங்கள் சிந்தனை இப்படி இருக்கக் கூடும். நமக்கு நோய் வந்திருக்கிறதா என்று சந்தேகம் எழும். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் எனக்கு மட்டும் இந்த நோய் வருகிறது என்று கோபம் ஏற்படும். எவ்வளவு செலவானாலும் என்னைக் காப்பாற்றி விடுங்கள் என்று மருத்துவரிடமோ, உறவினர்களிடமோ, கடவுளிடமோ கெஞ்சுவோம். நீரிழிவு நோய், உடலின் அனைத்து பாகங்களையும் பாதித்து விடுமே, நான் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று மன அழுத்தம் கொள்வது. சரி, இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று ஏற்றுக்கொள்வது.என்ன செய்ய வேண்டும்? உங்களை நீங்களே அமைதிப்படுத்த ஒரு குகையை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள். உணவை மெதுவாக, நிதானமாக ரசித்து, உணர்ந்து சாப்பிடுங்கள். அலுவலகம் செல்லும் பொழுது பாடல்களைக் கேட்டுக்கொண்டே போகலாம்.

அனாவசியமாக தொலைபேசி, செல்போன்கள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. நேரத்திற்கு சத்தான உணவு உண்பது அவசியம்.இரவு நீண்ட நேரம் விழிக்காமல் குறித்த நேரத்தில் தினமும் தூங்க செல்லுங்கள். நேரத்தை கையாளும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்.

மன அழுத்தத்தாலும் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும் என்பதை உணர வேண்டும். நேர்மறை எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, சீக்கிரமே குணமாகும். நேற்றைய தினத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. ஆனால் நாளைய தினத்தில் வெற்றியா, தோல்வியா என்பதை நாம் நிர்ணயிக்க முடியும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker