குழந்தையும்.. அழுகையும்.. பாட்டும்..
முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு அதனை பராமரிப்பது சவாலான விஷயமாக இருக்கும். குழந்தை அவ்வப்போது அழுது கொண்டே இருக்கும். அது எதற்காக அழுகிறது என்பதை சட்டென்று யூகிக்கவும் முடியாது. பெரும்பாலும் குழந்தைகள் பசிக்காக அழும். சிறுநீர் கழித்து உடல் ஈரப்பதமாக இருந்தாலும் அழும். தூக்கம் வருவதற்காகவும் அழும். பச்சிளம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பது அதன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஒருசில செய்கைகள் மூலம் தாயார் குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்தலாம்.
பச்சிளம் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு தாயின் அருகாமை மிக முக்கியம். தாயின் குரல் குழந்தைக்கு நம்பிக்கையை கொடுத்து அமைதிப்படுத்தும். பெரும்பாலான தாய்மார்கள் இதனை கவனத்தில் கொள்வதில்லை. பொம்மையையோ, கிலுக்கு போன்ற ஏதாவதொரு விளையாட்டு பொருளையோ காண்பித்து அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பார்கள். அவற்றின் சத்தம் குழந்தையை மிரளவைக்கும். தாயின் குரல்தான் குழந்தைக்கு பரீட்சயமானது. அதனால் தாலாட்டு பாடலாம். வேறு ஏதாவது பாடலும் பாடலாம். பாட்டு தாயின் குரலில் வெளிப்பட வேண்டும். தாயின் குரல் குழந்தைக்கு அருகாமையையும், ஆறுதலையும் கொடுக்கும். அழுகையையும் நிறுத்த உதவும்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் மடியில் எடுத்து வைத்து முன்னும், பின்னும் அசைக்கலாம். வயிற்றுடன் அரவணைத்து மென்மையாக வருடலாம். அது குழந்தைக்கு கருவறைக்குள் இருந்ததை நினைவூட்டுவதாக அமையும்.
கைவிசிறியை கொண்டு வீசியபடி குழந்தையுடன் பேசிக்கொண்டிருக்கலாம். குழந்தையின் கைகளை பற்றிக்கொண்டு முன்னும், பின்னும் அசைத்து குஷிப்படுத்தலாம். அதுவும் குழந்தையை அமைதிப்படுத்தும்.
தொடர்ந்து படுத்த நிலையிலேயே இருப்பது குழந்தைக்கு அசவு கரியத்தை ஏற்படுத்தும். சலிப்பையும் உண்டாக்கும். அதனாலும் அழுது கொண்டிருக்கும். குழந்தையை எடுத்து தோளில் போட்டு சிறிது நேரம் அங்கும், இங்கும் நடமாடலாம். நகரும் தொட்டிலாக இருந்தால் அங்கும் இங்கும் நகர்த்தி உலா வரச்செய்யலாம்.
குழந்தையின் உடல் முழுவதும் போர்வையை சுற்றி தூங்க வைக்கலாம். அது கருவறைக்குள் இருந்தது போன்ற உணர்வை குழந்தைக்கு ஏற் படுத்தும். கதகதப்பான சூழலையும் ஏற்படுத்தி கொடுக்கும். ஆழ்ந்து தூங்குவதற்கும் வழிவகை செய்யும்.