தாய்மை-குழந்தை பராமரிப்பு

ஊட்டச்சத்து வழங்குவோம், குழந்தைகளை காப்போம்

உலகளாவிய பசி குறியீடு பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் குவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 117 நாடுகளின் உலகளாவிய பசி குறியீடு 2019 பட்டியலில் (ஜி.ஹெச்.ஐ.) இந்தியா 103-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான சீனா (25-வது இடம்), இலங்கை (66), மியான்மர் (69), நேபாளம் (73), வங்காளதேசம் (88) மற்றும் 94-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.



ஜி.ஹெச்.ஐ. பட்டியலில் இந்தியா பெற்ற இடம், போதுமான உணவின்மை, தரம் குறைந்த உணவு, குழந்தைகள் வளர்ப்பில் போதுமான அக்கறை செலுத்தப்படாத தன்மை, சுகாதாரமற்ற சூழல்கள் போன்றவற்றை சுட்டுகிறது. உலகில் இரண்டாவது பெரிய உணவு உற்பத்தி நாடான இந்தியாவில்தான் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட மக்களின் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவதாக இருப்பதாக ஜி.ஹெச்.ஐ. அறிக்கை கூறுகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகிய நான்கு குறிகாட்டிகளின் அடிப்படையில் ஜி.ஹெச்.ஐ. கணிக்கப்படுகிறது.

இந்தியாவின் தர வரிசை எண் 102-க்கு பதிலாக 91 ஆக இருக்க வேண்டும் என்று கூறி நிதி ஆயோக்கின் துணைத்தலைவரான ராஜிவ் குமார் தலைமையிலான குழு ஒன்று ஜி.ஹெச்.ஐ. தரவரிசை 2019-ஐ உடனடியாக கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

விரிவான தேசிய ஊட்டச்சத்து கணக்கெடுப்பின் (சி.என்.என்.எஸ். 2016-18) ஆய்வுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு மற்றும் கடந்த ஆண்டு தர வரிசை எண்களை ஒப்பிட்டால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு ஜி.ஹெச்.ஐ. அறிக்கை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளுக்கு இணையான முறையில் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

2018-ல் 132 உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இருந்தது. 2017-ல் இதை உருவாக்கும் வழிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களினால் 119 உலக நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் இருந்தது.

உதாரணமாக 2016-18 காலகட்டத்தின் சராசரி மதிப்பை கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டை ஜி.ஹெச்.ஐ. கணக்கிட்டுள்ளது; 2014-18-ஐ கொண்டு குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றை கணக்கிட்டுள்ளது.



2017 ஆய்வுகளை கொண்டு ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணம் (உலக வங்கி, எப்.ஏ.ஒ., டபிள்யு.ஹெச்.ஒ. மற்றும் யுனிசெப்) பற்றி கணக்கிட்டுள்ளது. சி.என்.என்.எஸ். (2016-18) தான் மிக சமீபத்தில் செய்யப்பட்ட கணக்கெடுப்பாகும்.

இது ஒரு மூன்றாவது நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் பிறப்பில் இருந்து 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சிறார்களின் ஊட்டச்சத்து அளவுகளை பற்றி செய்யப்பட்ட கணக்கெடுப்பாகும்.

1.1 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளை பற்றிய ஆய்வுகள் மாநில அளவில் சேகரிக்கப்பட்டன. வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை வெகு வேகமாக ஆண்டுக்கு 1.8 சதவீதம் குறைந்துள்ளதாக சி.என்.என்.எஸ் ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.

இது இதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு விகிதமாகும். வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை 38.4 சதவீதத்தில் (2015-16) இருந்து 34.7 சதவீதமாக குறைந்துள்ளது.

உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை 21 சதவீதத்தில் இருந்து 17.3 சதவீதமாக குறைந்துள்ளது. எடை குறைவாக உள்ள குழந்தைகளின் விகிதம் 35.7 சதவீதத்தில் இருந்து 33.4 சதவீதமாக குறைந்துள்ளது.

2017-18-ல் தொடங்கி 2019-20-க்குள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றை வெகுவாக குறைக்க தமிழக அரசு ஒரு அதிகபட்ச இலக்கை நிர்ணயித்துள்ளது.

“ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய நான்கு வழிமுறைகள் உள்ளன. குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமல் இருக்கும் தன்மை, வயதிற்கு ஏற்ற உயரமில்லாமல் இருக்கும் தன்மை, ரத்த சோகை மற்றும் எடை குறைவு. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக பல்வகை ஊட்டச்சத்து திட்டத்தை டி.என்.ஐ.என்.பி. (தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டசத்து திட்டம்) முதன் முதலில் 1990-களில் தொடங்கிய மாநிலம் தமிழகம் தான். பின்னர் இது மத்திய அரசின் ஐ.சி.டி.எஸ். (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம்) திட்டத்துடன் இணைக்கப்பட்டது” என்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் செயலாளர் எஸ்.மதுமதி கூறுகிறார்.

“திட உணவு பழக்கத்திற்கு மாறத்தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும் வழங்கினோம். இது சில சமயங்களில் மோடக் (உருண்டை) அல்லது லட்டு வடிவத்தில் அளிக்கப்பட்டது. இதை தாய் மற்றும் சேய் இருவரும் உண்ண முடியும். அருகில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று தாய்மார்கள் இவற்றை உட்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் போதுமான அளவுக்கு சத்தான உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய முடியும். குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதை பொது வினியோக திட்டம் உறுதி செய்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளுக்காக ஒரு முழுமையான 1000 நாட்கள் ஊட்டசத்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து அளிப்பதில் நாம் மிகச்சிறப்பாக செயல்படுகிறோம்” என்கிறார் மதுமதி.

ஜெ.பி.ஏ.எல் (பொருளியல் துறையில் 2019 நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டப்லோ ஆகியோரின்) அமைப்பை ஆய்வுகளை செய்யவும், தரவுகள் சேகரிப்பை பலப்படுத்தவும் தமிழகம் அமர்த்தியுள்ளது.

“இந்த திட்டங்களில் செலவுகளுக்கேற்ற பலன்கள் ஏற்படுகிறதா? என்பதை கண்டறிய 5 மாவட்டங்களில் பெரிய அளவில் சீரற்ற சோதனை மதிப்பீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஒரு முதல் ஆய்வில் அங்கன்வாடி ஊழியர்கள் சந்திக்கும் இடர்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு ஆரம்ப கால குழந்தைப்பருவ ஊட்டச்சத்து மற்றும் கல்வி சேவைகள் அளிப்பில் உள்ள போதாமைகளை கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் தகவலறிந்த யோசனைகள் உருவாக்கப்பட்டு அங்கன்வாடி ஊழியர்களை ஊக்கப்படுத்தும் செயல்திட்டங்கள், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கூடுதல் ஊட்டச்சத்து உணவுகளை வழங்குதல் போன்றவை மூலம் ஐ.சி.டி.எஸ். திட்டத்தை பலப்படுத்த உதவியுள்ளது” என்கிறார் ஜே.பி.ஏ.எல். தெற்கு ஆசியாவின் திட்ட இயக்குனரான அபர்ணா கிருஷ்ணன்.

இந்த இலக்குகளை அடைய 2019-20-ல் ரூ.2,236.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீதம் மத்திய அரசு அளிக்கும். தமிழகத்தின் முயற்சிகளுக்கு ‘போஷன் அபியன்’ பரிசு முதல் முறையாக அளிக்கப்பட்டுள்ளது.

திறன் கட்டமைப்பு, குவிதல். நடத்தை மாறுதல்கள் மற்றும் சமூக பங்களிப்பு ஆகியவற்றில் முதல் இடத்தை பெற்றுள்ளது. ஐ.சி.டி.எஸ்.இன் பயன்பாட்டு மென்பொருளை செயல்படுத்தியதில் இரண்டாம் பரிசை வென்றுள்ளது. ஐ.சி.டி.எஸ் தகவல்களை தினமும் பதிவேற்றம் செய்ய சுமார் 54,000 ஸ்மார்ட்போன்கள் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு வினியோகப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான முழுமையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதில் முக்கியமாக கிராமப்புறங்களில் தனித்துவமான சவால்கள் உள்ளன. கஞ்சி, திணை போன்ற பாரம்பரிய உணவுகளில் இருந்து பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கும், பச்சை காய்கறிகளுக்கு பதிலாக சிப்ஸ், வாயு நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், பன்கள், பர்கர், பீட்சா, நூடூல்ஸ் மற்றும் இதர பேக் செய்யப்பட்ட உணவுகள் போன்ற ஜங்க் உணவுகளுக்கு மாறி விட்டனர்.

\


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker