அனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா
டான்ஸ் யோகா, தண்ட யோகா… இப்படி வித்தியாசமான பல யோகாசனங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இவற்றையெல்லாம்விட வித்தியாசமான ஒரு யோகா ஒன்று உண்டு… அது, சிரிப்பு யோகா.
சிரிக்கும்போது, உடலின் முக்கியமான பல நரம்புகள் செயல்படுவதாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்திருக்கின்றன. எனவே, யோகாவையும் சிரிப்பையும் இணைத்துத் தரும்போது அது தேன் தடவிய மருந்தாகிறது.
யோகா என்றாலே ‘அது வயதானவர்களுக்கானது’ என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமானது. மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றைக் கடுமையான பயிற்சிகளாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், சிரிப்பு அதனுடன் இணையும்போது அனைவரும் ஆர்வமாக செய்ய முன்வருகின்றனர்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு முன்னால் இன்று பல்வேறு சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்திருக்கிறது… போட்டிகளும் அதிகம். இதனால், எப்படியாவது முன்னேறிச் செல்லவேண்டும் என்ற நெருக்கடிக்கு எல்லோருமே உள்ளாகிறார்கள். இதன் காரணமாக, மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால் எண்ணற்ற நோய்கள் உண்டாகின்றன.
எளிமையாகச் செய்யவேண்டிய வேலைகளைக்கூட பதற்றத்துடன் செய்யும்போது அரை மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வேலைக்குக்கூட இரண்டு, மூன்று மணி நேரம் ஆகிறது. இதனால் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் சிரிப்பு யோகா ஆகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. இது, இவர்களின் பதற்றத்தை, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. வேலையில் உற்சாகத்தோடு செயல்படவைக்கிறது.
நம் நுரையீரலில் 6.8 லிட்டர் அளவு அசுத்தக் காற்று உள்ளது. நாம் சிரிக்கும்போது 5 லிட்டருக்கும் மேல் அசுத்தக்காற்று வெளியேறி, அதே அளவுக்கு நல்ல காற்று உள்ளே செல்கிறது. இது உடலுக்கு உற்சாகத்தைத் தரும். மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் சிரிப்பு யோகா நல்ல மருந்து. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செய்துவந்தால், அதிலிருந்து குணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு யோகா இது. சிறார்கள் விருப்பத்தோடும் மகிழ்ச்சியோடும் செய்துவருகிறார்கள். வயதானவர்களும் சிரிப்போடு துள்ளிக் குதித்துக்கொண்டே இந்த யோகாவைச் செய்துவருகிறார்கள். முதியவர்களும் குழந்தைகளாக மாறிப் போகிறார்கள். மிகவும் நெருக்கடியான இன்றைய வாழ்க்கைச்சூழலில் அனைவருக்கும் அருமருந்தாக சிரிப்பு யோகா இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.