நடக்க மறந்த கால்கள்…
நீண்ட தூரம் நடப்பவன் நெடுநாள் வாழ்வான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்றைய மனிதன் உடையைக் கவனிக்கும் அளவிற்கு நடையைக் கவனிப்பதில்லை. நடைகளில் அன்னநடை, கம்பீரநடை, பொடிநடை, ராஜநடை, ஒய்யாரநடை, வேகநடை, மிதநடை என்று பல நடைமுறைகள் இருந்தாலும் நடைமுறையில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
நடைக்கும், உடைக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு இருப்பதால் தான் எல்லோருமே நடையுடையாக இருப்பதையே விரும்புகிறோம். ஏனெனில் நடக்கிற மனிதனே வெளியே புறப்படும்போது உடை உடுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. பழங்காலத்தில் நடப்பதனால் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் நன்மைகளை உணர்ந்தே பாதயாத்திரை செய்தார்கள். யாத்திரை செய்யும் பாதங்களே நல்ல நித்திரையை கண்களுக்கு கொடுப்பதோடு மாத்திரைகளையும் மறக்கச்செய்கிறது. இறைநினைவோடு அவன் எடுத்துவைத்த அடிகள்தான் மனநிறைவோடு நலமுடன் வாழச்செய்தது.
குழந்தையில் நடைவண்டியில் நடக்கப்பழகிய நாம் காலங்கள் கடக்க கடக்க நடக்கவே மறந்துபோனோம். வீழ்ந்து எழும் குழந்தைகளே வீழ்ச்சிக்குப்பிறகும் வெற்றி என்பதனை உணர்ந்துகொள்கிறது. இன்று நடைவண்டிகளையும் நாகரிகம் ஆட்கொண்டதால் மழலைகள் நடக்குமுன்னே பறக்கமுனைகிறது. அல்லும் பகலும் ஆசனத்திலேயே அமர்ந்து வேலை செய்பவர்கள் யோக ஆசனங்களை செய்யத்தொடங்கிவிட்டார்கள். அசையாமல் அமர்ந்தே பணிசெய்பவர்கள் நடந்தே பிணிபோக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள். உழவனுக்கும் தொழிலாளிக்கும் நடைக்குப்பயிற்சி தேவையில்லை. அவன் அசைவுகள் அத்துணையும் ஆரோக்கிய பயிற்சிகள்தான்.
வேலைகளை மூளைகளால் மட்டுமே செய்வோரும் உடல் அசைவின்றி உழைப்போரும் நாளெல்லாம் நாற்காலியில் அமர்ந்துகொண்டு சொந்தக்காலிலே நிற்கிறேன் என்று சொல்வோரும் உடல் உழைப்புக்கு நீண்ட ஓய்வு கொடுப்போரும் நடைப்பயிற்சி நாள்தோறும் செய்வது சிறந்தது. காரணம் உடல் உழைப்பு இல்லாமல்போனால் நோய்கள் நம் உள்ளுறுப்புக்களை உறுதியாகப் பிடித்துக்கொள்ளும்.
எடுத்துவைக்கும் முதல் அடியே ஆயிரம் மைல் பயணத்திற்கும் அஸ்திவாரமிடுகிறது. நடந்துகொண்டே இருப்பதால் எறும்பின் கால்களும் இரும்பாக மாறும். மான்களின் கால்கள் மலையையும் தாண்டும். நண்டுக்கால்களும் தண்ணீரிலும் தரையிலும் எதிர்நீச்சல் போடும். குதிரையின் கால்கள் பல குதிரைசக்திகளை வெளிப்படுத்தும். சிலந்தியின் கால்களும் சிற்பங்களை செதுக்கும். ஆனால் மனிதக்கால்கள் மட்டும் மறத்துப்போகலாமா?. நடக்க மறந்தும் போகலாமா?
உலக சுகாதார நிறுவனம் வாரம் 5 நாட்கள் நாளொன்றுக்கு 30 நிமிடங்கள் வீதம் 150 நிமிடங்கள் நடந்தாலே நல்ல பலனைப்பெறலாம் என்று பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சியின் அரசன் நடைப்பயிற்சிதான். எளிமையானதும் எந்த செலவுமில்லாதது. அதிகாலை எழும் பறவையே அதிக தூரம் பறந்து செல்லுமாம். நடைப்பயிற்சிக்கு காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 5 லிருந்து 6.30 மணி வரை உகந்த நேரம்.
நிசப்தமான சூழலும் பறவைகளின் பரவச ஒலியுடனும் இயற்கை காற்றை இன்பமாய் சுவாசித்து நடையைத் தொடங்குவது நாட்களுக்கே நல்ல தொடக்கமாகும். தொற்று நோய் தாக்காதவாறு பல காலணிகளை அணிந்துகொண்டு நடந்தாலும் வெறுங்கால்களால் நடக்கும் நடைப்பயிற்சியே நல்ல பலன்களை தருவதாக ஆய்வுகள் கூறுகிறது. கால்கள் மண்ணில்படும்பொழுது பூமியிலுள்ள எலக்ட்ரான்களுக்கும் உடம்பிற்கும் உறவுப்பாலம் ஏற்பட்டும் மண்ணின் சக்தி மனித சக்தியை உயரத்துகிறது.
எனவேதான் மண்ணிற்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு என்று உணர்த்தவே மசக்கையிலும் மண்ணைத் திண்கிறார்கள் பெண் என்று கூறுவதுண்டு. டைப்-2 வகை சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சியின் போது கால்களில் காயங்கள் ஏற்படாதவாறு தடுக்கவும் நகரங்களில் உள்ளவர்களை தொற்றுநோய் தாக்காதவாறு காக்கவும் எளிய பாதுகாப்பான காலணிகளை அணிந்துகொள்வது தவிர்க்கமுடியாதது.
சகோதரர்கள் இருவர் ஒருஜோடி செருப்புவாங்கினார்கள். அண்ணன் பகலிலும் தம்பி இரவிலும் அணிந்துகொள்வதாகவும் பேச்சு. செருப்பு தேய்ந்தும் மறுஜோடி செருப்பு வாங்க அண்ணன்தம்பியிடம் கேட்டான். இரவு முழுவதும் நடந்து நடந்தே என் தூக்கம்தான் கெட்டுப்போனது என்றான் தம்பி. செருப்பை மட்டும் தேய்க்கும் நடைகள் பயனற்றது. நடக்கும்பொழுது குதிகால் முதலில் தரையில் படும்படியும் பிறகு முன்பாததசைகள் படும்படியும் நடக்க பழகிக்கொள்வது சிறந்தது. நன்கு கைகளை வீசி நிமிர்ந்து நடத்தல் அவசியம்.
கைவீசம்மா கைவீசு கடைக்குப்போறேன் கைவீசு என்ற குழந்தைப்பாடல் நடைப்பயிற்சியையே குறிக்கிறது. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் பாரதி. இன்று வீடியோ கேம்ஸ் விளையாடு பாப்பா வீட்டைவிட்டு வெளியே விளையாடாதே பாப்பா என்று நாம் மாற்றிவிட்டதால் குழந்தைகளையும் நடைபயிற்சியில் பழக்குவது நல்லது.
பள்ளிகளில் விளையாட்டு முறைகள் குழந்தைகளின் உடல்உழைப்பினை மேம்படுத்தும் வகைளில் இருப்பது அத்தியாவசியமாகிறது. உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி நல்ல பலனை தருகிறது. நொறுக்குத் தீனிகளையும் காபி டீயும் இடையிடையயே சாப்பிட்டுக் கொண்டே நடப்பதனால் கலோரிசக்தி அதிகமாகும் தவிர குறையப்போவதில்லை. உடல் எடை நடைப்பயிற்சிக்குப்பிறகு குறைந்திருக்கிறதா என்று நாயுடன் நடைப்பயிற்சி செல்பவரிடம் கேட்டார்கள். 2 கிலோ குறைந்திருக்கிறது எனக்கல்ல என் நாய்க்கு என்று பதில் வந்தது.
அரைமணி நேர நடை 300 கலோரி சக்திகளை எரித்து எடையை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் சீர்படவும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் நடைபயிற்சி உதவுகிறது. தீமை விளைவிக்கும் எல்.டி.எல் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நன்மை விளைவிக்கும் எச்.டி.எல் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கவும் நடைபயிற்சியே நன்மைபுரிகிறது. உலக சுகாதார நிறுவனம் உலகெங்கும் இதயநோயினால் ஆண்டுக்கு 25 லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள் என்றும் இந்தியாவில் 100ல் 14 பேருக்கு தற்போது இதயநோய்கள் இருப்பதாகவும் கூறுகிறது.
இளமையிலேயே நடக்கத்தொடங்கியவர்களின் இதயம் முதுமையிலும் நன்கு சுருங்கிவிரிவதாகவும் இதயத்தசைகள் பலமுடன் செயல்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகிறது. நுரையீரல் நன்கு விரிந்து பிராணசந்திகளின் பரிமாற்றம் நன்கு நடைபெற்று. கல்லீரல் கணையம் இதயம் செரிமான உறுப்புகள் நன்கு செயல்பட நடைபயிற்சி பயன்படுகிறது. மனிதனுக்கு மானத்தைப்போல் பராமரித்து பாதுகாக்கப்படவேண்டியது செரிமானமும் தான். என்சைம்களை அதிகளவு உற்பத்திசெய்து உடம்பின் மெட்டபாலிச செயல்பாடுகளை தூண்டி செரிமானத்தை சீராக்க நடைபயிற்சி முக்கிய பங்காற்றுகிறது.
இன்று சர்க்கரை நோயை விரட்ட அக்கறை உள்ளவர்கள் எல்லாம் நடைபயிற்சியை நங்கூரமாக வைத்திருக்கிறார்கள். சர்க்கரை எனும் நீரழிவு நோயால் இந்தியாவில் 50 பேர் இறக்கிறார்கள். உலகளவில் 51.1 கோடியாக இருக்கும் சர்க்கரை நோய் 2030-க்கும் 63.4 கோடியாக அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் சுமார் 1 லட்சம் குழந்தைகள் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் சுமார் 7 கோடி பேரும் சீனாவில் 11 கோடி பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. டைப் 2 வகை நீரழிவு நோயாளிகள் நடைப்பயிற்சியால் நல்லமுன்னேற்றம் அடைகிறார்கள். கணையத்தில் உள்ள பீட்டாசெல்கள் தூண்டப்பட்டு தடைப்பட்டிருக்கிற இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்தி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.
புதிதாக நடைபயிற்சி செய்வோர் எடுத்தவுடன் அதிக தூரம் நடக்காமல் முதல்நாள் 25 நிமிடங்கள் குறைந்த தூரத்தை நிர்ணயித்து நடைபயிற்சி பழக்கப்பட்டவுடன் சிறிதுசிறிதாக தூரத்தை அதிகப்படுத்தலாம். இதயநோய் அடிக்கடி மயக்கம் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடையோர் மருத்துவரின் ஆலோசனை பெற்று நடைபயிற்சி செய்வது சிறந்தது தொடர்ந்து நடைபயிற்சிசெய்வோரின் தசைகள் எலும்புகள் நன்கு பலப்படுவதால் மூட்டுவலி, முதுகுவலி பிரச்சினைகள் வராது. ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் ஞானத்துடன் விளங்க அவர்களின் நடையும் காரணமாகும்.
நடைபயிற்சியால் ஞாபகசக்தியுடன் தொடர்புடைய மூளையின் கிப்போகாம்பஸ் பகுதி தூண்டப்பட்டு நல்ல ஞாபகசக்தி பெறப்படுகிறது. அமெரிக்காவில் மனநலமையங்களில் முதியோர்களின் மனஅழுத்தம் போக்க நடைபயிற்சி முக்கிய பயிற்சியாக அளிக்கப்படுகிறது. எடுத்துவைக்கும் அடியும் மனமும் ஒரே சிந்தையுடன் இருக்கவேண்டும். கைபேசியில் பேசிக்கொண்டும் நண்பருடன் உரையாடிக்கொண்டும் நடப்பதும் செல்லாத நடைபயிற்சியாகும். கால்கள் துரிதமாக செயல்பட தொடங்கினால் நோய்கள் நம்மீது செய்பட தயங்கும்ஆகையால் நமது உடம்புக்கு நன்மை நடக்கவேண்டுமா நாம் ஒன்று செய்யவேண்டும் அதுதான் நடக்கவேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே.