உறவுகள்

குடும்பத்தை மகிழ்விக்கும் சூத்திரம்

மனம் எப்போதும் எதிர்மறை நிலையில்தான் செயல்படும். அதற்கு நிறைகளைவிட குறைகளே தென்படும். வெள்ளைநிற வேட்டியில் புள்ளி அளவு கறை இருந்தாலும் அதுதான் கண்ணில் படும். அதுபோல் எந்தவொரு நல்ல விசயத்திலும் அதில் இருக்கும் சிறிய குறைபாடுதான் தெரியும். அதுபோன்றுதான் மக்கள் பிறரை எடை போடுகிறார்கள். குறைகளே அவர்கள் கண்ணுக்கு தெரிவதால் பிறரை குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒற்றை விரலை நீட்டி பிறரைக் குறை சொல்ல தொடங்கினால் மூன்று விரல்கள் தன்னை நோக்கி சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
உண்மையில் மேதாவிகள் பிறப்பதில்லை. நல்ல சிந்தனைகள் மூலம் உருவாக்கப்படுகிறார்கள். இதனை உணர்ந்து பிறரை குறை சொல்வதை தவிர்த்து, அவர்களது நிறைகளைச் சொல்லி தட்டிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளைப் பார்த்து பெரும்பாலான பெற்றோர்கள் ‘உன் வயதுதானே அவனுக்கும்… திறமையாக இருக்கிறான்.எல்லா விசயத்திலும் முதலாவதாக வருகிறான். நீ சுத்த வேஸ்ட்’ என்று புலம்புவார்கள். ஆண்கள் மனைவிமார்களிடம் ‘என்னதான் சமைக்கிறியோ… உப்புசப்பு இல்லாம இருக்கு. சாப்பிட முடியல நாக்கு செத்துப்போச்சு’ என்று அங்கலாயிப்பார்கள்.
அலுவலகத்தில் ‘என்னசார் பண்றீங்க? நேத்து வேலைக்கு வந்த பையன் எவ்வளவு அருமையா இந்த வேலையை செஞ்சிருக்கான் பாருங்க. நீங்க பத்து வருசமா இருக்கிறீங்க. ஒரு முன்னேற்றமும் இல்லை’ என்று மேலதிகாரிகளின் புலம்பல்.

இப்படி மனித மனம் எங்கும் எதிலும் யாரையாவது குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏன் இப்படி குறை சொல்கிறீர்கள்? என்று கேட்டால் எல்லாம் அவர்கள் நன்மைக்குதான் என்று சொல்லி அதற்கு அரை மணி நேரம் பாடம் எடுப்பார்கள். இப்படி தங்களின் குறை சொல்லும் குணத்துக்கு ஆளுக்கொரு காரணம் வைத்திருப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் சரிதானா? என்று கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். குறை சொல்வதால் ஒருவரை திருத்தி விட முடியாது. மாறாக அந்த நபர் மனம் நொந்து சஞ்சலப்படுவார். இதனால் மேலும் மேலும் அவர் செய்யும் வேலையில் தவறுகள் தான் ஏற்படும். உண்மையிலேயே ஒருவரது தவறை நீங்கள் திருத்த நினைத்தால் முதல் வேலையாக அவரை நீங்கள் குறை சொல்வதை நிறுத்த வேண்டும்.

ஏன்னென்றால் ஒருவரை நீங்கள் அடிக்கடி குறை சொல்ல தொடங் கினால் “உண்மையிலேயே நாம் எதற்கும் தகுதியில்லாதவர்கள்தான் போலிருக்கிறது” என்ற தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகிவிடுவார்கள். தன் குறைகளை திருத்தவே முடியாது என நம்பத் தொடங்கி விடுவார்கள். அதனால்அவர்கள் தனிமைப்பட்டு போவார்கள்.

பிள்ளைகளிடம் இருக்கும் குறைகளை சொல்லாவிட்டால் எப்படி அவர்கள் திருந்துவார்கள்? என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணம். ஆனால் உங்கள் குழந்தைகளை இந்த உலகம் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு முதல் வேலையாக அவர்களை நீங்கள் பாராட்ட வேண்டும்.



ஆனால் பலரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளையெல்லாம் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தனது திறமையால் ஏதாவது செய்தால் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்வ தில்லை. ஆனால் சிறிய குறைகள் இருந்தாலும் அதனை உற்றுப்பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறார்கள். குழந்தைகளின் மனதிலும் இது ஆழப்பதிந்து விடுவதால் அவர்களும் பிறர் குறைகளையே உற்றுப்பார்க்க தொடங்கி விடுகிறார்கள்.

நாம் என்ன செய்கிறமோ அதுதான் பிரதிபலிக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.

வாழ்வியல் முகாம் ஒன்றை நடத்திய போது அதில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி எழுந்து “என் கணவர் என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறையாவது கண்டுபிடித்து என்னை மட்டம் தட்டி பேசாவிட்டால் அவருக்கு தூக்கமே வராது. திருமணமாகி இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட மறந்தும் அவர் என்னை பாராட்டியது கிடையாது” என்று கண்கள் கலங்க சொன்னார்.

அவர் சொன்னதையெல்லாம் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த பயிற்சியாளர் சட்டென்று அவரிடம் ஒரு கேள்வியை கேட்டார். “உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அல்லவா? அவன் எப்படி இருக்கிறான். நன்றாக படிக்கிறானா?” என்றார்.



கணவரைப்பற்றி பேசினால் அதற்கு பதில் சொல்லாமல் பையனைப்பற்றி சம்பந்தம் இல்லாமல் கேட்கிறாரே என்று குழம்பிய அந்த பெண் “அவன் எங்கே உருப்படுவான். கொஞ்சம் கூட பொறுப்பில்ல. அப்படியே அப்பா மாதிரி. எதையும் எடுத்த இடத்தில் வைப்பதில்லை. தம்பியிடம் எதற்குகெடுத்தாலும் சண்டை. என்ன சத்தம் போட்டாலும் எங்கே திருந்துறான்” என்று மகனின் குறைகளை பட்டியலிட்டார்.

சற்றுமுன் கணவர் தன்னிடம் எதற்கெடுத்தாலும் குறை கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார் என எரிச்சல் பட்ட அந்த பெண் இப்போது தன் மகனைப்பற்றி கொஞ்சமும் சளைக்காமல் குறை சொல்லி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்.

நீங்கள் பிறரை குறை சொல்லும் போது அவர்கள் மேல் அக்கறை எடுத்து திருத்த முனைவதாக நம்புகிறீர்கள். ஆனால் அதுவே உங்களை யாராவது குறை சொன்னால் “இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்?” என்று ஆதங்கப்படுகிறீர்கள்.

குடும்பமோ, பணியிடமோ, வெளிவட்டாரமோ எதுவாக இருந்தாலும் எந்த விசயத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்துவதைவிட, அந்த விசயத்தில் பாராட்டும் படியான அம்சம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மன நிறைவு ஏற்பட்டு மற்றவரை பாராட்டும் பண்பு வளரும்.



தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் படித்த போது ஒரு நாள் அவரது ஆசிரியை ஒரு கடிதத்தை கொடுத்து அதனை அவரது அம்மாவிடம் கொடுக்க சொன்னார். அந்த கடிதத்தை வாங்கி படித்த எடிசனின் தாய் கண் கலங்கினார். மகன் திருதிருத்தப்படி நிற்க “உங்கள் மகன் ஒரு மேதாவி. அவனுக்கு கற்றுக்கொடுக்கும் அளவு திறமை வாய்ந்த ஆசிரிகளோ வசதியே இங்கு இல்லை. எனவே அவனுக்கு நீங்களே உங்கள் வீட்டில் வைத்து கற்றுக்கொடுங்கள்” என்று எழுதியிருப்பதாக தாய் சொன்னார். அதைக்கேட்ட எடிசனின் முகம் பெருமிதத்தால் மலர்ந்தது.

பின்னர் அவர் வளர்ந்து பெரும் விஞ்ஞானியாக பேரும் புகழும் பெற்ற சமயத்தில் ஒரு நாள் வீட்டு பரணில் எதையோ தேடிய போது அந்த கடிதம் அவரது கண்ணில் பட்டது. தன்னை மேதாவி என்று அன்றே சொல்லப்பட்ட கடிதம் அல்லவா? இது என்று ஆர்வத்தோடு அதை படிக்க தொடங்கினார். அந்த கடிதத்தில் “உங்கள் மகன் அதிமுட்டாள். அவனுக்கு எங்களால் கற்பிக்க இயலாது. எனவே அவனை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என எழுதியிருந்தது”.

அப்போதுதான் எடிசனுக்கு ஒரு விசயம் புரிந்தது. தன்னிடம் பெரும் குறை இருப்பதாக சொல்லி பள்ளியில் இருந்தே நீக்கப்பட்ட பிறகும்கூட தன்னிடம் அளப்பரிய ஆற்றல் இருப்பதாக நம்பி, என்னையும் நம்ப செய்து என் குறைகளை காணாமல் நிறைகளில் மட்டும் கவனம் வைத்து என் ஆற்றலை மேம்படுத்தியவள் தன் தாய்தான் என்பதை உணர்ந்த அவர் இப்படி சொன்னார், “ஒரு ஜீரோ தன் தாயின் நம்பிக்கையால் ஹீரோவானான்”.

நிறைகள் சுட்டிக்காட்டப்படும் போது குறைகள் நிவர்த்தி செய்யக்கூடியவையாக ஆகிவிடும். எனவே எவரிடத்திலும் குறைகளை மட்டும் கண்டு குற்றம் சாட்டாமல், நிறைகளை பார்த்து பாராட்டினால் வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker