தாய்மை-குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை குஷிப்படுத்தும் எந்திரப் பொம்மைகள்

குட்டீஸ்… உங்களுக்கு செல்போன் வேண்டுமா? ரோபோ எந்திரப் பொம்மை வேண்டுமா? என்று கேட்டால் நிறைய பேர் பொம்மைகளைத்தானே சொல்வீர்கள்? எனக்கு செல்போன்தான் இஷ்டம் என்று சொல்லும் பாப்பா கூட, அண்ணன் ஒரு டிரோனை உங்கள் முன்னே பறக்கவிட்டால் செல்போனை கீழே வைத்துவிட்டு, டிரோன் பின்னால் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று நாள்தோறும் பொம்மைகளும் புதுவடிவம் பெற்று வருகின்றன. அப்படி உங்கள் மனம் மயக்கும் நவீன எந்திர பொம்மைகள் சிலவற்றை பார்ப்போமா?குட்டீஸ் உங்களுக்கு மாயாஜாலம் செய்வது என்றால் ரொம்பப் பிடிக்கும்தானே. ஹாரிபாட்டர் கையில் வைத்திருக்கும் மந்திரக்குச்சியால், தான் நினைப்பதை சாதிப்பதை நீங்கள் அதிசயமாக பார்ப்பீர்கள். அதுபோல ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு நீங்களும் மேஜிக் செய்வதுபோல பாவனை செய்வீர்கள் இல்லையா?

நிஜத்தில் அதுபோன்ற மேஜிக் செய்யும் மந்திர தொழில்நுட்ப குச்சி, விளையாட்டுப் பொருளாக வெளிவந்திருக்கிறது. ஹாரி பாட்டர் கானோ கோடிங் கிட் எனப்படும் இந்த மந்திரக்குச்சியை கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேம் விளையாட்டுகளையும், இன்னும் பல்வேறு கணினி இயக்கங்களையும் செயல்படுத்த முடியும்.

அதாவது ரிமோட் உங்கள் கையில் இருந்தால் எப்படி உங்களால் தூரத்தில் இருந்து எதையும் செய்ய முடிகிறதோ அதுபோல இந்த மந்திரக்குச்சியை மந்திரவாதிபோல அசைத்துக் கொண்டு, வீடியோ கேமில் இயக்கும் கார் மற்றும் பொருட்களை முன்னே போ, வேகமாகப் போ, நிறுத்து என்று கட்டளை கொடுக்கலாம். 70 விதமான இயக்கங்களுக்கு இந்த மந்திரக்கோலில் கோடிங் எழுதி வைத்திருக்கிறார்கள் தொழில்நுட்ப நிபுணர்கள்.நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டு, குச்சியை ஆட்டினால்போதும் டேப்லட்களிலும், உங்கள் ஸ்மார்ட் டி.வி.யிலும் நீங்கள் நினைக்கும் மாயாஜாலங்களை நிகழ்த்தலாம். கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த மேஜிக் வாண்ட் குச்சிக்கு ஏக கிராக்கி. இணையதளம் வழியாக ஆர்டர் கொடுக்க முடியும்.

ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தால் சிறிது நேரத்தில் உடைத்து பிரித்து மேய்ந்துவிடும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை தூண்டக்கூடியது நைன்டென்டோ லேபோ விளையாட்டுக் கருவி. அட்டைப் பெட்டி மற்றும் எலக்ட்ரானிக் பாகங்கள் இணைந்த விளையாட்டுப்பொருளான இதை பல்வேறு உருவங்களாக, விளையாட்டு பொருட்களாக செய்ய முடியும்.

பியானோ, வீடியோ கேம் திரை, மீன்பிடிக்கும் தூண்டில், ரோபோ உடை இன்னும் பல்வேறு உருவங்களைச் செய்ய முடியும். லீகோ பிரிக்ஸ் விளையாட்டுப் பொருட்களைவிட அதிகமாக குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டக்கூடியது இது. ஏராளமான வடிவங்களை செய்யும்வகையில் விதவிதமான லேபோ விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.புத்தக வடிவில் வரும் துப்பறியும் கதைகள் சிறியவர் பெரியவர் அனைத்தையும் ஈர்ப்பதாகும். அதை எலக்ட்ரானிக் மயமாக்கி, குழந்தைகளை துப்பறியும் நிபுணர்களாக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது ஆஸ்மோ டிடெக்டிவ் விளையாட்டு சாதனம். 8 வரைபடங்களுடன் கொடுக்கப்படும் குறிப்புகளைக் கொண்டு சரியான இடங்களை துப்பறிந்து கண்டுபிடித்தால் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்ந்துபோகும் இந்த விளையாட்டு குழந்தைகளை ரொம்பவே ஈர்த்துவிடும். துப்பறியும் ஆற்றலையும் வளர்க்கும். டேப்லட் அப்ளிகேசன் வழியே இதை விளையாடலாம். இன்னும் பல்வேறு ரோபோ பொம்மைகள், பறக்கும் டிரோன்கள் இன்றைய மழலைகளை மகிழ்விக்க வந்திருக்கின்றன.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker