சமையல் குறிப்புகள்
சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி
சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- மீல் மேக்கர் – 1/2 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1/2
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- பால் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு...
- தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (சிறியது)
- தக்காளி – 2 (சிறியது)
தாளிப்பதற்கு…
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
- பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!