ஆரோக்கியம்

உடல்நலத்தை தீர்மானிக்கும் உணவு பழக்கம்

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவு பழக்க வழக்கமே அவர்களது உடல்நலத்தை தீர்மானிக்கின்றன. இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்க முடியும்.

உணவு உடலுக்கு வலிமையைத் தருவது, வளர்ச்சியளிப்பது. உடலையும் உயிரையும் வளர்க்கும் அமுதமாகும். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் என்பது உலகறிந்த உண்மை. எனவே தான் பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்றது மணிமேகலைக் காப்பியம். இப்பிணிக்கு மருந்து உணவே. ஆதலால் தான் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே எனப் புறநானூறும் மணிமேகலையும் கூறுகின்றன.



திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென தமிழ் மருத்துவம் கூறுகிறது. முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது.

“மருந்தென வேண்டாமாம் யார் கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்“

என்பது திருவள்ளுவர் வாக்கு. அன்றாடச் சமையலில் சேர்ப்பனவற்றுள் மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்தமல்லி பித்தத்தை போக்கும், ஜீரகம் வயிற்று சூட்டைத் தணிக்கும், மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும். பூண்டு வலியை அகற்றி வயிற்றுப் பெருமலை நீக்கிப் பசியை மிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும். இஞ்சி பித்தத்தை ஒடுக்கும். தேங்காய் நீர் கோவையை நீக்கும். கறிவேப்பிலை உணவு விருப்பை உண்டாக்கும். நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும், அறிவுத் தெளிவையும் உண்டாக்கும். சீரகம், பூண்டு கலந்த நீர் சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவை

நோய்க்கு முதல் காரணம் உப்பு. இதனை குறைவாக சேர்த்தல் வேண்டும். ஊறுகாய், அப்பளம், கருவாடு, வறுத்த உருளைக்கிழங்கு சீவல், வாழைக்காய் சீவல், புளித்த மோர், கொழுப்பு நிறைந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, தயிர், நெய், வெண்ணெய், பாலாடை, இனிப்புக் கட்டி ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை ஒதுக்குதல் நல்லது.

உணவை விரைவாக விழுங்கக் கூடாது. நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும். அப்போதுதான் வாயில் உள்ள உமிழ்நீர் வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும். உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும் அது செரிக்காது. குடலும் தன் செரிமான ஆற்றலை இழந்துவிடும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.



தண்ணீரும் மருந்து

“ நீரின்றி அமையாது உலகு“ என்பது திருவள்ளுவர் கருத்து. எல்லா வகையான உணவு பொருள்களும் விளைவதற்கு காரணமாக அமைவது நீர். உண்ட உணவு குருதியுடன் கலப்பதற்கு குருதி தூய்மை அடைவதற்கும் உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் நீர் இன்றியமையாதது. மனிதன் நாளொன்றுக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல் நலனை விரும்புவோர் முறையான உணவு பழக்கத்தை மேற்கொண்டால் நெடுநாள் நலமாக வாழலாம். உண்பதற்காக வாழாமல் வாழ்வதற்காக உண்டால் மருந்து என்பதே உடலுக்குத் தேவை இல்லை.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker