புளி… நம் குடும்பத்தின் புலி!
புளிப்புச் சுவையைக்கொண்டிருந்தாலும் அமிர்தத்தின் சுவையைப் பிரதிபலிக்கும் உணவுக்கருவி புளி. சுவையின் பெயரிலேயே காரணப் பெயரைக் கொண்டிருக்கும் `புளி’ அஞ்சறைப் பெட்டியின் மணமூட்டியும்கூட. ரசத்துக்கு முழு பரிமாணம் தருவதில் தொடங்கி, குழம்பு, காரக் குழம்பு, வத்தல் குழம்பு, கிரேவி வகைகள் என உணவுகளை நளபாகமாக்குவதில் புளிக்கு ஈடு வேறில்லை. குழம்பு வகைகளுக்கு நிறத்தைக் கொடுக்கும் புளி, நம்மை ருசிக்கத்தூண்டவும் தவறுவதில்லை!
புளியின் தாயகம் ஆப்பிரிக்காவின் வெப்ப மண்டலப் பகுதிகளே. இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் அஞ்சறைப் பெட்டிப் பொருளாக பரிமளிக்கும் புளிக்கு ஆம்பிரம், சிந்தூரம், திந்துருணி, எகின், சிந்தம், சிந்தகம் போன்ற பல்வேறு பெயர்கள் இருக்கின்றன. பழங்கால அச்சுப் பதிவுகளில், புளி பயன்பட்டதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது. சமணர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பானங்களில், மாதுளை, பேரீச்சை போன்ற பழங்களுடன் புளியம் பழமும் இடம்பிடித்திருந்தது.
புளியைப் பற்றி நினைத்ததும் நாவில் எச்சில் சுரப்பதற்கு, புளிப்புத் தன்மை யுடைய ‘டார்டாரிக் அமிலம்’ அதிகளவில் குடியிருப்பதே காரணம். சுண்ணாம்புச் சத்து, ரிபோஃப்ளாவின், நியாசின், தயாமின் என அத்தியாவசிய நுண்ணூட்டங்கள் புளியில் நிறைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் காயங்களைக் குணப்படுத்த, நுரையீரல் பாதையைச் சீர்படுத்த, செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய, புளியை முக்கிய மருந்தாகப் பயன்படுத்து கின்றனர். புளியம் பழத்திலிருந்து எடுக்கப்படும் சத்து, பாம்பு விஷத்தை முறிக்கும் மருந்தாக வும் பயன்படுகிறது.