கவிதைகள்
கூடவே வளரும் கழுதை
கூடவே வளருகிற
ஒரு கழுதைக்கு
விதி என்று பெயர் சூட்டியுள்ளேன்.
என்னால் சுமக்க முடியாததை
ஆட்சேபிக்காத
அதன்மீது ஏற்றுகிறேன்.
என் இயலாமை, பாரம்,
தோல்வி, வலி,
உடையும் கனவுச்சில்லுகள்
அனைத்தையும் மூட்டை கட்டி
மறுப்பு தெரிவிக்காத
அதன்மீது கட்டுகிறேன்.
என் கண்ணீரை
என் வியர்வையை
என் காயத்தின் ரத்தத்தை
அதன்மீது துடைக்கிறேன்
அது வருந்துவதில்லை.
என் எதிர்மறைகளின்
எதிர்வினைகளுக்கு
அதைக் காரணப்படுத்துகிறேன்
அது இயல்பாகவே இருக்கிறது.
கயிற்றின் ஒருமுனையை
அதன் கழுத்திலும்
மறுமுனையை
என் கழுத்திலும் கட்டியுள்ளேன்.
சிலநேரம் அதை நான்
இழுத்துச்செல்கிறேன்
சிலநேரம் அது என்னை
இழுத்துச்செல்கிறது.
– வீ.விஷ்ணுகுமார்