ஆயில் புல்லிங் செய்வது நல்லதா?
ஏதேனும் ஒரு திரவத்தை வாய் முழுவதும் வைத்து கொப்பளிக்கும் ‘கவலகண்டூஷம்’ மற்றும் வாயில் பாதியாக நிரப்பி, கொப்பளிக்காமல் அப்படியே துப்புவதை ‘கவலகிரஹம்’ என இரண்டு முக்கிய சடங்குகளைச் சொல்கிறார்கள். மேலும், ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம். இப்போது வெளிநாட்டினர் தேங்காய் எண்ணெய் ஆயில்புல்லிங் முறையை இப்போது பிரபலப்படுத்துகிறார்கள்.’’
‘‘சாதாரணமாக நாம் தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர், வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்போம். இதுபோல் எந்த பிரச்சனையுமில்லாமல் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.
வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். கழுத்துவலி, கழுத்து சுளுக்கு, தொண்டைவலி, காதுவலி, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்கும் ஆயில் புல்லிங் சிறந்ததொரு சிகிச்சையாகும். பற்களில் உள்ள வெற்றிலைக்கறை, மஞ்சள் கறை நீங்கி பற்கள் வெண்மையாகப் பளிச்சிடும். சொத்தைப்பற்களால் வரக்கூடிய பற்கூச்சம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவும் நீங்கும்.’’
எப்படி செய்வது?
‘‘சூரிய வெளிச்சமுள்ள, காற்றோட்டமான இடத்தில் அமர்ந்துகொண்டு, கழுத்து, தோள் பட்டைகளில் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். திரவத்தை வாய் முழுவதுமாகவோ (கண்டூஷம்) அல்லது பாதியாகவோ (கவலகிரஹம்) என இரு முறைப்படியும் கொப்பளிக்கலாம். இதை ஒரு குறிப்பிட்ட மணி நேரம் என்றில்லாமல் வாயில் ஊற்றிய திரவமானது நுரைத்து, கெட்டியாக பசை போன்று வரும் வரையோ அல்லது கண், மூக்கு வழியாக தண்ணீர் வரும் வரை வைத்திருக்க வேண்டும்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தவிர, பால், பழச்சாறுகள், தேன் மற்றும் கோமியம் போன்றவற்றாலும் வாய் கொப்பளிக்கலாம். ஆனால், நல்லெண்ணெய்தான் மிகச்சிறந்தது. தேனுக்கு எரிச்சல், புண், வீக்கம் போன்றவற்றை ஆற்றும் குணம் உள்ளதால் தேனையும் உபயோகிக்கலாம்.
இதுதான் ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்ட சரியான முறை. இப்படி முறையாக செய்ய முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் வாயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவதும் பலன் தரும்.’’