கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப்பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.
கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.
* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.
* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.
* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.
* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.
* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.
* சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.