சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய பழம்
இந்த பழ ரகத்தின் பூர்வீகம் சீனா. அங்குதான் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஊட்டச்சத்து மிகுந்த இந்த பழத்தில் கலோரிகள் குறைந்த அளவே இருக்கிறது. இனிப்பு சத்து நிறைந்திருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கும் இது ஏற்றது.
இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது. இந்த பழ ரகத்தை இங்குள்ள சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் விளைவித்து பயன்படுத்தும் முயற்சியில் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஹிமாலயன் உயிர் வள தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். பரிசோதனை அடிப்படையில் அங்கு சாகுபடி செய்யப்பட்ட மோங்க் கொடிகள் நன்றாக வளர்ந்து எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சலை கொடுத்துள்ளன. அவை சர்க்கரையை விட 300 மடங்கு இனிப்பு கொண்டது.
இதுபற்றி ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘‘நம் நாட்டில் 6 கோடி பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பழம் அவசியமானது. பண்ணையில் விளைவித்து நாங்கள் மேற்கொண்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தன. இப்போது நாங்கள் மோங்க் பழத்தில் சாறு அளவை மேம்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ் விரைவில் கடைகளில் கிடைக்கும்’’ என்றார்.