உறவுகள்புதியவை

ஆண்களே தெரிந்துகொள்ளுங்கள் – மனைவிகளுக்கு இதெல்லாம் பிடிக்காதாம்

அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை. வெளியே அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள்போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கும். பெண்களை புரிந்துகொள்ளத் தெரிந்த ஆண்களால், மனைவியிடம் இயல்பான உறவினை மேற்கொள்ள முடியும். அவர்களால் மணவாழ்க்கையையும் மகிழ்ச்சிக்குரியதாக அமைத்துக்கொள்ள முடியும்.

பெரும்பாலான ஆண்கள் செல்போனுக்கு, மனைவியைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்போன் கையில் இருந்தால் உலகையே மறந்துவிடுகிறார்கள். கண் நிறைந்த மனைவியை அருகில் வைத்துக்கொண்டு, செல்போனில் கண்டதையும் பார்த்துக்கொண்டிருப்பதை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில ஆண்கள் காது வலித்து, வாய் சோர்ந்து போகும் அளவுக்கு செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசுபவர்கள் யாராக இருந்தாலும், பேசும் நேரம் என்பது முக்கியம். வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனைவி வெறுத்துப்போகும் அளவுக்கு ஆண்கள் வெளிநபர்களிடம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

மனைவி பெரும்பாலும் கணவர் எப்போது வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார். அப்படிப்பட்ட சூழலில் கணவர் போனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ இருந்தால் கணவர் தன்னை மதிக்கவில்லை என்ற முடிவுக்கு மனைவி வந்துவிடுவார்.

கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்போது காதலிக்க விரும்பும் பெண்கள்கூட வலைத்தளத்தில் அதிக பொழுதை செலவிடும் இளைஞர்கள் பக்கம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இதயத்தைவிட இணைய தளத்தையே அதிகம் பிடிக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

அதனால் பெண்களை கவர விரும்பும் ஆண்கள், இணையதள மோகத்தில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது. அதுபோல் இப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், தங்களை பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் தனியாக சந்தித்து பேசும்போது இணையதள மோகம் பற்றி வெளிப்படையாகவே கேட்டுவிடுகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளே கதி என்று கிடக்கும் ஆண்களை விபரம் தெரிந்த பெண்கள் கணவராக ஏற்றுக்கொள்வதில்லை.

தான் சொல்லுவதைதான் மனைவி கேட்க வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்களுக்கு உண்டு. முக்கியமான விஷயங்களை பற்றி முடிவெடுக்கும்போதுகூட பலர் மனைவியிடம் கருத்து கேட்பதில்லை. தானாக முடிவினை எடுத்துவிட்டு, பின்பு மனைவியிடம் தகவல் மட்டும் கூறினால் போதும் என்று அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். மனைவிகள் இப்போது முடி வெடுக்கும் அளவுக்கு தெளிவாக இருப்பதால், தங்களிடம் தகவல்கள் மட்டும் சொல்லும் கணவர்களை அவர்களுக்கு பிடிப்பதில்லை. தொடர்ந்து மனைவியிடம் தகவல் மட்டுமே சொல்லும் கணவராக நீங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் மனைவியிடம் அபிமானத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

கர்வம் என்பது ஆண்களில் சிலரது பிறவிக் குணம். ஒவ்வொரு செயலிலும் அவர்களது இந்த கர்வம் முன் வந்து நிற்கும். அதை கம்பீரம் என்று தவறாக கருதிவிடுகிறார்கள். தெளிந்த சிந்தனையும், அறிவார்ந்த செயலும்தான் ஆண்களுக்கு கம்பீரமே தவிர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அகந்தை கொள்வது கம்பீரம் அல்ல. கர்வம் கொண்டவர்கள் அற்ப விஷயத்திற்கெல்லாம் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அதன் மூலம் நிம்மதியை இழந்துகொண்டிருப்பார்கள். அதனால் ஆண்களின் அகந்தை பெண்களுக்கு பிடிக்காது.

தங்கள் உறவுகளைப் பற்றி பெருமையாகவும், மனைவியின் உறவுகளைப் பற்றி ஏளனமாகவும் பேசும் கணவன்மார்கள் இன்றும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. நாளடைவில் மனைவியின் அன்பைதான் இழக்க நேரிடும். அவர் அன்பை இழப்பது மட்டுமல்ல, அவர் யாரை எல்லாம் புகழ்ந்து பேசுகிறாரோ அவர்களையும் தனது மனைவி எதிரியாக கருதுவார் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. அதனால் ஏளன பேச்சு குடும்பத்தை கூறுபோட்டுவிடும் என்பதை உணருங்கள்.

மனைவியோடு பிரச்சினை என்று வந்துவிட்டால் அந்தப் பிரச்சினையை மட்டும் பேசி தீர்க்க வேண்டும். அதுதான் புத்திசாலி ஆண்களுக்கு அழகு. ஆனால் பெரும்பாலான ஆண்கள் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு மனைவியை திருப்பி அடிப்பார்கள். அதுமட்டுமல்ல மனைவியின் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா, குடும்பம், பூர்வ ஜென்ம உறவுகளைக் கூட வம்பிற்கு இழுப்பார்கள். இப்படிப்பட்ட வம்பு மனிதர்களை பெண்கள் நம்பி வாழ்வதில்லை.

பெண்களுக்கு வேகமாகவும், சரியாகவும் முடிவெடுக்க தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் முடிவெடுக்க தெரியாதவர்கள் போல் திணறுவார்கள். அதற்கு காரணம் சமூகம்தான். பெண்களுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று காலங்காலமாக கூறிவந்ததால், அவர்கள் சில நேரங்களில் முடிவெடுக்கும்போது பதற்றம் அடைகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம், ‘உன்னாலும் முடியும். தைரியமாக முடிவெடு’ என்று சொல்லும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். ‘நான் சொல்வதை மட்டும் கேள். முடிவெடுக்கும் விஷயங்களில் எல்லாம் நீ தலையிடாதே!’ என்று சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

கொடுத்த வாக்குறுதியை மறக்கும் ஆண்கள் பெண்களின் அபிமானத்தை இழந்துவிடுவார்கள். வாக்குறுதி என்பது சமாதானம் செய்வதற்காக தரப்படுவதல்ல. காப்பாற்றப்பட வேண்டிய சத்தியம். பெரும்பாலான ஆண்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்து விடுகிறார்கள். சிலர், ‘அப்படி நான் எந்த வாக்குறுதியும் கொடுத்ததில்லை’ என்று மறுப்பார்கள். வாக்குறுதிகளை மறப்பவர்கள் மீதும், மறுப்பவர்கள் மீதும் பெண்கள் நம்பிக்கைவைக்கமாட்டார்கள்.

மனைவிக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லிக்கொண்டு அளவுக்கு அதிகமாக அடக்கு முறையை கையாளும் கணவனை மனைவிக்குப் பிடிக்காது. பாதுகாப்பு நடவடிக்கை என்பது சுதந்திரத்தை பறிப்பதாக மாறிவிடக்கூடாது.

வார விடுமுறை என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலும் பெண்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆண்கள் கருதுகிறார்கள். தொலைக்காட்சியில் விளையாட்டு பார்க்க வேண்டும் என்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். லேட்டாக எழுந்து சில சமயம் குளிப்பது கூட கிடையாது. படுக்கையிலேயே பெட்காபி, டிபன் எல்லாம் நடக்கும். இதெல்லாம் மனைவிக்கு பிடிக்காது. அதுபோல் வார விடுமுறை நாளில் காலையிலே எழுந்து குளித்து தயாராகி, மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, நண்பர்களைத் தேடிப் போய்விடும் ஆண்களையும் அவர்களுக்கு பிடிக்காது.

வீட்டில் எவ்வளவு இடமிருந்தாலும் ஈரமான டவலை வரவேற்பறையில் உள்ள சோபாவில் தான் சில ஆண்கள் போடுவார்கள். அதுபற்றி கேள்வி கேட்க முடியாது. கேட்டால், ‘நான் அவசரமாக வெளியே போகிறேன். நீ வீட்டில்தானே இருக்கிறாய். இதைகூட நீ செய்யக் கூடாதா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் எரிச்சலையே சம்பாதிப்பார்கள்.

இதையெல்லாம் விட பெரிய தொல்லை வீட்டிற்கு அடிக்கடி நண்பர்களை அழைத்து வருவது. அந்த நண்பர்கள் முன்னிலையில் மனைவியிடம் இதை செய் அதை செய் என்று உத்தரவும் போடுவார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மனைவிகள் சுமையாகத்தான் கருதுவார்கள் என்பதை தாமதமாகத்தான் ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த உண்மை.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker