புதியவைமருத்துவம்

காதுகளை பாதுகாக்கும் வழிமுறைகள்

காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.

செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் திருவள்ளுவர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷினி கூறியதாவது:-

 

 

 

 

மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழும்போதும், ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது. ஒன்று, வெளிக் காது. 2-வது நடுக்காது. 3-வது உள்காது. வெளிக்காது என்பது, செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை வலி, விபத்து போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.

பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

அதன்பிறகு ஒரு வருடத்தில் ஆடியோகிராம், பெரா ஆகிய 2 பரிசோதனைகள் மூலம் காதின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும். இதற்கு ஓட்டோடாக்சிசிட்டி என்று பெயர்.

தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். உள்காதில் நீர் கோர்த்தால் காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

 

 

 

 

காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

‘ரூபெல்லா‘ எனும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேட்காமல் போகும். அதற்காக முன்னெச்சரிக்கையாக வளர்இளம் பெண்களுக்கு ரூபெல்லா தடுப்பு ஊசி போடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் காது கேளாமை என்னும் பிறவிக்குறைபாட்டை தடுத்து விடலாம்.

அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker