முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.
மனிதனின் சில முறையற்ற வாழ்வு முறையினை காலம் அவனுக்கு உணர்த்தி திருத்தி விடும். ஆனால் அந்த காலம் சற்று நீண்டு இருக்கலாம். அதனால் பல இழப்புகளுக்குப் பிறகே நல்ல பலன்கள் கிடைக்கலாம். இது இயற்கையின் சூழல். இதன் போக்கினை மாற்றுவது கடினம். ஆனால் முடிவில் நல்லதே ஏற்படும். அவ்வகையில் இன்று ஆச்சர்யப்படும் படியான ஒரு மாற்றம் நிகழ்ந்து வருகின்றது.
வெளிநாடுகளில் காலம் காலமாக ஒரு பழக்கம் இருந்து வருகின்றது. வயதானவர்கள், முதியோர்கள் ஆகியோர் முதியோர் இல்லங்களிலேயே இருப்பார்கள். அங்கு முதியோர் இல்லங்களும், அரசாங்கமும் அந்த முதியவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும். அவர்களின் உடல்நலம், மனநலம் இவற்றுக்கு எந்த குறையும் இல்லாத கவனிப்பு இருக்கும்.
இவர்களின் பிள்ளைகளும், உறவினர்களும் முக்கிய பண்டிகை நாட்களிலும், பிறந்த நாட்களின் பொழுதும் சென்று இவர்களை பார்த்து வருவார்கள். வெளி நாடுகளில் வீடுகளுக்கு வேலை செய்ய உதவி ஆட்கள் கிடையாது. உதவி ஆட்கள் வந்தாலும் செலவு மிக அதிகம். அனைத்து வேலைகளையும் வீட்டு மனிதர்களே செய்துகொள்ள வேண்டும்.
அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நிலையில் முதியோர்களை கவனித்துக் கொள்வது கடினம் என்ற காரணமே அநேக முதியோர் இல்லங்கள் தோன்றின. அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. அதனைப் பார்த்தே நம் நாட்டிலும் முதியோர் இல்லங்கள் தோன்றின. இங்கு பொருளாதார பிரச்சினை அதிகம்.
எனவே கூடுதல் செலவு செய்தாலே நல்ல முதியோர் இல்லங்கள் கிடைக்கும் நிலை உள்ளது. இவ்விடத்தில் நான் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற பேச்சினைப் பற்றி கூறவரவில்லை. நான் கூறவருவதெல்லாம் வெளிநாடுகளில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அநேக முதியவர்கள் தன் குடும்பத்துடனே வாழ முற்படுகின்றனர். குடும்பம் இல்லாதவர்கள் தன் போன்று இருக்கும் பிறருடன் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் முயற்சியினை மேற்கொள்கின்றனர் என்பது பற்றிதான்.
* பல வசதிகள் இருந்தாலும் உறவு, நட்பு இன்றி தனித்து இருப்பதே பல நோய்கள் பாதிப்பிற்கு காரணமாகி விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. தனிமை இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றதாம்.
* உடன், உறவுகள் இருக்கும் பொழுது ஆரோக்கியமான உணவினை நன்கு சமைத்து உண்ண முடிகின்றதாம். தனித்து இருப்பவர்களுக்கு இது இயலுவதில்லை.
* உடன் இருப்பவர்களால் பல உதவிகளை பெற முடிகின்றது. உடைமாற்ற, மாத்திரை எடுத்துக் கொள்வது போன்றவை உடன். உறவுகள் இருக்கும் பொழுதே முடிகின்றதாம்.
* வேலைச் சுமை குறைவதால் எளிதில் சோர்வடையாமல் இருக்கச் செய்கின்றதாம்.
* வெளியில் துணையோடு சென்று வர முடிகின்றது.
* அவசரத்திற்கு அருகில் நம்பகமானவர்கள் இருப்பதால் அச்சமின்றி இருக்க முடிகின்றது.
மருத்துவ முன்னேற்றம் இன்று மனிதனுக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளது. ஆனால் முதுமையினை மருத்துவத்தால் வெல்ல முடியாது. இது மனித அன்பினால் மட்டுமே முடியும். இதனை வெளிநாட்டினர் நன்கு உணர ஆரம்பித்து விட்டனர். இதனை நாமும் உணர்ந்து முதியோர்களின் வாழ்வினை ஆரோக்கியமாக்குவோம்.