நாம் ஏன் வாழையிலையில் சாப்பிட வேண்டும்?
தென் இந்தியாவில் நடக்கும் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் இடம்பெறுவது வாழை இலை..வாழை இலையில் உணவு அளிப்பதை மிகவும் மரியாதையான விருந்தாக கருதுவர் தமிழர்கள். வாழை இலையில் உணவு உட்கொள்வது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வாழை இலையில் சாப்பிடுவதற்கான காரணம் பற்றிய தொகுப்பு…
ஆண்டி- ஆக்ஸிடண்ட்:
வாழை இலையில் இயற்கையாகவே ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருக்கிறது. அதனால், வாழை இலையில் உணவு வைத்து உட்கொள்ளும்பொழுது, அதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நம் உடலுக்கு செல்கிறது. மேலும், பாக்டீரியாக்களை கொல்லும் சக்தி வாழை இலைக்கு இருப்பதால், உணவில் இருக்கும் பாக்டீரியாக்களை கொன்று விடுகிறது. இதன்மூலம், நோய் வராமல் தடுக்க முடியும்.
சிக்கனமானது:
பாத்திரம் அல்லது தட்டு வாங்குவதற்கு ஏற்படும் செலவை விட வாழை இலை வாங்குவதற்கான செலவு குறைவாக இருக்கும். வீட்டிலேயே வாழை மரம் வைத்திருந்தால், நல்ல இலைகளை பறித்து உணவு சாப்பிட பயன்படுத்திக்கொள்ளலாம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பானது:
வாழை இலை மிக எளிதில் அழுகிப்போவதால், சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காது.சாப்பிட்டு முடித்தவுடன், வாழை இலையை தூக்கி எறிவது செடிகளுக்கு சிறந்த உரமாகவும் இருக்கும். ஆனால், தட்டுகளை கழுவ பயன்படுத்தப்படும் சோப்பு, மண்ணிற்குள் சென்று நிலத்தடி நீரை மாசுப்படுத்தும். ஆனால், வாழை இலை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்கிறது.
சுகாதாரமானது:
வாழை இலை மிகவும் சுகாதாரமானது. ஒரு முறை சுத்தமான தண்ணீரை வைத்து கழுவிவிட்டு நாம் அதனை பயன்படுத்தலாம். ஆனால், சாப்பிட தட்டு பயன்படுத்தும்பொழுது, அது கழுவப்பட்டிருந்தாலும், சோப்புத்துகள்கள் அதில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால், வாழை இலை மிகவும் சுகாதாரமானதாக கருதப்படுகிறது.