குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் வழி
திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று பிள்ளைகளின் கல்விச் செலவுகள் ஒவ்வொரு குடும்பத்தின் முக்கியச் செலவினங்களில் ஒன்றாக ஆகியிருக்கின்றன. மே மாதத்தில் கல்விச் செலவு களைச் சமாளிக்க பல நடுத்தரக் குடும்பங்கள் தடுமாறித்தான் எழ வேண்டியிருக்கிறது.
அதிலும் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் எகிறிக்கொண்டே போகும்நிலையில், இன்றே திட்டமிட்டு செயல்படத் தொடங்கினால்தான் குழந்தைகளின் எதிர்காலப் படிப்புச் செலவுகளை சிரமமின்றிச் சமாளிக்க முடியும்.
அந்த வழிகள் குறித்துப் பார்ப்போம்…
ஒருங்கிணைந்த திட்டம் :
குழந்தைகளின் கல்விச் செலவுக்குத் தனித் திட்டம் போடுவது சிலரின் வழக்கம். மாறாக, நம் குடும்பத்தின் ஒருங்கிணைந்த நிதித்திட்டத்தில் ஒரு பகுதியாக கல்வித் திட்டம் அமைய வேண்டும். குழந்தைகளின் எதிர்கால உயர்படிப்புக்கு எவ்வளவு செலவாகும் என்று யோசித்து, அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டு முதலீடுகளை மேற்கொண்டு வர வேண்டும். பிக்சட் டெபாசிட் போன்றவை நம் இலக்குகளை எட்ட போதுமானதாக இராது. மியூச்சுவல் பண்ட் போன்றவை நன்கு கைகொடுக்கும். அவற்றுக்கு வரிச்சலுகையும் கிடைக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
முன்கூட்டித் தொடங்குவது :
எப்போதுமே முன்கூட்டியே முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கும்போது, கிடைக்கும் ‘ரிட்டர்னும்’ அதிகமாக இருக்கும். அதுதான் கூட்டுப் பலனின் விசேஷம். 15 சதவீத ரிட்டர்ன் அளிக்கும் எஸ்.ஐ.பி. திட்டத்தில் நாம் மாதம் 5 ஆயிரம் முதலீடு செய்துவருகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அதை நம் 25 வயதில் தொடங்கி 55 வயது வரை தொடர்ந்தால், அந்த 30 ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்த தொகை ரூ. 3.51 கோடியாக வளர்ந்திருக்கும். மாறாக, நாம் 45 வயதில் சேமிக்கத் தொடங்கி 55 வயது வரை, அதாவது சுமார் 10 ஆண்டு காலம் சேமித்தால், வெறும் ரூ. 13.93 லட்சம்தான் கிட்டும்.
நீண்டகாலத் திட்டம் என்றால்…
குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான நீண்டகாலத் திட்டம் என்றால், ஈக்விட்டி பண்ட்களே சிறந்தவை என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. இன்னும் பத்தாண்டில் நம் குழந்தை கல்லூரியில் காலடி எடுத்துவைக்கப் போகிறது என்றால், பத்தாண்டு கால பணவீக்கத்தையும் மனதில் வைத்து நாம் முதலீட்டில் ஈடுபட்டு வரவேண்டும்.
ஆயுள் காப்பீட்டின் அவசியம் :
வீட்டில் கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்கள் என்றால், அவர்கள் ஆயுள் காப்பீடு பெற்றிருப்பது அவசியம். டெர்ம் இன்சூரன்ஸ் பெற்றிருந்தால், சம்பாதிப்பவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தாலும் பிள்ளைகளின் படிப்பு பிரச்சினையின்றித் தொடரும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடா? :
குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவைக் கருத்தில்கொண்டு அவர்கள் பெயரில் காப்பீடு பெறுவது சிலரின் வழக்கம். ஆனால் அத்திட்டத்தில் சேமித்து வரும் தொகை, போதுமானதாக இருக்காது.
சிலரோ தங்களின் ஓய்வுகாலத்துக்கான முதலீட்டுத் தொகையில் சமரசம் செய்து, பிள்ளைகளின் படிப்புக்கு அதிகம் ஒதுக்கீடு செய்வார்கள். அதுவும் ஓய்வு காலத்தில் சொந்தக் காலில் நிற்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பெயரில் காப்பீடு பெறத் தேவையில்லை, காரணம் அவர்கள் வருவாய் ஈட்டுவோரில்லை. காப்பீடும் முதலீடும் இணைந்த குழந்தை காப்பீட்டுத் திட்டங்கள் அதிக பலன் தராதவை என்பதே முதலீட்டு ஆலோசகர்கள் கூறும் அறிவுரை. பெற்றோர், தேவையான காப்பீடு பெற்றிருந்தால் போதும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வுகால நிதிக்கான முதலீடு போன்றவற்றைக் குறைத்து கல்விக்காக முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கு என்று முறையாகத் திட்டமிட்டு முன்கூட்டியே நிதியை வளர்த்துவருவதே சரியானது.