புதியவைமருத்துவம்

பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்

மனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

ஆஸ்டியோ போரோசிஸ்

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன்

உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.

சென்ஈஸ்ட்ரோஜன் உணவுகள்

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பழங்கள் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

ஓமேகா 3 உணவுகள்

ஒமேகா – 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

நார்ச்சத்து உணவுகள்

பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.

ஈஸ்ட்ரோஜனை சமப்படுத்தும் யோகா

தினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker