உணவு உண்ணும் நேரமும் உடல் எடையும்
உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உணவு உண்ணும் நேரத்துக்கும், உடல் எடைக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளின் தொடக்கத்தில் அதிகமான கலோரிகளை எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது என்று இன்னும் பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
உடல் எடையைக் குறைக்க விரும்பும், அதற்காக முயற்சிக்கும் பெண்கள், மதிய உணவை முன்னதாக எடுத்துக்கொள்ளும்போது அதிக எடையை இழக்கிறார்கள். ஆனால், அதேநேரம் காலை உணவைத் தள்ளிப்போடும் பெண்களுக்கு உடல் நிறை குறியீடு மோசமாக இருக்கிறது. அதாவது, உடல் உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதில்லை என்கிறது ஓர் ஆய்வு.
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் விரிவுரையாளர் கெர்டா ஒரு பழமொழியை மேற்கோள் காட்டுகிறார், ‘‘காலை உணவை அரசனைப் போல உண்ணுங்கள், மதிய உணவை இளவரசனைப் போலவும், இரவு உணவை ஏழையைப் போலவும் உண்ணுங்கள் என்கிறது ஒரு பழமொழி. இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்’’ என்கிறார் அவர்.
நாம் என்ன உண்கிறோம் என்பதைவிட, எப்போது உண்கிறோம் என்பது மிக முக்கியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சர்ரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜோனாதன் ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தைத் தள்ளிப் போடுவது உடல் இயக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்தும் என்கிறார்.
பத்து ஆண்களிடம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், உணவு உண்ணும் நேரத்தை ஐந்து மணி நேரம் தள்ளிப்போடுவது, அவர்களின் உடல் கடிகாரத்தின் உயிரியல் குறியீட்டை தெளிவாக மாற்றியதை ஜோனாதன் கண்டறிந்தார்.
உணவு உண்பது குறித்து மக்களிடம் பல கேள்விகள் உள்ளன. அந்த கேள்விகளில் முதன்மையானது, எப்போது உண்ண வேண்டும்? எப்போது உண்ணக் கூடாது? என்பதுதன்.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் பேராசிரியர் அலெக்சாண்ட்ரா ஜான்ஸ்டன், உணவு உண்ணும் நேரத்தை முன்னதாக மாற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்கிறார். ஆனால், எதனால் இது ஏற்படுகிறது, எப்போது உண்ணுவது நலம் என்பது போன்ற கேள்விகளுக்கு இனி வரும் ஆய்வுகள்தான் தெளிவான விடை தரும் என்று சொல்கிறார்.