பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தங்களது அழகு, உடை போன்றவற்றில் அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அதுவே திருமணத்திற்கு பிறகு என்றால் பார்த்தால், அது கிராமத்து பெண்களுக்காக இருந்தாலும் சரி, நகரத்து பெண்களுக்காக இருந்தாலும் சரி தங்களை கவனித்துக் கொள்வதில் குறைந்த ஆர்வத்தையே காட்டுகின்றனர். இது எதனால் என்று உங்களுக்கு தெரியுமா?
இதற்கு எல்லாம் யார் காரணம்? இது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று கூட கேட்கலாம். நீங்கள் உங்கள் வீட்டிலேயே உங்களது அம்மாவை கவனித்து இருப்பீர்கள். தனது குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்த பிறகு தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள விரும்புவார். ஆனால் அவருக்கு தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே நேரம் சரியாக இருக்கும்.
தனது மனைவியின் ஆரோக்கியம், அழகு என எதையும் பற்றி கவலைப்படாத ஆண்கள் இந்த உலகில் மிகவும் குறைவு என்று தான் பல பெண்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் எப்படி தனது தாய் தனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்து வாழ்வது என்பது ஒரு மகனுக்கு வருத்தத்தை தருமோ, அதே போல தான் ஒரு மனைவி தனது கணவன் குழந்தைகளுக்காக தனது ஆரோக்கியம், அழகு போன்றவற்றை கருத்தில் கொள்ளாமல் வாழ்வதும் ஒரு ஆணுக்கு வருத்தத்தை தரும்.
காதல் திருமணம்
என்னுடையது காதல் திருமணம் தான். நான் எனது மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிறது. அவள் எப்போதுமே மிகவும் அழகாக தன்னை வைத்துக் கொள்ளும் திறமை கொண்டவள். அவளது உடை, முக அழகு போன்றவற்றில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அழகானவள்.
ஆர்வம் குறைந்தது
ஆனால் திருமணத்திற்கு பின்னர் தன்னை அழங்கரித்து கொள்வதில் அவள் ஈடுபாடு காட்டுவதே கிடையாது. அவள் தனது தோற்றத்தை எல்லாம் இரு பொருட்டாகவே கருதுவது இல்லை. அவளது உடல் எடை கூடி விட்டது. அவள் ஒரு விஷேச நாட்களில் கூட சிறப்பாக உடை உடுத்துவது இல்லை. அவளது தோற்றத்திற்காக நான் அவளை காதலிக்கவில்லை என்றாலும், அவள் இவ்வாறு இருப்பது எனக்கு பிடிக்கவில்லை.
வெளியே அழைத்து செல்வதில்லை
அவளிடம் நான் இதை பற்றி பேசினாலும், அவள் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. அவளை நான் தற்போது எனது ஆபிஸ் பார்ட்டிகள் போன்றவற்றிக்கு கூட வெளியே அழைத்து செல்வதில்லை. உனது தனிப்பட்ட விஷயங்களில் கொஞ்சமாவது அக்கறை எடுத்துக் கொள் என்று என்று மனைவியிடம் நான் எப்படி சொல்லி புரிய வைப்பது…?
நியாயமான எதிர்பார்ப்பு
உங்களுடைய எதிர்ப்பார்ப்பு நியாயமானது தான். நீங்கள் அவரது அழகை வைத்து அவரை காதலிக்கவில்லை ஆனால் ஒருவர் தன்னை வெளியுலகத்திற்கு நீட்டாக காட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறீர்கள். அதை முழுமையாக ஒத்துக் கொள்கிறோம்.
பொறுப்பு
அதிகப்படியான பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களது அழகு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் திருமணத்திற்கு பிறகு ஆர்வம் காட்டுவது இல்லை. பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு அதிக பொறுப்பு வந்து விடுகிறது. அவர்களுக்கு வீட்டு வேலைகளும் அதிகம். நிறைய பெண்கள் தன்னுடைய நலனுக்கு மதிப்பளிப்பதை விட பிறருடைய நலன் விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதையை முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் அவர்களுடைய தேவைகளை புறக்கணித்து விடுகின்றனர்.
விசேஷ நாட்கள்
விழா நாட்களில் பெண்களுக்கு அதிகமாக வேலை இருக்கும். வீட்டை சுத்தம் செய்வது, பலகாரங்கள் செய்வது போன்றவை இருக்கும்.. அந்த நேரத்தில் அவர்கள் தங்களை கவனித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் கூட அவர்களுக்கு நேரம் அதிகமாக இருக்காது. உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும்.. குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்று பல பொறுப்புகள் அவர்களது தலையில் இருக்கும் போது, தன்னை அலங்கரித்து கொள்ள வேண்டும்.. தான் சாப்பிட வேண்டும் என்பது எல்லாம் அவர்களுக்கு இரண்டாவது பட்சமாக தான் இருக்கும்.
பேசுங்கள்
நீங்கள் அவரை அலுவலக பார்டிகள், விழாக்களுக்கு அழைத்து செல்ல முடியவில்லை என்று கூறினீர்கள். இது பற்றி உங்களது மனதில் உள்ளதை பொறுமையாகவும், தெளிவாகவும் கூறுங்கள் அவர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்.
பிடிப்பதில்லை
சில ஆண்கள் திருமணத்திற்கு பிறகு தனது மனைவி அழகாக தன்னை ஒப்பனை செய்து கொள்வதை விரும்புவதில்லை.. ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு தங்களது மனைவி பிறரது கண்களுக்கு அழகாக தெரிய வேண்டும். எனது மனைவியின் குணம், அவளது அழகு கண்டு பிறர் பொறாமை கொள்ள வேண்டும் என்பது தான் பலரது ஆவலாக இருக்கிறது.