உண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்..? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“நோய்களை முன்னரே கண்டறிவதன் மூலம் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த வகையில் முழு உடல் பரிசோதனை (Master Hestyle=”width:100%;height:100%;”h Check-up) அதற்குப் பெரிதும் உதவும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, உடல்நலனில் அக்கறை செலுத்த பலருக்கும் நேரமிருப்பதில்லை. `நோய் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையே இன்றைய தலைமுறையினரிடம் மேலோங்கி நிற்கிறது.
இதனால், நோய் அறிகுறிகள் வெளிப்படும் வரை பலரும் கண்டுகொள்வதில்லை. நோய் முற்றிய பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல லட்ச ரூபாய்களை இழந்தும் பலன் கிடைக்காமல் போய்விடவும் அது காரணமாகிறது. இருந்தாலும், எல்லோரும் இந்த பரிசோதனை செய்து கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.
என்னென்ன பரிசோதனைகள்?
கண், பல், காது, மூக்கு, தொண்டைப் பரிசோதனைகள், மார்பக எக்ஸ்-ரே, இ.சி.ஜி ரத்த வகை, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு, யூரியா, கிரியேட்டினின் போன்ற அளவுகள், வயிற்றில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, தைராய்டு சுரப்புப் பரிசோதனை, கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை போன்ற அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிசோதனைகள் ஒவ்வொரு மருத்துவமனையிலும் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பொறுத்து மாறுபாடு இருக்கும்.
யாரெல்லாம் செய்துகொள்ள வேண்டும்?
பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், போதிய உடலுழைப்பு இல்லாமல் உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுபவர்கள், ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்கள் போன்றோர் வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் இதைச் செய்துகொள்ள வேண்டும்.
நன்மைகள் என்னென்ன?
பல், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பல உறுப்புகளில் ஏற்படும் நோய்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல், மார்பகம், பெண்களுக்கு கர்ப்பப்பை போன்ற உறுப்புகளில் ஏற்பட இருக்கும் நோய்களை இதன்மூலம் கண்டறிய முடியும்.
சர்க்கரைநோயின் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், இதன்மூலம் எச்சரிக்கையாக இருந்து, சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளைக் கடைப்பிடித்து, அதைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் நோயைக் குணப்படுத்து எளிமையாகும்.