Uncategorised

சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

திருவனந்தபுரம் :

கேரளாவில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாதாந்திர பூஜை பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்தது. பின்பு பல மாதங்களுக்கு பிறகு ஐப்பசி மாத பூஜையில் பங்கேற்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆன்- லைனில் முன்பதிவு செய்த 1000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து மண்டல பூஜை காலத்தில் தினமும் 3 ஆயிரம் பக்தர்களுக்கும், மகர விளக்கு பூஜை காலத்தில் 5 ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.

இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(10-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார்.

வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். நாளை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நாளை மறுநாள் (11-ந் தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை கட்டாயம் ஆகும். ஆன்-லைனில் முன்பதிவு செய்த கொரோனா நெகட்டிவ் மருத்துவ சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகர விளக்கு பூஜை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பங்குனி மாத பூஜை, ஆராட்டு திருவிழாவில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker