நடைப் பயிற்சியில் செல்போன் பேசினால் கழுத்துக்கு ஆபத்து..
நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது செல்போனை உபயோகப்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கழுத்துவலி, தோள்பட்டை வலியை உருவாக்கும்.
சரியான நடைப் பயிற்சிக்கு எப்படி நடக்கவேண்டும்?
தலை நிமிர்ந்த நிலையில் கம்பீரமாக நடக்க வேண்டும்.
அப்போது தோள்களை நெகிழ்வாக வைத்திருக்க வேண்டும். தோள்கள் விரைப்பாக இருக்கக்கூடாது.
ஆண்கள் ஒரு மணி நேரத்தில் 7192 ஸ்டெப்கள் வைக்கும் அளவுக்கு வேகமாக, இரண்டு கைகளையும் வீசிக்கொண்டு நடக்க வேண்டும்.
நடக்கும்போது இரண்டு கால்களும் பரஸ்பரம் ஒரே வேகத்தில் இயங்கவேண்டும்.
நடைப் பயிற்சிக்கு காலணிகள் முக்கியம். பாதங்களை முழுவதுமாக மூடி யிருக்கும் காலணிகளை அணிந்துகொண்டு நடந்து செல்லுங்கள்.
சமமான தரைப்பரப்பில், நேராக பார்த்து நடந்துசெல்லவேண்டு்ம். அப்போது பார்வை குறைந்தது 15 அடி தூரத்தில் விழவேண்டும்.
முடிந்த அளவு வயிற்றுப் பகுதி தசைகளை மென்மையாக உள் இழுத்தபடி நடையை தொடருங்கள்.
பெண்கள் தினமும் 45 நிமிடங்கள் வரை நடக்கலாம். அப்போது அவர்கள் 5400 ஸ்டெப்கள் வரை வைக்கலாம். பெண்கள் தினமும் நடக்கவேண்டும். பத்து நிமிடங்களில் 1200 ஸ்டெப்களுக்கு குறையாத அளவுக்கு அவர்கள் நடந்துசெல்ல முயற்சிக்கவேண்டும்.
சைக்கிள் மிதிப்பது மிக சிறந்த பயிற்சி. 150 ஸ்டெப்கள் நடப்பதற்கு பதில், ஒரு நிமிடம் சைக்கிள் மிதித்தால்போதும். ஒரு நிமிடம் ரோலர் ஸ்கேட்டிங் செய்வது 200 ஸ்டெப்கள் நடப்பதற்கு சமமானது.
50 வயதைத் தொடுகிறவர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் நடந்தால்போதும். தினமும் காலையிலோ, மாலையிலோ 30 முதல் 45 நிமிடங்கள் நடக்கவேண்டும். வேகமாக நடக்கிறவர்கள் அரை மணி நேரத்திற்குள் நடந்தாலும்போதும்.
முதலில் ‘வார்மிங் டைம்’ என்ற தொடக்க நடையை 5 முதல் 10 நிமிடங்கள் வரை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்பு வேகத்தை அதிகரித்து முடிந்த அளவுக்கு வேகமாக 15 நிமிடங்கள் வரை நடக்கவேண்டும். பின்பு வேகத்தைக் குறைத்து பத்து நிமிடங்களில் முடித்துக்கொள்ளவேண்டும்.
நடைக்கு பிறகு உடல் சோர்வாகத் தெரிந்தால் சிறிது நேரம் காற்றோட்டமுள்ள திறந்த வெளியில் ஓய்வெடுங்கள். அப்போது நிறைய தண்ணீர் பருகுங்கள். அதன் மூலம் உடலுக்கு தேவையான பிராணவாயு கிடைக்கும்.
நடக்கும்போது நெஞ்சுவலி, கழுத்து வலி, தலைசுற்றல், மூச்சுவிட சிரமம், கண் இருண்டுபோதல், கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் போன்ற ஏதாவது ஏற்பட்டால் உடனே நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு, டாக்டரின் ஆலோசனையை பெறவேண்டும்.
இரவில் நிம்மதியாக தூங்கி எழுந்து, உடல் புத்துணர்ச்சியோடு இருக்கும் அதிகாலை நேரம் நடைப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமானது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் டீ அல்லது காபி பருகி, அரை மணி நேரம் கழித்து நடைப் பயிற்சியை தொடங்கவேண்டும். அவ்வாறு செய்தால் ரத்தத்தில் போதுமான அளவு சர்க்கரை இருக்கும். அதன் மூலம் ‘லோ சுகர்’ ஆவதை தவிர்க்கலாம்.
நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது செல்போனை உபயோகப்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் கழுத்துவலி, தோள்பட்டை வலியை உருவாக்கும்.