செரிமான சக்தியை அதிகரிக்கும் கண்டந்திப்பிலி ரசம்
செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கண்டந்திப்பிலி வைத்து ரசம் செய்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இன்று இந்த ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புளி – ஒரு கோலிக்குண்டு அளவு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
துவரம் பருப்பு – 1 கப் (வேக வைத்தது)
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க :
கண்டந்திப்பிலி – 4
மிளகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேஜைகரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
தாளிக்க :
நெய் – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
வேக வைத்த பருப்பை நன்றாக மசித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கண்டந்திப்பிலி, மிளகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
இவை அனைத்து நன்றாக சிவந்ததும் சீரகம் சேர்த்து இறக்கவும். இவை ஆறியவுடன் இந்த கலவையை பொடி செய்து வைத்து கொள்ளவும்.
புளியை வென்னீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து புளிக்கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு, பொடித்து வைத்த ரசப்பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளியின் வாசனை மாறிய பிறகு வேக வைத்த பருப்பை நீர் விட்டு கலக்கி ரசத்துடன் சேர்த்து கொதிக்க விடவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, சீரகம் சேர்த்து அது வெடித்ததும், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் சேர்த்து இறக்கவும்.
சூப்பரான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.