வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு வலிமை தரும் உத்தித ஏகை கபாதாசனம்
இந்த ஆசனம் செய்யும் போது வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் நன்கு வலிமை அடைந்து சீராக வேலை செய்யும். இடுப்பு, முதுகின் கீழ்ப் பகுதி, கால்கள் வலிமை பெறும்.
பெயர் விளக்கம்: “உத்தித” என்றால் மேலே தூக்கிய சாய்வான என்று பொருள். “ஏகை கபாதாசனம்” என்றால் தூக்கியகால்களில் ஒன்றை மேலேயும், ஒன்றை கீழேயும் வைப்பது என்று பொருள். இந்த ஆசனத்தில் இரண்டு கால்களையும் மாற்றி, மாற்றி வைத்து செய்வதால் இப்பெயர் அமைந்துள்ளது.
செய்முறை: முதலில் சவாசனம் செய்து இரு குதிகால்களையும் சேர்த்து வைக்கவும். இருகைகளையும் உடலோடு ஒட்டியபடி நீட்டிவைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்து தரை விரிப்பில் இருந்து கால்களை சிறிதளவு மேலே எழுப்பி மூச்சை வெளியேவிடவும். தரை மட்டத்திலிருந்து ஒரு காலை மேலே 30 டிகிரி கோண அளவிலும், மற்றொரு காலை 60 டிகிரி கோண அளவிலும் நிறுத்தவும்.
இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் சில வினாடிகள் இருந்து 30 டிகிரி கோணத்தில் இருக்கும் காலை 60 டிகிரிக்கும், 60 டிகிரி கோணத்தில் இருக்கும் காலை 30 டிகிரிக்கும் மாற்றவும். இப்படி 3 முதல் 4 முறை காலை மாற்றிச் செய்யவும். முழங்கால்களை மடக்கக் கூடாது. பிறகு கால்கள் இரண்டையும் 30 டிகிரி கோண அளவில் ஒன்றாக இணைத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து, நிதானமாக கால்களை தரை விரிப்பின் மேல் இறக்கி மூச்சை வெளியேவிடவும். இந்த ஆசனத்தில் கால்கள் இரண்டையும் மாற்றும் போது மூச்சை வெளியே விடவும். ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் இருக்கவும். இந்தஆசனத்தை 2 முதல் 3 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடி வயிற்றின் மீதும். மணிப்பூரச் சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் தரை விரிப்பில் இருந்து கால்களை மேலே தூக்கி மாற்றி செய்ய முடியாதவர்கள் முதலில் படுத்த நிலையில் பிருட்சடத்தைமேலே தூக்கி, பிருட்சடத்தின் கீழே இரு கை விரல்களையும் இணைத்து வைக்கவும். உள்ளங்கைகள் கீழ் நோக்கியபடி இருக்கட்டும். கை விரல்களின் மேல் பிருட்சடத்தை வைத்து சில நாட்கள் பயிற்சி செய்து வரலாம்.
தடைக் குறிப்பு: இடுப்பு வலி, இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பயன்கள்: வயிற்றில் சேர்ந்திருக்கும் தேவையற்ற ஊளைச்சதைகள் நீங்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் நன்கு வலிமை அடைந்து சீராக வேலை செய்யும். இடுப்பு, முதுகின் கீழ்ப் பகுதி, கால்கள் வலிமை பெறும். நீரிழிவுற்கு பயனுள்ளது.