பெண்களை குறிவைக்கும் இரத்தச்சோகை
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்… என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள்.
இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகத்தான் பெரும்பாலானவர்கள் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்… என அனைத்துத் தரப்பினருக்கும் ரத்தச்சோகை ஏற்படும் என்றாலும், பெண்கள்தான் அதிக அளவில் ரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள். பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிக ரத்த இழப்பை எதிர்கொள்கிறார்கள்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காததும் இதற்குக் காரணமாகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால், குறை மாதத்தில் குழந்தை பிறக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறக்கும்; அந்தக் குழந்தைக்கு ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் குழந்தைக்குப் போதுமான இரும்புச்சத்து கிடைக்காமல் போகும்.
எனவே, பெண்கள் கவனமாகத் தங்களைப் பார்த்துக்கொண்டு, ரத்தச்சோகை வராமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். குடும்பத்தினரும் இந்த விஷயத்தில் பெண் குழந்தைகளின் மேல் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வை தாயிடமிருந்து தொடங்குவதே சரி.
யாருக்கு ஏற்படலாம்?
* மகப்பேறு அடையும் வயதை எட்டிய பெண்கள்
* கர்ப்பிணிகள்
* அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள்
* கைக்குழந்தைகள்
* குறைமாதத்தில் பிறந்தவர்கள்
* வளர்ச்சியில் குறைபாடு உடையவர்கள்
* அசைவ உணவைத் தவிர்ப்பவர்கள்.
* இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) உள்ளவர்கள்
* வைட்டமின் குறைபாடு (Vitamin deficiency) உள்ளவர்கள்
* சிறுநீரக பாதிப்புள்ளவர்கள்
* குடல் புற்றுநோய், அல்சர் உள்ளவர்கள்.
தீர்வுகள்…
* முதல் இரண்டு வயதுக்குள், 10- 14 இடைப்பட்ட வயதில், கர்ப்ப காலங்களில்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அந்த வயதுகளில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊட்டச்சத்துக் குறைபாடு சோதனை செய்துகொள்வது நல்லது.
* கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், ராகி, சத்துமாவு, இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவுப் பொருள்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிக அவசியம்.
* ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
* உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை, நெல்லிக்காய், கேரட் போன்றவையும் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும்.
* தினசரி ஒரு வகைப் பழம் என்கிற கணக்கில் பழமாகச் சாப்பிடலாம்; பழச் சாறாகக் குடிக்கலாம்.
* உடலில் தேவையான அளவு இரும்புச்சத்து இருக்கவேண்டியது அவசியம். உணவில் கிடைக்கவில்லையென்றால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.
* கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்டரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
மேலும், பிற நோய்களால் ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.