அர்த்த நாவாசனம் வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பெயர் விளக்கம்: “அர்த்த” என்றால் பாதி என்று பொருள். “நாவ” என்றால் படகு என்று அர்த்தம். பாதிநிலை படகுப் போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் அர்த்த நாவாசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: உத்தித மேரு தண்டாசனம் செய்முறைப் படியே இந்த ஆசனத்தையும் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆசனப் பயிற்சியில் படுத்த நிலையில் இருந்து மேலெழும் போது கால்களையும் ஒன்றாக சேர்த்து தரை விரிப்பில் இருந்து மேலே தூக்கவும். கால் கட்டை விரல்கள் புருவங்களுக்கு நேராக இருக்கட்டும். உடல் எடை முழுவதையும் பிருஷ்டத்தால் தாங்கவும்.
இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருந்து பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்தி மல்லாந்து படுத்து மூச்சை வெளியே விடவும். அதிலிருந்து சவாசன நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை வரை பயிற்சி செய்யலாம்.</div>
கவனம் செலுத்த வேண்டிய இடம்: வயிறு, இடுப்புப் பகுதி மற்றும் உடலை சமநிலைப் படுத்துவதின் மீதும், மணிப்பூரச் சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: ஆரம்ப பயிற்சியில் கால்களை நீட்டி உட்கார்ந்த நிலையில் இருந்து பின்னோக்கி சாய்ந்து கால்களை மேலே உயர்த்தி அர்த்தநா வாசனம் செய்யவும்.
தடைக் குறிப்பு: இடுப்பு வலி, இடம் விலகிப் போன டிஸ்க் தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.
பயன்கள்: வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். முதுகு, வயிற்றுத் தசைகள், உறுப்புகள் பலம் பெறும். நீரழிவுற்கு பயனுள்ளது. இளமை மேலிடும். உடலை சமநிலைப்படுத்தும். ஆற்றல் அதிகரிக்கும்.