ஆரோக்கியம்புதியவை

அதீத உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

நீங்கள் அதீத உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அதனால் உங்களுக்கு எந்த நலமும் கிட்டப்போவதில்லை. சொல்லப்போனால், மிதமான உடற்பயிற்சியின் நலன்கள்கூட கிடைக்கப் போவதில்லை.

உடற்பயிற்சி செய்வதால் நிறைய நன்மைகள். ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது உண்மைதான். உடல் எடையைச் சரியான அளவுக்குக் கொண்டுவர உதவுகிறது; இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது; பலருக்கு மனச்சோர்வு மற்றும் கவலைகளில் இருந்து மீளவும் உதவுகிறது. ஆனால், எல்லாவற்றுக்கும் எல்லைக்கோடு என்று ஒன்று இருக்கிறது. அதுபோல உடற்பயிற்சிக்கும் ஓர் அளவுகோல் இருக்கிறது.

நீங்கள் வயது வந்தவர் என்றால் ஒரு வாரத்துக்கு ஐந்து மணி நேர மிதமான உடற்பயிற்சி (Moderate Workout) போதுமானது. ஐந்து மணி நேரம் உங்களால் ஒரு வாரத்தில் ஒதுக்க முடியவில்லை என்றால், இரண்டரை மணி நேரங்கள் கடினமான உடற்பயிற்சியை (Heavy Workout) மேற்கொள்ளலாம்.

தினமும் மிதமாக ஓட்டப்பயிற்சி எடுத்தவர்கள், பயிற்சி எடுக்காதவர்களைவிட ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். அதே சமயம், தினமும் கடினமாக ஓட்டப்பயிற்சி மேற்கொண்டவர்கள், அந்த ஓட்டப்பயிற்சியே செய்திடாதவர்களை விடவும் குறைவான காலமே வாழ்ந்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் அதீத உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், அதனால் உங்களுக்கு எந்த நலமும் கிட்டப்போவதில்லை. சொல்லப்போனால், மிதமான உடற்பயிற்சியின் நலன்கள்கூட கிடைக்கப் போவதில்லை.

மிகவும் கடினமான உடற்பயிற்சிகள், நீண்ட மராத்தான் போட்டிகளில் தொடர்ந்து ஓடுவது போன்ற செயல்களால், மாரடைப்பு, வாதம், இதயம் சீராக இயங்காமல் போவது, ரத்தக் குழாய்கள் விரிவடைதல் போன்ற பிரச்னைகள் தலை தூக்கலாம். இதற்குக் காரணம், நீங்கள் அதிகமாக உங்கள் உடலைச் சிரமத்துக்கு உள்ளாக்கும்போது, அந்த அழுத்தம் உங்கள் இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை நேரடியாகப் பாதிக்கும்.

பெண்கள் வாரம் ஒரு முறை கடின உடற்பயிற்சியை மேற்கொண்டால் போதுமானது. அதே சமயம், தினமும் கடின உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு மாரடைப்பும், வாதமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது. இந்தக் கடின உடற்பயிற்சி தொடர்ந்தால், மாதவிடாய் ஏற்படாமல் போவது, எலும்புகள் வலுவிழந்து தேய்ந்து போவது, சாப்பிடுவதில் பிரச்னை என ஏகப்பட்ட நோய்கள் வருவதற்கு வரிசைக்கட்டி நிற்கும். ஆண்களுக்கு இதே கடின உடற்பயிற்சியால் உடல் சோர்வு, விந்து இயக்குநீர் குறைபாடு போன்றவை ஏற்பட்டு ஆண்மைக் குறைபாடு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

அதீத உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் உடலுக்குக் கிடைக்க வேண்டிய தேவையான அளவு ஊட்டச்சத்தை நீங்களே தடுப்பதாகத்தான் அர்த்தம். உடற்பயிற்சி கூடாது என்று யாரும் சொல்லவில்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் அளவைச் செய்தாலே போதுமானது. சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ் வைப்பதற்கான தேவை இருந்தால் மட்டுமே முயற்சி செய்யுங்கள். அதுவும் முறையாக ஒரு பயிற்சியாளரின் கீழ் மட்டுமே செய்ய வேண்டும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker