புதியவைமருத்துவம்

தோல் நோய் குணமாக இதை பின்பற்றுங்கள்

ஒரு மனிதனின் சராசரி எடையில் 12 முதல் 15 சதவிகிதம் (healthy skin disease heel tips) வரை தோல்தான் உள்ளது.

பலரும் நினைப்பதுபோல் தோல், காதலுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்யும் வழவழ வஸ்து மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும் உறுப்பு.

அதேசமயம், முக்கிய மருந்துகளை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கும் புத்திசாலிப் பாதுகாப்பு அரண். உடலின் வெப்பத்தைச் சீராக வைத்திருப்பது, ‘விட்டமின் டி’-யை உருவாக்குவது, சருமத் துளைகள் மூலம் சுவாசிப்பது, யூரியா போன்ற கழிவை வெளியேற்றுவது, கொழுப்பு, நீர் முதலான பொருட்களைச் சேமித்துவைப்பது எனப் பல வேலைகளை இழுத்துக்கட்டிச் செய்யும் உறுப்பு அது.

அதனாலேயே தோலில் வரும் நோய்களின் பட்டியல் கொஞ்சம் நீளம். (healthy skin disease heel tips) அடுப்பங்கரைத் தாளிப்பு முதல் அணுஉலைக் கசிவு வரை உண்டாக்கும் ஒவ்வாமையில் வரும் நோய்கள் சில.

பூஞ்சைகளால், பாக்டீரியாக்களால், வைரஸ்களால் வரும் நோய்கள் சில. நோய் எதிர்ப்பாற்றலின் சீரற்ற தன்மையால் வருவன பல. இன்னும் சில மன உளைச்சலால் மட்டுமே வருகின்றன.

மற்ற வியாதிபோல், தோல் நோய் குணமாக மூன்று நாட்களுக்குக் கஷாயம், நான்கு நாட்களுக்கு ஆன்டி பயாடிக், ஐந்து நாட்களுக்கு டானிக் என எடுத்துக்கொண்டு தோல் நோய்களில் பெருவாரியைச் சடுதியில் குணப்படுத்திவிட முடியாது.

சாதாரண அரையிடுக்கு பூஞ்சையால் வரும் ஒவ்வாமைக்கு க்ரீம் தேய்த்தால், மறுநாளே அரிப்பு காணாமல்போகும். ஆனால், அன்று மாலையே மறுஒளி ’அரிப்பு’ தொடங்கும்.

துவைக்காத சாக்ஸை நாள் முழுக்க அணிந்து கழட்டியதும், கணுக்காலில் வரும் அரிப்பை சுகமாகச் சொறிந்து பின் மறந்துவிடுவோம். (healthy skin disease heel tips) திடீரென ஒருநாள் காலை உற்றுப்பார்த்தால் தெரியும் அந்த அரிப்பு, கரப்பான் எனும் ‘எக்சிமா’வாக மாறியிருக்கும்.

ரத்தத்தில் ஒவ்வாமை அணுக்களால் வரும் இந்த அரிப்பு முதலில் வறட்சியான அரிப்பாகவும், நாளடைவில் நிறம் மாறி நீர்த்துவம் கசிந்தும் வரும்.

கருத்து, தடித்து, ஏற்படும் இந்த எக்சிமா, பெரும்பாலும் கணுக்கால்கள், முழங்கால்களில்தான் குடியேறி நெடுநாட்களுக்கு வெளியேற மறுக்கும்.

கரப்பான் படை வறண்டிருக்கிறதா? நீர்த்துவத்தோடு இருக்கிறதா? தோல் நோய் குணமாக வேண்டுமா என்பதைப் பொறுத்து, அதைச் சரிசெய்யும் உணவும் மருந்தும் அமைய வேண்டும்.

வறண்டிருக்கும் பட்சத்தில் சற்று நீர்த்துவக் குணமுள்ள சுரை, வெள்ளைப் பூசணி முதலிய காய்கறிகள், புளிப்பில்லாத மாதுளை, வாழை, கிர்ணி, தர்பூசணி முதலான கனிகள், நல்லெண்ணெய் சேர்த்த உளுந்தங்களி, குறைவாக நெய் சேர்த்த உணவு போன்றவற்றை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீர்த்துவமாக இருக்கும்போது மேற்கூறிய உணவுகளைத் தவிர்த்து, பிற காய்கனிகளைச் சாப்பிடலாம். இரண்டு வகை கரப்பான்களுக்குமே கோதுமை, மைதா, மீன், நண்டு, இறால், கருவாடு, கம்பு, சோளம், வரகு, கத்திரிக்காய் போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

வறண்ட கரப்பானுக்கு அருகம்புல் தைலம், நீர்த்துவமுள்ள கரப்பானுக்கு, துவர்ப்புள்ள பட்டைகள் சேர்த்துக் காய்ச்சிய சித்த மருத்துவத் தைலங்கள் வழங்கப்பட வேண்டும்.

நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் சீந்தில் பால் கஷாயம், பறங்கிப்பட்டை, ஈச்வர மூலி, சிவனார் வேம்பு போன்ற மூலிகைகளில் செய்து தரப்படும் சித்த மருந்துகளை, அருகில் உள்ள சித்த மருத்துவரிடம் அணுகிப் பெற்று, தக்க ஆலோசனைப்படி பத்தியமாக சில மாதங்கள் சாப்பிட்டால் கரப்பான் மறையும்.

‘இது வெறும் பொடுகு’ என சில காலம் அலட்சியமாக இருந்து, தொலைக்காட்சியில் சொல்லும் எல்லா ஷாம்புகளையும் போட்டுக் களைத்து, ஆனாலும் போகாத பொடுகை கண்ணாடியில் உற்றுப்பார்க்கும்போதுதான் தெரியும் ‘அது பொடுகு அல்ல.

அதையும் தாண்டி அடையாக இருக்கிறது’ என்பது! மருத்துவரிடம் ஆலோசனை செய்யும்போது நெற்றியும் முன் முடியும் சந்திக்கும் இடத்தில் அடையாய் scalp psoriasis எனும் தோல் செதில் நோய் வந்திருப்பது தெரியும்.

காதுக்கு உள்ளே, காதின் பின்புறம் முழங்கையின் பின் பகுதி, முதுகு, இடுப்பு, தண்டுவடத் தோல் பகுதி, இரு கால்கள் போன்ற பகுதிகளில் சோரியாசிஸ் வரும்.

‘இதனால்தான் வருகிறது’ எனத் தெரியாத நோய்ப்பட்டியலில் நெடுங்காலமாக இருந்துவருகிறது சோரியாசிஸ். நம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் தரும் வெள்ளையணுக்களுக்கு இடையிலான உள்நாட்டுக் குழப்பத்தில் விளையும் இந்த நோய், மன உளைச்சலில் அதிகரிக்கும் இயல்பு உடையது.

பரீட்சை நேரத்தில், காதல் மறுப்பில், கரிசனக் குறைவில், பதவி உயர்வு குறித்த பரிதவிப்பில், புன்னகையைக்கூட ஸ்மைலியில் மட்டுமே தெரிவிப்போருக்கு சோரியாஸிஸ், ‘இல்லை… ஆனா, இருக்கு’ என கண்ணாமூச்சி காட்டும்.

இந்த நோயாலேயே ஏற்படும் கடும் மனஉளைச்சலில் நோய் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரியாது வருந்துவோர்தான் அதிகம். சித்த மருத்துவத் துறை கண்டறிந்த, வெட்பாலைத் தைலம் இந்த நோய்க்கான மிகச் சிறந்த மருந்து.

சரியான புரிதல் இல்லாமல் சில ஆயிரம் ஆண்டுகள் பெரும் மன உளைச்சலை உருவாக்கியது வெண்புள்ளி நோய்.

‘ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு ஒட்டுவாரொட்டியாகப் பரவாது, மரபணு மூலமாக தலைமுறைகளுக்குப் பரவாது, வேறு எந்தப் பக்க நோயையும் தராது’ எனத் தெளிவாகத் தெரிந்து, புரிந்துகொள்வதற்குள் பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்டோம்.

நிறமிச்சத்து ஒன்றின் குறைவால் வெண்புள்ளி நோய் ஏற்படுகிறது. இது தெரியாமல், புரியாமல், சமூகத்தில் பலரை ஒதுக்கிவைக்கும் அவலம், உலகில் வேறு எங்கும் கிடையாது.

லேசான புள்ளிகளைத் தொடக்க நிலையில் அறிந்தவுடன், பூவரசம் பட்டையைக் (நாம் சிறுவயதில் பீப்பி செய்து விளையாடுவோமே அந்த இலைதரும் மரத்தின் பட்டையை) கஷாயமாக்கி 60 மில்லி வரை கொடுத்தால், இந்தப் புள்ளிகள் குறையும் என்கிறது ஆராய்ச்சி.

‘நோனி’ பழத்தின் நம்மூர் ரகமான நுணா மரம் (இன்னொரு பெயர் மஞ்சணத்தி) இலையை சட்னிபோல அரைத்து, நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படும் நுணா தைலத்தைத் தடவி வர இந்தப் புள்ளிகள் மறையும். இன்னொரு விஷயம், இந்தப் பயன் எல்லோருக்கும் கிட்டுவது இல்லை. தவிரவும் இவை முழுமையாகக் குணப்படுத்தும் என்ற ஆதாரமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

ஆனால், இந்தச் சித்த மருந்துகள் எந்தவிதமான பக்கவிளைவும் தராதவை என ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டவை. அருகில் உள்ள சித்த மருத்துவரின், அரசு மருத்துவரின் ஆலோசனைகளுடன் இவற்றை முயற்சிக்கலாம். கூடவே, இரும்புச்சத்துள்ள அத்தி, பேரீச்சைப் பழம் போன்றவற்றைச் சாப்பிடுவதும், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி முதலான புளிப்புள்ள பழங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.

நாள்பட்ட சிகிச்சை தேவைப்படும் இதுபோன்ற தோல் நோய்களில், நோய் கொஞ்சம் ஆரம்பநிலையைத் தாண்டி அதிகரித்துவிட்டால், புள்ளிகளை முழுக்கத் துடைத்தெறிந்து குணப்படுத்தும் சாத்தியம் பல நேரங்களில் கிடையாது.

ஆனால், முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். தோல் நோயின் மேலாக வரும் நுண்கிருமித் தொற்று, மிக அதிகமான அரிப்பு, வைரஸால் வரும் அக்கி போன்றவற்றுக்கு, நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த சிகிச்சைதான் நல்லது.

இருதுறை மருத்துவர்களும் இணைந்து இதுபோன்ற நாள்பட்ட தோல் நோய்களுக்குச் சிகிச்சை செய்வது பாதுகாப்பானது மட்டும் அல்ல, குறைந்த காலத்தில், குறைந்த செலவில், நாள்பட்ட நோய்க் கூட்டத்தின் பிடியில் இருந்து நம்மை வெளியேறவும் உதவும்.

திடீர் தாக்குதலாகத் தடதடவென அரிப்பு வந்து, அரை மணி நேரத்தில் உதடு வீங்கி, கண் சுருக்கம் வந்து, உடம்பு எங்கும் திட்டுத்திட்டாகத் தடிப்பதை ‘அர்ட்டிகேரியா’ என்கிறார்கள். அதை தமிழ் மருத்துவம் ‘காணாக்கடி’ என்கிறது.

காணாக்கடி – தோல் நோய் குணமாக:-
கண்களால் பார்த்திராதபோது, எதுவோ ஒன்று கடித்ததால் ஏற்படும் சருமப் பிரச்னை என்பதால், அந்தப் பெயர். நோயை எதிர்க்க எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டிய வெள்ளையணுக்கள், ‘கூடுதல் அலெர்ட்’ ஆவதால் உண்டாகும் தொல்லை இது.

ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தி அணுக்கள், அதிகப்பிரசங்கியாக தன் சகாக்களிடமே தாக்குதல் நடத்த, உடம்பு தடித்து வீங்குகிறது. எதுவுமே செய்யாவிட்டாலும், இரண்டு மணி நேரத்தில், ‘இப்படி ஒன்று இங்கே வந்ததா?’ எனத் தெரியாதபடி தோல் பழைய நிலைக்குத் திரும்பும். ஆனால், அதற்குள் நம் நகங்கள் அந்தப் பிரதேசத்தில் ஏற்படுத்திய காயத்தில் தடயங்கள் நிலைத்துவிடும். சில நேரங்களில் இந்த அர்ட்டிகேரியா மூச்சுத்திண்றல், சிறுநீரகச் செயலிழப்பு வரைகூட கொண்டு சென்றுவிடும்.

அதனால், இந்த நோய்க்கு சாதுரியமான சிகிச்சை அவசியம். வெள்ளையணுக்களைத் ‘தட்டி’வைத்தோ, ‘கொட்டி’ ஒழுங்காக வேலைசெய்யப் பணிக்கவோ, சரியான நவீன மருத்துவச் சிகிச்சைகளும் சித்த மருத்துவச் சிகிச்சையும் உண்டு.

1 கைப்பிடி அருகம்புல், 2 வெற்றிலைகள், 4 மிளகுகள் சேர்த்து, கஷாயமாக்கி காலையில் சாப்பிடுவதும், மாலையில் சீந்தில் பொடியைச் சாப்பிடுவதும் ‘காணாக்கடி’யைக் காணாமல்போகச் செய்யும் எளிய வழிமுறைகள்.

தோலின் பணியும் பயனும் அறியாது, அதில் மேற்கத்திய முலாம் பூசி (அழகூட்டி என்ற பெயரில்) அதில் நாம் நடத்தும் வன்முறைகள், தோலையும் தாண்டி உட்சென்று தொல்லைகள் தருபவை. சூழலைச் சிதைப்பதில் முன்னணியில் உள்ள அழகூட்டி ரசாயனங்களில் பல, சூழலைச் சிதைப்பதற்கு முன்னர் நம் தோலையும் உடலையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஏறத்தாழ 80,000 ‘அழகுபடுத்திகள்’ உலகச் சந்தையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் போடும் நெயில் பாலீஷில் கலந்துள்ள காரீயம் உண்டாக்கும் அபாயம் பற்றி, பெற்றோர்களுக்குத் தெரியாது.

குளிக்காமல் கொள்ளாமல், கக்கத்தில் மணமூட்டி அடித்து கல்லூரிக்குக் கிளம்பும் இளசுக்கு, அதிலுள்ள ஃபார்மால்டிஹைடு, எத்திலீன் ஆக்ஸைடு வருங்காலத்தில் குழந்தைப் பேறுக்குத் தடை உண்டாக்கும் எனத் தெரியாது.

பின்னர் நள்ளிரவில் டி.வி முன்போ, அல்லது பிரபல குழந்தைப்பேறு மருத்துவர் முன்போ குத்தவைத்து உட்கார்ந்து குறிப்புகள் கேட்க வேண்டியதுதான்.

முகப் பூச்சுக்களில் இருக்கும் தாலேட், கண் அழகுக்குப் பயன்படுத்தப்படும் பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன், சில வகை பிளாஸ்டிசைசர்ஸ், பாரபன்கள் (பெரும்பாலான க்ரீம், ஷாம்புக்களில் சேர்க்கப்படும் பிரிசர்வேட்டிவ் பொருள்), நிறமிகளுக்காகச் சேர்க்கப்படும் வண்ண நானோ துகள்கள் இவை அனைத்தும் தோலின் இயற்கை அரணை உடைத்து உடலுக்குள் உறிஞ்சப்பட்டு, ‘அழகான நோயாளியை’ உருவாக்கக்கூடும் என்கிறது அறம் உள்ள மருத்துவ அறிவியல்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker