என் வாழ்க்கை எல்லா பெண்களுக்கும் ஒரு பாடம்
உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள இதயம் நொறுங்கியது போன்ற கடந்த காலமோ, இனிமையான நிகழ்காலமோ என்னிடம் இல்லை. ஆனால், நீங்களும் கடந்து வந்திருக்கலாம் என்பது போன்ற ஒரு காதல் கதை இருக்கிறது.
காதலுக்கு உருவம் மட்டுமில்லை, துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. நம் வாழ்வில் பிறக்கும் போதே காதலுடன் பிறப்பதில்லை. இடையில் நம் வாழ்வில் இணையும் காதல் நமது வாழ்நாளின் கடைசி நொடி வரை நம்முடன் பயணிப்பதும் இல்லை.
உண்மையில், காதல் என்பது நிரந்தரமானது அல்ல. இதை புரிந்துக் கொண்டால் நீங்கள் வாழ்க்கையை நன்கு படிக்கக் கற்றுக் கொள்ளாம். காதலுக்கு கண்களில்லை என்பார்கள். காதலுக்கு வயது, அழகு, வசீகரம் என்பதும் இல்லை.
எல்லாரும் சொல்வது போல காதல் காற்றைப் போன்றது தான். காற்று நிலையானது தான். ஆனால், ஒரே இடத்தில் அது நிலைபெற்று இருப்பதில்லை, அல்லது ஒரே இடத்தில் நாம் நின்றுக் கொண்டிருப்பதும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
என் வாழ்வில் நான் கடந்து வந்த காதல் பயணம்., மற்றும் அது எனக்கு கற்பித்த பாடம்.
அசிங்கம்!
நான் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த போது கொஞ்சம் கருப்பாகவும், ஒல்லியாகவும் தான் இருந்தேன். பொதுவாகவே யாரேனும் என்னை கண்டால் கண்டிப்பாக அசிங்கம் என்று தான் கூறுவார்கள். நான் கடந்த வந்த விமர்சனங்களில் இதுதான் மிக குறைந்த அளவிலான விமர்சனம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மிகையாக பலர் என் காதுபட பேசியுள்ளனர். ஆனால், அதை எல்லாம் என் மனதிலோ, மூளையிலோ சேமித்து வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.
வெறுப்பு!
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்… என்னை நானே வெறுத்த காலம் அது. வெளியே யாரிடமும் காண்பித்துக் கொள்ள மாட்டேன் எனிலும், உள்ளுக்குள் பலமுறை குமுறி அழுததுண்டு. நான் அசிங்கமாக இருக்கிறேன் என்ற ஒற்றை காரணத்தை தவிர வேறு எந்த விஷயமும் என்னை அவ்வளவாக அழவைத்ததில்லை.
அழகு தான் எல்லாமே…
இதை நான் மிகவும் எண்ணி வருந்த காரணம். என்னை விரும்பிய ஆண் ஒருவனே, எனது உருவத்தை காரணம் காட்டி ஒதுக்கி சென்றது தான். அதிலும், அந்த இளம் வயதில் என்னால் அழுவதை காட்டிலும் வேறு எதையும் செய்ய முடியவில்லை. அப்போது எனது மனதில் தோன்றிய ஒரே எண்ணம், அழகா இருந்தாதா ஆசைப்படணும் போல என்பது மட்டுமே.
ஒத்துவாரது!
அதன் பிறகு தொடர்ந்து வந்த ஆண்டில் என்னை நேர்மையாக ஒருவன் விரும்பினான். எங்களுக்குள் இணக்கமான உறவு இல்லை என்பதை ஆரம்பத்திலேயே நாங்கள் புரிந்துக் கொண்டோம். ஆகையால், நாங்களே இது ஒத்துவாரது என பேசி காதல் உறவில் இணையாமல் தவிர்த்தோம். பேசி, புரிய வைத்து ஒரு முடிவுக்கு வருவது சிறந்த வழி என்பதை அப்போது தான் நான் அறிந்தேன்.
சில மாதங்கள்…
அவன் என் வாழ்வில் கடந்து சென்ற பிறகு… சில மாதங்களும் கடந்தது! அப்போது தான் அவனை கண்டேன். பள்ளிப் பருவத்தில் அல்லது இளம் வயதில் வரும் ஈர்ப்பை தாண்டி… முதன் முதலில் அட! இது தான் காதலா… என மனதுக்குள் ஏதோ அசரீரி ஒலித்தது. அவன் ஒரு கவிஞன். நானே அவனது கவிதையாக இருந்தேன்.
டைரி!
அவனது டைரி பக்கங்களில் எழுத்துக்களாக நான் குடியமர துவங்கினேன். ஓர் கவிதையின் கரு நாம் என்பது எவ்வளவு பெரிய கௌரவம். இந்த வரம் அனைவருக்கும் கிடைத்துவிடுமா என்ன? அதிலும், நான் என் வாழ்நாளில் இப்படி ஒரு நிகழ்வை கனவிலும் எதிர்பார்த்த்து கிடையாது.
இலட்சியம்!
அவனது ஒரே வாழ்நாள் இலட்சியம், என்னை வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்.அது ஓர் அற்புதமான உணர்வு. அதை வார்த்தைகளால் வடிவமைக்க அவனால் மட்டுமே முடியும்.
காதல்!
அவனை என்னால் மறக்கவே முடியாது. அவன், அவனது கவிதைகள் அவனை மட்டும் காதலிக்க வைக்கவில்லை. என்னை நானே காதலிக்கவும் அவன் முதல் காரணமாக இருந்தான். எதற்கெல்லாம் முன்னிரிமை அளிக்க வேண்டும், எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை எனக்கு கற்பித்தான். எனது வாழ்க்கையை மட்டுமல்ல, என்னையும் அழகாக்கினான்.
அப்பறம் என்ன நடந்துச்சு…
எல்லாம் நன்றாக தானே சென்றது, அப்பறம் என்ன எனது வாழ்வில் நடந்தது என்ற கேள்வி எழலாம். ஆம்! எல்லா துவக்கத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி இருக்கிறது அல்லவா. எங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வந்தது. அதற்கு காரணம் அவன் என்னை ஏமாற்றிவிட்டான், அல்லது ஏதேனும் தவறு இழைத்துவிட்டான் என்பதெல்லாம் இல்லை. அவன் காரணமே இன்றி என்னை விட்டு விலகி சென்றான். நான் உண்மையிலேயே அவன் மீது அக்கறையாக இருக்கிறேனா, என்னை விட்டு விலகிய பிறகு, நான் அவனை தேடி செல்கிறேனா. என்பதை அறிந்துக் கொள்ள அவன் வெறுமென என்னை விலகி சென்றான்.
உண்மையான அக்கறை!
அவன் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால் என்னைவிட்டு விலகி சென்றிருக்க மாட்டான். என்னை வைத்து இப்படி விளையாடியிருக்க மாட்டான். நாங்கள் இருவருமே எங்கள் பாதையில் சரியாக தான் இருந்தோம். ஏன்? எதற்காக? இப்படி ஒரு முடிவு வர வேண்டும். யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து போயிருக்கலாம். இருவர் பக்கமும் அவரவர் கூறும் கருத்தில் ஒரு நியாயம் இருந்தது. அதில், கொஞ்சம் ஈகோவும் இருந்தது.
என்னை நானே…
உங்களிடம் நான் கூற விரும்புவது எல்லாம்… நான் ஒரு பெண்… இந்த உலகிலேயே என்னைத் தவிர வேறு யாரும் என்னை இவ்வளவு விரும்ப முடியாது என்ற எண்ணம் கொண்ட மிக அழகான பெண்.
இதை படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் கூற விரும்பும் ஒரே அறிவுரை என்னவெனில், நீங்கள் என்ன செய்தாலும், சரி, யாராக இருந்தாலும் சரி, உங்கள் தோற்றம் எப்படியாக இருந்தாலும் சரி, உங்களுக்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.
உங்களை நீங்களே விரும்ப வேண்டும். என்னால் அந்த உறவை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், எனது தைரியத்தை என்னால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அவன், என்னை எனக்கே பரிசளித்து சென்றான். அதற்கு நான் எப்போதும் அவனுக்கு நன்றிக் கடன் பெற்றிருக்கிறேன்.
ஆணுக்காக வேண்டாம்…
ஒரு ஆணுக்காக உங்கள் உணர்வுகளை, காதலை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களுக்காக உங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டியது… நீங்கள் விரும்புவது, தானாக அதுவே உங்களை தேடி வரும். நான், எனது வாழ்வில் அதை கண்டுள்ளேன்.
வெறுக்காதீர்!
ஒல்லி, குண்டு, நெட்டை, குட்டை, என ஏதேனும் காரணம் கொண்டு உங்களை நீங்களே வெறுக்க வேண்டாம். இந்த பட்டியல் மிகவும் நீளமானது. கூந்தல் நீளமாக இல்லை என வருத்தப்படும் பெண்கள் எல்லாம் இருக்கிறார்கள். அழகு முகத்தில் இல்லை அகத்தில் தான் இருக்கிறது என்பதை நீங்களாக நம்ப வேண்டும். உங்களில் அதை கண்டெடுக்க வேண்டும்.
உணர்ச்சிவசம்!
பெண்கள் செய்யும் பெரிய தவறே உணர்ச்சிவசப்படுவது தான். காதலில் விழுந்தால், ஏமாற்றம் அடைந்தால், ஒருவர் தொந்தரவு செய்தால் என காரணமே இன்றி, மற்றவர் செய்யும் தவறுக்கு பெண்கள் மனம்வருந்தி உணர்ச்சிவசப்பட்டு அழுதுக் கொண்டிருப்பார்கள். முதிர்ச்சியுடன் நடந்துக் கொள்ளுங்கள்.
கடைசி ஆண்மகனா?
இந்த உலகில் இருக்கும் கடைசி ஆண் மகனல்ல அவன். அவன் உங்களை விட்டு செல்வதாலோ, காதல் ப்ரேக்-அப் ஆனதாலோ உங்கள் வாழ்க்கை முற்றுபெற போவதில்லை. இதை எல்லாம் என் நிஜ வாழ்வில் கடந்து வந்த அனுபவத்தில் கூறுகிறேன். ராஜா ராணி படத்தின் டைட்டில் கார்டில் வரும் வாசகம் போன்றது தான். ஒரு காதல் தோல்விக்கு பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது. ஒரு காதல் தோல்விக்கு பின்னால் இன்னொரு காதல் இருக்கிறது.
அத்தியாயம்!
வாழ்க்கை என்பது பல அத்தியாயங்கள் கொண்ட புத்தகம். ஒரு அத்தியாயம் சோகமாக முடிந்துவிட்டது என்பதால் புத்தகத்தை மூடிவிடாதீர்கள். உங்களது சந்தோஷம் அடுத்த அத்தியாயத்தில் இருக்கலாம். எனவே, உங்கள் சந்தோசத்தை நீங்களே இழந்துவிட வேண்டாம்.